நூற்றாண்டைக் கண்ட நுண்மாண் பெரும் புலவர்!
=============================================
நான் தொடக்கப்பள்ளி மாணவனாக இருந்தபோதே, முதுபெரும் புலவர் பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் அவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக உயர்நிலை பள்ளியில் பழகியிருக்கிறேன்.
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நுண்ணறிவாளர் என்று, புலவர் உலகம் போற்றிய தகைமையாளர், மறைந்த புலவர் வரிசையுள் ஒருவரானார் என்பது, தமிழ் உலகத்தின் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. பேராசிரியரின் திருமகன் அமெரிக்க நாட்டில் வாழும் பேரறிவாளர் திரு.இராம.பனையப்பன் என் நண்பராகத் திகழ்பவர்.
தம் துணைவியார் பால் அவர் காட்டிய நெகிழ்ந்த பரிவை, இன்றும் நான் நினைந்து போற்றுகிறேன். பனையப்பன் அவர்களைக் கண்டு பல்லாண்டுகள் ஆயிற்று. பனையப்பனின் துணைவியார் என் மகன் அருள் மீது பரிவு காட்டி, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்று ஆர்வம் காட்டியதையும் மறப்பதற்கில்லை.
பேராசிரியர் லெ.ப.கரு. அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஓர் ஆலமரம். அந்த விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்கள், இன்று பெரும் பேராசிரியர்களாக மிளிர்கிறார்கள்.
தேர்வு, பாடத்திட்டம், தேர்வுத் தாள் திருத்துதல், ஆட்சிக்குழு, பாடத்திட்டக் குழு, பாட நூல் தெரிவுக்குழு என அனைத்துக் குழுக்களுக்கும் தலைமை தாங்கிய ஒரே பேராசிரியர் , பேராசிரியர் லெ.ப.கரு அவர்களாவார்.
இயற்பெரும் புலவராகத் திகழ்ந்தும், இசைப் புலவரோடு பழகிய திறத்தால், தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில், அறுபதாண்டுகளுக்கு மேல் தலைவராகத் திகழ்ந்தவர்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், பேராசிரியர் லெ.ப.கருவை நினைந்து, தம் ஆசிரியர் என்றும், ஆட்சித்திறமை பெரிதும் உடையவர், பாடம் சொல்லும்போது, இலக்கணங்களை எடுத்துக்காட்டுவதோடு, பொருத்திக்காட்டும் புலமை வளம் கொண்டவர் என்றெல்லாம் எழுதினார்.
எந்தையாருக்கு நண்பராகத் திகழ்ந்த பேராசிரியர் லெ.ப.கரு. அவர்களைச் சென்னை வந்த பிறகெல்லாம், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நேரில் கண்டு பேசுவதை நான் கடனாகக் கொண்டிருந்தேன்.
என்னைக் காணும்போதெல்லாம், தந்தை அன்போடு தழீக்கொண்ட அன்பின் உருக்கத்தை நான் என்றும் மறப்பதற்கில்லை.
சிலமுறை அவர் என்னைக் கண்டபோது, கண் கலங்கியதற்குக் காரணம் எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும். நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த நுண்மான் நுழைபுலம் கொண்ட இயலிசைப் புலமை வாய்ந்த ஈடில்லாப் பேராசிரியரை என் நினைவு எப்போதும் வருடிக்கொண்டே இருக்கும்.
பேராசிரியர் பெரும்புகழ் வெல்க! நூற்றாண்டைத் தாண்டிய முதுபெரும் இயலிசை வேந்தர்! லெ.ப.கரு. அவர்கள் புகழ் வெல்க!
அண்ணாமலை நகரின் ஆலமரம் வேரோடு வீழ்ந்ததே! என்ற விம்மல் என்னை மேலும் எழுதத் தடுக்கிறது.
1944 சனவரி, இருபத்து மூன்றாம் நாள் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் சார்பாகத் தமிழ்இசை மாலை நேர கல்லூரி தொடங்கப்பெற்றது. இராவ்பகதூர் டி. எம். சின்னையா பிள்ளை அவர்கள் தலைமையில், திவான்பகதூர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை, திரு. மு. அ. சிதம்பரம், இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி, திருப்பாம்புரம் டி.என். சாமிநாதப் பிள்ளை உள்ளிட்ட பலர், இக் கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றனர்.
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment