முதிர்ச்சியும் கனிவும் கொண்ட முக்தா சீனிவாசன்
===============================================
கலை இலக்கிய அரசியல் வாணராக மிளிர்ந்த முக்தா அவர்களை மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களோடு பழகிய நேரங்களில் கண்டு மகிழ்ந்த தொடர்ச்சி பல்லாண்டுகளாக வளர்ந்தது. எல்லாம் தெரிந்தவர் எவரையும் புரிந்தவர் என்கிற தகுதிப்பாடு மிகுந்தவர்.
என் தந்தையாரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கண்டு உரையாற்றியதோடு, அருட்செல்வர் இல்லத்திலும் கண்டு பேசினாராம். என் தந்தையாரைப் பற்றி அவர் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். அவருடைய இல்லத்துக்கே நான் ஒருமுறை சென்று உண்டு திரும்பியிருக்கிறேன். என் மகன் கண்ணனின் மாமனாரையும், அவர் மரபு முழுவதையும் தெரிந்தவர். வானளாவிய வாய்ப்புகள் வாயிற்கதவை வந்து தட்டிய பிறகும் கதவேனோ திறக்காமலே முடிந்தது.
திருச்சிராப்பள்ளியில் ஒரு கல்லூரி நூற்றாண்டு விழாவில் முக்தாவும், திருக்குறளாரும், நானும் பங்குகொண்டோம். விழா காலை 11 மணியளவில் தொடங்கியது. நண்பகல் வரை நன்றாகவே சென்றது. முக்தா அவர்கள் தனித்தமிழைப் பழித்தது போல 10 -15, ஆங்கிலச் சொற்களைக் கலந்து தன்னுடைய பேச்சில் பேசினார். விருந்தில் அவியலாக இருந்தது. திடுமென்று திருக்குறளாருக்கு அவரை நான் அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். கடுங்கோபம் வந்துவிட்டது சிவந்து கனிந்த முகம் கறுத்துப் படபடத்தது. என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறாய் ? என்று நாத்தடிப்பாகவே வெகுண்டு நின்று பேசினார். முக்தாவும் விட்ட பாடில்லை. இடையிலிருந்து நான் பெரிதும் தவித்தேன். நண்பகலாயிருந்ததால் கூட்டம் திடுமென முடிந்தது.
முக்தா திரும்பிப் பார்க்காமலேயே விரைந்து சென்றுவிட்டார். சில ஆண்டுகள் கழித்து இருவருமே ஏன் அவ்வாறு நடந்தது என்று தெரியாமல் கலங்கினார்கள். விட்டுக் கொடுக்கத் தெரிந்தவர்கள் என்றிருந்த போதும் இப்படிச் சில வேண்டாதவைகள் நடந்து விடுகின்றன. பிறகு பலமுறை முக்தா என்னோடு பரிவோடு பழகி வந்தார்கள்.
நூல்களைப் படிப்பதிலும், அரிய சிந்தனைகளைத் தொகுப்பதிலும், தன் பழுத்த அழுந்தல்களைப் பகிர்ந்து கொள்வதிலும் கனிந்த பெருமகனாகத் திகழ்ந்தார்.
இன்னும் இருந்திருக்கலாம் என்று எண்ணும் போது பழுத்த கனி விழுந்துவிட்டது.
முக்தா என்றால் முடியாத முத்து என்று பொருள்.
விலை மதிக்க முடியா முத்து.
வித்தகர்களையெல்லாம் தன் விரலசைவில் வைத்திருந்த முத்து
அந்த முத்துமாலை நினைவு நிலைத்திருக்கும் .
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment