பிடித்த பத்து
————————
அடுக்கடுக்கான கேள்விகள் பிடிக்கும்!
————————————————————————
அவ்வை நடராஜன், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை முதல் அரசு செயலர். தமிழுலகத்தின் சிறந்த பேச்சாளர். தமிழ் தொடர்பாக எந்த ஐயத்தினையும் விளக்கமாகச் சொல்லக்கூடிய இவர், தனக்குப் பிடித்த பத்து பற்றி கூறுகிறார்:
பழைய நூல்களைப் படித்தல்:
——————————————————-
படித்துக் கொண்டிருப்பதுதான் என் பொழுதுபோக்கு, படிப்புக்குச் சிறிது நேரம் தடையுண்டானால் பழைய நூல்களை வரிசையாக அடுக்குதல் என்பது என் அன்றாட வேலை. அங்கும் இங்கும் சிதறிய நூல்களை அடுக்குவதே ஆர்வமான வேலையாகி விட்டது. தூங்கப் போவதென்றாலும் என்னைச் சுற்றி நான்கைந்து நூல்களாவது விரித்தபடி கிடக்கும். அடிக்கடி நடந்த போரினால் படைக்கருவிகள் உடைந்தும், உருக் குலைந்தும் கிடந்த காட்சிதானே ஒளவையாருக்குப் பிடித்த காட்சி என்னும் புறநானூறு பாடல்தான் என் நினைவில் நிழலாடும். ஆங்கிலம், தமிழ், பழமை, புதுமை என்ற பல நூல்களை விட்டுவிட்டுப் படிப்பேன். தொடர்ச் சியை எப்போதும் விட்டுவிடமாட்டேன். இந்தப் பழக்கம் என் தந்தையார், உரைவேந்தர் ஒளவை துரைசாமி கற்றுத் தந்த பாடமாகும். எந்த நாட்டுக் குப் போனாலும், அந்த நாட்டிலிருந்து பத்துப் புத்தகங்களையாவது அண் ணனுக்குப் படிப்பதற்காக என்று என் இனிய இளவல் நயவுரை நம்பி ஜெகத்ரட்சகன் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். அதுபோலவே, நல்லி குப்புசாமி செட்டியாரும், ஸ்ரீராம் நிறுவனத் தலைவர் தியாகராசனும் பல நூல்களை நான் படிப்பதற்காக அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண் டிருக்கிறார்கள்.
வீட்டுச் சாப்பாடு:
——————————–
நகரங்கள், ஊர்கள், கூட்டங்கள் என்று எங்கே சென்றாலும் உணவுக்கு மட்டும் அணுவளவும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. 85-ஆம் அகவையைத் தொட்டுக் கொண்டிருந்தாலும், குழந்தை நல மருத்துவரான என் அருமைத் துணைவியார் தாரா நடராசன் உடனில்லாமல் பரிமாறாமல் என்னால் சாப்பிடவே முடியாது. என் மனைவியும் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள்.
நண்பர்களோடு உரையாடுதல்:
———————————————————-
ஓய்வில்லாமல் உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு உயிரோட்டம் இருப்பதாக நம்புகிறேன். அடுக்கடுக்கான கேள்விகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு காலத்தில் பட்டிமண்டபம் முடியும்போது, ‘நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். முடிவில், அங்கே எனக்கு என் துணைவியாருடன் வழக்காடு மன்றம் காத்திருக்கிறது’ என்று என் பேச்சை நிறைவு செய்வேன். டாக்டர் பிரியா இராமச்சந்திரன் வாரத்திற்கு ஒருமுறை என் இல்லம் வந்து கம்பர் கவிநயத்தைப் பற்றி திறம்படப் பேசிச் செல்வார்.
அருள் கேட்கும் சந்தேகம்:
————————————————
என் மக்கள் மூவரில் அருள் தான் எங்களருகில் இருப்பவர். அவர் வீட்டில் இல்லாதபோது நூறு முறையாவது தொடர்பு கொள்வார். தான் எழுதும்போதோ, பேசும்போதோ, ஏதாவதொன்றைப் பகிர்ந்து கொள்ளும் நேர்வில் சந்தேகம் கேட்பது அவர் வழக்கம். எனக்குச் செவியில் அந்தக் கேள்வி செந்தேனாக இனிக்கும். பறிப்பதற்கு யாரும் இல்லையே என்று பழமரம் சரிந்து காத்திருப்பது போல் அவரது வினாக்களுக்கு விடை சொல்வதும், நான் படித்ததை மீண்டும் நினைவில் கொண்டு வருவதும் எனக்கு மிகவும் பிடித்த பொழுதாகும்.
அந்தியில் வரும் தொலைபேசிகள்:
—————————————————————
அயல் நாட்டில் வாழும் எங்கள் புதல்வர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் கண்ணனும், தென்ஆப்பிரிக்காவிலிருந்து டாக்டர் பரதனும் நாள்தோறும் மாலை நான்கு மணியடித்தால் தவறாமல் எங்களிடம் பேசுவார்கள். மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை இது நிச்சயம் நடக்கும். ஆறு மணியானால் விஜய் தொலைக்காட்சி குறுந்தொடர்கள் எங்களை அழைக்கும். உலகம் இப்படி இருக்கிறதே என்று தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டு நகைப்பது பிடித்த பத்தில் ஒன்றாகும்.
