POST: 2018-06-20T09:21:37+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-241
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-2)

அறந் தானோ ? இறைவா!
=============================
(நாரண – துரைக்கண்ணன்)
////////////////////////////////////////////////////////////

ஐயகோ! என்ன சொல்வேன் ?
ஆற்றொணாக் கொடுமை! அந்தோ !
பையவே சுழன்ற காற்று
புயலாக மாறி நம்மைக்
கையறவு கொள்ள வைத்த
கொடுமையைக் கூறப் போமோ?
வையத்தில் விளைந்த பச்சைப்
பயிரெலாம் பாழாய்ப் போச்சே !

‘வான் மழை அமிழ்த’ மென்றே
வள்ளுவர் குறளில் சொன்னார்;
தேன்துளி போன்று வானம்
சொரியாது புயலாய் மாறின்,
நாற்றிசை நடுங்கி நிற்கும்;
நஞ்சாகி நாசஞ் செய்யும்;
மாண்பயன் கெட்டே போகும்;
மக்களும் மாண்டு போவார்.

இருநாட்டில் இதுதான் கண்டோம் ;
என் னன்ன கொடுமை கேட்டோம்?
தருநிகர் தஞ்சை, நாகை,
தென் திசை முற்று மாகப்
பெரும்புயல் காற்று வீசிப்
பல்பொருள் நாச மாக்கிக்
கருங்கடல் போல நஞ்சைக்
கொட்டியே கெடுத்தது; அம்மா!

பெய்துமே கெடுக்கும் வானம் ;
பெய்யாதுங் கெடுக்கும் என்பார்;
கொய்கதிர் சூறைக் காற்றில்
கொத்தாகக் கொட்டிப் போச்சே!
மெய்யாக மழைதான் இன்று
மேதினி குலுங்க வைத்து
நைவித்த துயிர்கள் தம்மை;
நாசமே பலவாய் ஆச்சே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *