POST: 2018-08-16T10:38:14+05:30

கலைஞர் 92ம் பிறந்தநாள் – 03.06.2015
=====================================

ஔவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••

சிரிக்கும் முல்லை செழித்த செந்தமிழ் நாடு சீர்குலைந்த சூழலில் மேய்ச்சல் காடாக மாறியது. உணர்வு ததும்பும் இளம்பருவத்திலேயே அரிமா எனத்துள்ளிக்குதித்தவேங்கை மரண முகட்டிலும் மானங்காக்க ” மறத் தமிழா நீ போராடு “- இது இளம்பாரி எழுதிய முதற்கவிதை “கிழவன் கனவு என்பது இன்றும் நிலைக்கும் நூல் முதல் கட்டுரையோ இளமைப் பலி முதல் வரலாற்று நாவல் “ரோமாபுரிப் பாண்டியன் முதல் நாவல் புதையல். இப்படி நாடகம், திரைப்படம், மேடை போர்க்களம், சிறைக்கூடம், அரசியல் தலைமை என்பவைகளை அணிகலன்களாக அணிந்து அணிந்து மகிழ்ந்த தன்மானத் தனிப்பேரொளி. வரம்பில்லாத வளங்கள் பெருகிய குன்றம் – அதுதான் அவர் மன்றம்.

தன்னலம் இல்லாதவர் தமிழ் நலம் போற்றியவர்; கொள்கை உரம் பெற்றவர் ஆண்ட செந்தமிழ் விட வேண்டும் என்னும் பழைய மரபின் பாடலைப் புரிந்தவர். ‘நால்வகைப் பிறப்பா ? எடடா வாளை நறுக்கிடு நாவை’ என நெஞ்சுயர்த்திப் பகுத்தறிவுப் படைக்கலன்கள் உருவாக்கிய பாசறை அமைத்தவர்.

“எல்லோரும் ஒருதாயின் செல்வர்-இதை எண்ணாத மக்களை மாக்கள் என்போமே”. என்ற பாவேந்தரின் வரிக்குப் பனுவலாகத் திகழ்ந்து சாதியை மறுத்தவர் ,இல்லை ,இல்லை தீய்த்தவர் .புறநானூற்றின் பெருமையை மூடவந்த புழுதிக்காற்றினைப் புறந்தள்ளியவர் .

கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளைக் கால் பிடரியில் இடிபட ஓட வைக்க முடியும் என முழுக்கமிட்டு உள்ளத் தெம்புடன் சுடர் முகம் தூக்கிச் சுட்டெரிக்கும் சூரியன்.

நட்புக்கு இலக்கணம் நன்னம்பிக்கைக்குக் கதிர் இலக்கியச் சாரல் இன்தமிழ்த்தேறல் செயல் சிந்தனைக் கடல் எனப் பலரும் போற்றச் செந்தமிழ் உணர்வாளர்களின் சிந்தையில் கலந்த திருத்தவாணர் சாதிக்கு ஒரு நீதி வரையறுத்த வஞ்சக வடிவங்களை உருக்குலைக்கும் புரட்சிக்குப் போராட
முழங்கியவர்.

தலையைத் தந்திடவும் தயங்காமல் தமிழைக்காத்தவர். “ஆயிரம் இடர்கள் மோதினாலும், அஞ்சாமல் என்னோடு துணை நிற்கும் ஏந்தல்” என்ற அண்ணாவின் பாராட்டைப் பெற்றவர். கொலை மனம் கொண்டவர்
எனக் குணக்கேடர்கள் வழக்கிட்டதைப் பொறுத்துப் பொறுத்துப் புகழை வளர்த்தவர்.

மடல் எழுதி மடல் எழுதி கவியெழுதிக் கவியெழுதி கதைகளும் உரையாடல்களும் எழுதி எழுதி விரல்கள் தேய்ந்தவர் . சங்க இலக்கியங்களில் பொங்கும் வரிகளைப் பொழுதெல்லாம் எண்ணி எண்ணி இலக்கியங்களில் தோய்ந்தவர். எம்மொழிக்கும் இல்லாத பெருமை என் மொழிக்கு உண்டு என்னும் புகழ் மொழியைச் செம்மொழி என்று சொல்லி ஆணையிடச் செய்தவர். எம் மொழியினரும் எங்களுக்கும் அந்த மணிமகுடம் வேண்டும் என்று விழையச் செய்ததும் அதன் விளைவுதானே! நிதிதருவது மட்டுமல்ல தானம். நீதிக்கு நெஞ்சைத் தருவதே மானம் என்று வாழ்ந்து காட்டும் வள்ளல்.

பண்ணேறு மொழியினரின் பாராட்டைக் கேட்டுக் கண்ணேறுபட்டாலும் கவலையே இல்லை என்று தொண்ணுற்றைத் தாண்டிய தொண்டின் தீங்கனி. மூவேந்தர்கள் முயன்று எதிர்த்தாலும், பாரி மன்னனின் பறம்பு மலையை வெல்ல முடியாது என்பது புறநானூற்றுப்போர்வரி. “கடந்தடுதானை மூவரும்கூடி உடன்றனர் ஆயினும் பறம்பு கொளற்களிது” என்றல்லவா பாடுகிறது புறநானூறு. அந்தப் பொன்வரிகள் இன்னும் நம்மனத்தில் பின்னுகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *