திருமந்திர ஏடு முடிந்தது!
========================‘
புகழ் வாய்ந்த தலைமைச் செயலாளராகவும்,, அறிவார்ந்த ஆங்கிலம், தமிழ்க் கட்டுரைகளை எழுதும் கலைத் திலகமாகவும் திகழ்ந்த பெருந்தகை டி.வி.வேங்கடராமன் அவர்களின் மறைவு, நோயோடு போராடித் தோற்பதில் முடிந்தது.
தலைமைச் செயலாளரிடத்தில் நான் பணியாற்றியவன். கடுகளவும் கடுகடுப்பைக் காணாத தலைமையாளராக மிளிர்ந்தார்.
எந்த நிலையிலும், அவர் தடுமாற்றம் கொண்டதில்லை. தலைமைச் செயலகத்தில் காண வருபவர்களுக்கு வரிசை முறை உண்டு. வரிசை முறையால், முதுநிலை அலுவலர்கள் காத்திருக்க நேர்வதுண்டு.
ஆனால், தமிழ் படித்த மாணவன் என்ற ஒரே தகுதியால், எந்த நேரத்திலும் நீங்கள் எப்போதும் வரலாம் என்று சொன்ன பெருந்தகைமை அவரிடத்தில் பேரொளியாக வீசியது.
தம் துணைவியார் மறைந்ததை நினைத்து, அவர் உடல் நலிவுற்ற முதல் நாள் முதல், நிறை நாள் வரை ஆங்கிலத்தில் நாட்குறிப்பைக் கண்களில் நீர் மல்க எழுதியதை என்னிடம் அளித்துப் படிக்கச் சொன்னார்கள்.
எதையும் குறித்த நேரத்தில் சீரான வகையில் செய்து முடிப்பது அவருடைய திறமையாகும். தமிழ் நாடு போக்குவரத்துப் பேருந்துகளில் திருக்குறளை எழுதுவதற்காக 200 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து முதல்வரிடம் இசைவு கேட்டவர்.
உள்துறைச் செயலாளராக இருந்தபோதும் பதற்றமே காட்டாதவர். தமிழ் ஆர்வத்தோடு திருமந்திரத்தில் குறைந்தது 300 பாடல்களை மனனமாகச் சொல்லி உரை விளக்கம் சொல்வதைப் பணியில் இருந்தபோதே கற்று வந்தவர்.
திருமந்திரச் செல்வர் என்றே அவரைத் தமிழுலகம் அழைத்தது. அம்சா என்ற அறிவரங்கத்தைத் திங்களுக்கு ஒருமுறை நடத்தியதோடு ஆண்டுக்கு ஒருமுறை ஆர்வலர்களை அயலூர்களுக்கு அழைத்துச் சென்று சிந்தனை அரங்குகளில் தம் நேரத்தைச் செலவிட்டார்.
நண்பர் மீது காட்டிய பரிவு, அவர் வரலாற்றில் முழுமையாகவே அமைந்தது.
இப்போதைய தலைமைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்து, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையில் இணைச் செயலாளராக ஒருமுறை அமர்த்தம் பெற்றார்கள். தலைமைச் செயலாளர் என்னிடத்தில், திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்களின் ஆட்சித் திறமையையும் அறிவுக்கூர்மையையும் அவருடைய தந்தையாரின் தனிப்பெரும் சீர்மையையும் எடுத்துக்கூறினார்கள்.
இன்னும் சில திங்களுக்குள்ளேயே அவர் நிதித்துறைக்கு மாற்றம் பெறுவார், நம் கண்ணெதிரிலேயே தலைமைச் செயலாளராகப் புகழோடு பொலிவார்கள் என்று பாராட்டிக் குறிப்பிட்டார்கள்.
இன்றும்கூடத் தலைமைச் செயலாளர் தம் ஆயிரம் பணிகளில், என்னைக் காணும்போதெல்லாம் நான் தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்தவராயிற்றே என்று நெகிழ்ந்து கூறுவார்கள்.
திரு.டி.வி.வி. அவர்கள், திருமந்திர உரையைத் தொடர்ந்து எழுதி வந்தார்கள். வாழ்நாள் முழுவதும் பயனுடைய நாளாகக் கழித்த பண்பாளர், இன்னும் சில ஆண்டுகள் இருப்பார் என்று ஆர்வத்தோடு காத்திருந்தோம்.
எனக்கு உடல் நலமில்லை என்று கேட்டு, தனக்குத் துணையிருந்த நிறுவனத்தின் செவிலியரை அனுப்புமாறு செய்ததை நான் இப்போது எண்ணினாலும் என் கண்கள் கலங்குகின்றன.
முதலமைச்சர்கள் மூவரிடத்திலும் முறுவல் மாறாமல், அரிய பொறுப்புகளை ஏற்று, பெரிய கடமைகளை நிறைவேற்றிய பெருமை அவருடைய தனியழகாகும்.
பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே
(152)
என்ற திருமந்திரத்திற்கு அவரே பொருளாகிவிட்டார்.
எளிமையும், மேன்மையும், ஈடற்ற தகுதியும் இணைந்திருந்த பெருமகனார் மறைந்தது, இவ்வுலகின் இயல்பை வெல்ல முடியாது என்பதற்கு ஒரு நிகழ்வாக அமையும் போலும்!
—– ஔவை நடராசன்

Add a Comment