களம்பல கண்ட கைவேல் !
=====================
கலைஞர் 93ம் பிறந்தநாள் விழா மலர்
03.06.2016
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
==========================
நான் அந்தக் கலைஞரைக் கழகப் போர்வாளைப் பெருமித நெஞ்சால் இமயத்தையும் இடித்துத் தள்ளும் தலைவர்க்குத் தலைவரை இன்றல்ல அறுபதாண்டுகளாகக் காண்கின்றேன்.
கையில் கொடிதாங்கிக் கண்ணில் கனல் ஏந்தி நாடிவந்த இந்திப்பெண்ணே நீ தேடி வந்த நாடு இது அன்று, ஓடிப்போ, எமைவிட்டே எனப் படைவரிசையோடு போர்க் குரலிட்ட அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு துணி வாங்கலியோ, துணி வாங்கலியோ? கைத்தறித் துணி வாங்கலியோ? என ஓங்கிக் குரலெழுப்பி விற்பனை செய்து நெசவாளர்கள் நெஞ்சில் பால் வார்த்த அந்த வீரக் கலைஞரை இன்றும் பார்க்கின்றேன். தால்மியாபுரமா இது? தமிழ்நாட்டுக்குப் பொங்கும் தமிழ்ச்சொற்கள் எங்கும் தங்கி நிற்கும் இது அடுக்குமா? வெல்லத் தமிழில் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டாமா? எனத் தண்டவாளத்தில் தலை வைத்துத் தொடர் வண்டி புறப்படும்போது கூட இடர்களோ, தடைகளோ என்னை என்ன செய்யும்? என்று தலைவைத்துப்படுத்த அந்தத் தானைத் தலைவனைக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். எத்தனைக்குப் பிறகு தான் இந்தக் கலைஞர் அப்படியே நம் கண்முன்னே காட்சி தருகின்றார். ஏ அப்பா? அவர் கடந்து வந்த காட்டாறுகள், அவர் தாண்டி வந்த நெருப்பலைகள் எத்தனை எத்தனை ! பாளைச் சிறையில் தனியறையில் அடைபட்டபோதும் தென்னம்பாளையாய்ச் சிரித்த தீந்தமிழ்க் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். ஒன்றா இரண்டா? ஒன்பதா பத்தா? எண்ணிப்பார்த்தால் பதின்மூன்றாம் முறையிலும்கூடத் தேர்தலில் வெற்றி மாலையோடு தமிழகத்தைச் சுற்றிவந்து சூளுரைத்த அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். கல்லூரி மாணவனாக கூட்டங்களில் இடிபடப் பராசக்தி என்றவுடன் கையெடுத்து வணங்குகிற காலத்தை மாற்றி, இதோ பார் ஏழைகளின் கண்ணீர், எளியோரின் வியர்வை, ஏமாளிகளின் இரத்தம், ஆயிரம் கண்ணுடையவளே, இந்த அவலங்கள் உனக்குத் தெரிகிறதா? என்று பராசக்தியைப் பார்த்துப் பகுத்தறிவு இளைஞன் கோயிலில் நின்று கேட்பதை எழுதிக்காட்டிய அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். அந்தப் படத்திலே நடித்தவரை நளினமான கலையுலகத்தின் நடிகர் திலகம் என்று நானிலம் புகழ வைத்த அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். அவரின் எழுத்தை இரவல் பெற்றவர்கள் எல்லாம் படைப்பாளிகள். அவர் சிந்திய சிந்தனைகளைச் சிறுகதைகளாக்கியர்கள் சிறுகதை மன்னர்கள், அவரின் எழுத்தை எடுத்தாண்டவர்கள் எல்லாம் பேராசிரியர்கள். அவரின் எழுத்தை மனப்பாடம் செய்தவர்கள் எல்லாம் பேச்சாளர்கள். கற்பனைகளையெல்லாம் கைநோக எழுதிப்பார்த்தவர்கள் கவியரசர்கள், இத்தனைப் புகழுக்குரிய அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். குப்பையில் வதிந்தோரைக் கோபுரத்தில் ஏற்றியதுபோல குடிசை மாற்று வாரியங்கள், சுயமரியாதை என்பது ஒருவனுக்குரியது அல்ல. அது உனக்கும் எனக்கும் உள்ளது என்ற பெரியாரின் தனிப்பெரும் மாணாக்கராகத் திகழ்ந்த அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். காது கொடுத்துக் கேள் தம்பீ ! என் கருணாநிதி கழகத்தின் தங்கக் கம்பி ! ஏதும் அறியாத் தமிழர் வாழ்வை எனக்குப்பின் சீர்படுத்தும் செந்தமிழ் மறவன் அவர்தான் ! என அண்ணாவால் புகழாரம் சூட்டப்பட்ட அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். கை ரிக்சா ஒழிப்பு, இரவலர் ஒழிப்பு, மகளிர் சுய உதவிக் குழு, மகளிர் காவலர்கள் எனத் திட்டங்கள் தீட்டித் திராவிடத்தைச் செழுமையாக்கிய அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். தொடாதே ! தொட்டால் தீட்டு, தூர விலகு என மேல்சாதியால் கீழ்ச்சாதி ஆக்கப்பட்டவர்களுக்குக் கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற வரம் அளித்து நெஞ்சுக்கு உரமளித்து கோடித்தமிழர்களுக்கு வாழ்வளித்த ஈடில்லாப் புகழ்பெற்ற அந்தக் கலைஞரை இன்றும் பார்க்கிறேன். ஆம் அந்தக் கலைஞருக்கு இன்று அகவை 94 (தொண்ணூற்று நான்கு).
கொதிக்கும் வெயிலும், கோடையின் கொடுமையும், குடும்பத்தின் சுமையையும், உறவினர்கள் சூழலையும், எண்ணி இமைநோக எழுதும் கடமையையும் தாங்கிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சேலத்திலும், கோவையிலும், சென்னையிலுமாகக் கலையுலகம், செய்தி உலகம், அரசியல் உலகம் என்று மூவுலகும் அளந்து ஓங்கி உலகளந்த உத்தமனாக இளமையில் சுற்றித்திரிந்தவர் அந்தக் கலைஞர். அவரை இன்றும் அப்படியே பார்க்கிறேன்.
இன்றைய நிலையில் நெடிய வாழ்வு என்பது ஒரு பெரிய சோதனையாகும். தந்தை பெரியார் தமக்கிருந்த சூழலையும் வாழ்வியலையும் ஒரு தனி வளையமாக வைத்துக்கொண்டு காலையும் மாலையும் நோய்களின் அவலங்களுக்கு ஆட்பட்டுக் காலந்தள்ளினார். குடும்பம் என்ற சோதனைப்புயல் அவருக்கு இல்லை.
பெரியார்கூட நான் கடவுள் இல்லை என்கிறேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவரைத் தாண்டி ஒரு நாள் கூடுதலாக வாழ்ந்தால் போதும் என்று பிடிவாதத்தோடு வாழ்ந்தார். கலைஞரோ காலையில் மகிழ்ந்தால் மாலையில் வருந்துவேன். ஒருவேளைக்கு மறுவேளை இடைவிடாமல் கலையுலகிலும், அரசியல் உலகிலும் கட்டுவிரியனும் தேளும் கொட்டியபடி இருந்தாலும், இடர்ப்பாடுகளுக்கு இடையில் கட்சித்தலைமையின் கட்சிக்கொடியைக் கையில் பிடித்தபடி அவர் கண்ட களங்கள் ஆயிரமாயிரம். இவர் பெரியார் பெற்ற பேரிடிகளை வேறு வகையில் ஏந்தித் தாங்கியவர்.
அகவை என்பது அங்கங்களுக்கு மட்டுமே உரியது. அங்கங்கள் தளர்ச்சியாவது இயல்பு. அது அகத்துக்கு உரியது அல்ல. தொண்ணூற்று நான்கு வயதிலும் தளராத இளமை பூண்டு கொள்கைக் கோமானாகத் திகழும் தானைத் தலைவர் கலைஞரைப் போற்றி வணங்குகின்றோம்.
எங்களைப்போல என்பதுகளில் தடுமாறும் பலருக்கு உன் கடன் என்ன தெரியுமா? என்று எந்த மேடையிலும் உணர்த்திய அந்தக் கலைஞரை இன்றும் அப்படியேப் பார்க்கிறோம். அவர் முழக்கமிட்ட பொன்வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துயர், இன்பம் துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழி நடத்திய அண்ணாவையும் நினைத்துக்கொண்டு இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருக்கிறேன்.
கழக உடன் பிறப்புகளையும்- அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித் துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ்ப்பெருமக்களையும், அரசியலுக்கும், கட்சிப் பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி வருகின்ற அனைத்து நெஞ்சங்களையும், தூய துணைகளாகக் கொண்டு – இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் – இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன் எஞ்சியுள்ள பயணத்தைத் தொடர்கிறேன். “என் கடன் பணி செய்து கிடப்பதே“ ! என்பது அவர் இன்றல்ல பல்லாண்டுகளுக்கு முன் எழுதிய பணிவுரை.
சங்க இலக்கியங்கள் கலைஞருக்கு நெஞ்சைப் பிணிக்கும் இன்ப இலக்கியங்களாகும். புறநானூற்றுப் போர்வரிகளை அவர் சொல்லாத நாளில்லை. அந்தப் பாடல்களை மாற்றிக்காட்டி அவர் வெல்லாத வேளையில்லை.
பொறி பறக்கும் போர்வரிகளின் கூர்மை காக்கும் புறநானூற்றுப் பாடல்களில், போர்வாள் மட்டுமன்றிச் சில நிலைகளில் நம்மைச் சிலிர்க்க வைத்துப் புன்னகை காட்டும் பூக்களும் செறிந்துள்ளன. போர்வாள் ஏந்திய, ஒரு மூதில் மூதாட்டியின் நடை தளர்ந்தாலும், மனம் தளராத மான உணர்வு பொங்கித் ததும்பக் களத்தில் வீரத் தாய் திரியும் காட்சியைக் காக்கைபாடினியார் கவினார்ந்த ஓர் ஓவியமாகத் தீட்டினார். வாள் ஏந்திச் சென்ற கிழத்தாய் பற்றிய வடிவம் இப்படித்தான் இருக்கிறது.
நரம்(பு) எழுந்(து) உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
மண்(டு) அமர்க்(கு உடைந்தன்ன் ஆயின், உண்டஎன்
முலை அறுத் திடுவென், யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரி(து) உவந்தனளே.
(புறம் – 278)
களம்பல கண்டகாவலனாகக், கலை மிளிரும் கை வேல் ஏந்திய நம் கலைஞர் திலகம். எழுதுகோல் ஏந்தி இந்தப் பாடலை இன்னும் மெருகேற்றலாம் என்றெண்ணிக் கனலும் காற்றும் கலந்த கவிதைச் சுடர் ஒளிரும் ‘உரை கலந்த நடையில்‘ எழுதினார். இரண்டு பாடல்களிலும் காலத்திற்கேற்ற நடையும் கருத்தும் விருந்தளிக்கின்றன. பாடலின் நிறைவாகக் கலைஞர் செய்த ஒரு சிறு மாற்றத்தினால் மாபெரும் இன முன்னேற்றம், தமிழின் உயர்வு நம் மனக்கண்ணில் மங்காச் சுடராக நிலையாக மின்னுகிறது. கொஞ்சமும் தெளிவில்லாமல் வீரன் மேல் கொடும்பழி கூறிய குடிலனை வெறுஞ்சொல் வீணன் என்று விட்டு விடுவதா என்ற வெஞ்சினம் பொங்கும் நெஞ்சில் பிறந்த முத்தாய்ப்பாகக் கலைஞர் அமைத்த இரண்டு அடிகள் புறநானூற்றுக்குப் புத்தொளியைப் பாய்ச்சுகின்றன. பாடினியை விஞ்சிக் காட்டிய பாவலனைக் காணலாம்.
பிணக் குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள்,
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு – அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி,
இதைக் கண்டாள் – இதயங்குளிர்ந்தாள்
எதைக் காண்டாலும் இனிக்கவலை இல்லை
என்மகன் வீரனாய் இறந்தான் என்றாள்
அறுத்தெறிய இருந்தேன்‘
அவன்குடித்த மார்வை – அடடா
கருத்தறியப் பொய்சொன்ன கயவனெங்கே?
– வாளிங்கே அவன் நாக்கெங்கே?
என்பது கலைஞரின் எழுத்தோவியம்.
செங்குருதி வாளினை மேலும் சிவப்பாக்கிப் போர்வாளைக் கூர்வாளாக மின்னிடச் செய்யும் முதற் பாடல் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது, சங்கத் தமிழைத் தங்கத் தமிழாகவும் பொங்கும் பெருமிதத் தமிழாகவும் மெருகூட்டியவரோ நாடு போற்றும் கலைஞர் கோமான்.
வீரனைப் பெற்று மகிழ்ந்த, தாய்மை பொலிகின்ற நிலையில் பாடினியார் பாடல் நின்றது. ஈட்டிக்குக் காட்டிய மார்பினைக் கண்ட தாயின் உள்ளம் துள்ளவும், ஓங்கி எழுந்த சினத்தை “வாளிங்கே, கருத்தறியப் பொய் சொன்ன கயவன் நாக்கெங்கே“ எனச் சீறும் தாய்த் தமிழாகப் புதிய பாடல் சுடர் விடுகிறது. அறுத்தெறியத் தன் கையில் ஏந்திய வாள் பயனின்றிப் போவதா, கருத்தறியப் பொய் சொன்ன கயவன் நாவையாவது துண்டித்தெறிய வேண்டாமா என்ற புரட்சித் துடிப்பு கலைஞரின் மான உணர்வின் மாட்சிக்கு ஒரு மாண்பு சேர்க்கிறது. காலப் புதுமையும், களத்தின் வெம்மையும் கலந்த நிலையில் கூர் தீட்டிய, போர்வாளாகப் புதுப் பாடல் ஒளிர்கிறது. எண்பதாண்டுகளாக எழுதித் தேயும் அந்த விரல்கள் தமிழகத்தின் வரலாற்றுக்கு வனப்பும், மதிப்பும், பெருமையும் சேர்க்கும் எழுதுகோலின் இன்னொரு வடிவமாக இலங்குகின்றன. எங்கள் தலைவன் என்று தமிழினம் எக்களிப்போடு பரணி பாடுகிறது. அந்தக் கலைஞரை அன்று போலவே இன்றும் பார்க்கிறேன்.
வாழ்க கலைஞர் ! வெல்க தலைமையும் புலமையும் !

Add a Comment