கலைஞரை நினைவு கூர்தல்:
—————————————————–
அருட்செல்வரிடம் நான் பணியாற்றியிருந்தாலும், தமிழுலகத்திற்கு அரசு வழியில் வாய்ப்பளித்து வாழ்வித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். ஒவ்வொரு திங்களிலும் மூன்றாம் நாள் வந்தால் கலைஞரைக் காண்பது என்ற வழக்கத்தை நாற்பதாண்டுகளுக்கு மேல் வைத்திருந்தேன். 2015-இல் நான் நோயால் நலிந்தேன். அன்று முதல் ஒவ்வொரு திங்கள் மூன்றாம் நாள் வரும்போதும் நான் கலைஞரைக் கண்டு நெகிழ்ந்த காட்சிதான் என் நினைவில் படமாகப் பதிந்து எனக்குப் புத்துணர்வு தருகிறது.
அயலகத் தமிழர்கள்:
—————————————
அலைகடலுக்கு அப்பால் வாழ்வார் அகத்தினில் அன்பால் சூழ்வார் என்று பரிவு பாராட்டுவதில் அயலகத் தமிழர்களுக் குக் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எல்லையில்லை . வாரந்தவறாமல் ஒருவர் இருவர் கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், சமய விளக்கத்தை எழு திக் கொண்டு வந்து எனக்கு இயலாத நிலையிலும் அணிந்துரை பெற்றுச் செல்வது எனக்குப் பிடித்த பணியாக அமைகிறது. லண்டனிலிருந்து வாரந் தவறாமல் வழக்கறிஞர் சிறீகந்தராசா உடல்நலம் வினவுவதோடு, இலக்கியச் சாரலில் என்னை மிதக்க வைப்பதும் எனக்கு இன்பம் தருகிறது.
தொலைப்பதும் தேடுவதும்:
————————————————–
என்னை எப்போதும் இயங்க வைக்கிற செயல் தொலைப்பதும் தேடுவதுமாகும். ஒரு நாளைக்கு நூறு முறையாவது கண்ணாடியைத் தேடுவேன், கைபேசியைத் தேடுவேன், புத்தகக் குவியலில் ஏதேனும் ஒரு புத்தகத்தில் நான் கோடிட்ட பகுதியைத் தேடோ தேடென்று தேடுவேன், தேடிய பொருள் கிடைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட்டுச் சொல்ல முடியாது. ‘அச்ச நடுக்கத்தால் ஏற்படும் அவதி, மறதியை நுண்மையாக வகுத்துக் காட்டும் சோதனைகளை இப்போது எங்கள் மருத்துவக் கல்லூரியில் செய்கிறார்கள்’ என்று ஆஸ்திரேலியாவில் மருத்துவம் படிக்கும் என் பெயர்த்தி தாரா நிகிதா எழுதிய கட்டுரை எனக்குப் பிடித்தது. ஆஸ்திரேலியத் தேசியக் கல்வி நிறுவனத்தின் வாயிலாக முதற் பரிசு அந் தக்கட்டுரைக்குக் கிடைத்தது முத்தான பத்தாகும்.
வைரமுத்துவின் கருத்துமழை:
——————————————————–
கவிப்பேரரசு வைரமுத்துவை, அவருடைய கல்லூரி நாள்களிலேயே நான் நன்கறிவேன். அவருடைய வளர்ச்சியின் ஏணிப்படிகளையும் நான் எண்ணிப் பார்த்தவன். அப்போது பார்த்த பெருமிதம், அறிவாற்றல், அழகிய காட்சிகளில் பாகாய் உருகும் பாட்டு மனம், தன் பிறந்த ஊரை மறந்து போகாமல் எப்போதும் நினைத்து நெகிழும் பாங்கும், எனக்குப் பெரிதும் ஈர்ப்பைத் தரும். வாரந்தவறாமல் என் னோடு அரை மணி நேரம் அரசியல், தமிழியல், எதிர்காலத் தமிழகத்தைப் பற்றிய ஏக்கம் ஆகியவை பற்றித்தான் எப்போதும் பேசுவார். அந்தப் பொழுது அவர் எனக்குச் செய்கிற செலவு பெரிது தான். .
மருத்துவர் சண்முகசுந்தரம்:
—————————————————
புதுவையில் கம்பர் விழாவில் நான் பேசி முடித்ததும், சென்னைக்குப் புறப்பட முயன்றபோது மயங்கி விழுந்தேன். அந்தக் கணமே என்னை இதய மருத்துவத் திலகமாகத் திகழும் மருத்துவர் சண்முகசுந்தரத்திடம் என் குடும்பத்தார் விரைந்து சேர்த்தார்கள். 25 ஆண்டுகளாக அவர் தான் எங்கள் குடும்ப மருத்துவராக இருந்து வருகிறார். அவர் எனக்குப் பிடித்தமானவர், அவருடைய பிடியிலிருந்து நான் விலகியதில்லை .

Add a Comment