POST: 2018-09-02T10:31:18+05:30

யாரறிவார் இந்த உண்மையினை ?
=============================
வள்ளுவர்க்கொரு கோட்டம் நிறுவினார். நெஞ்சையள்ளும் சிலம்பிற்கு ஒரு பூம்புகார் படைத்தார். சங்கத்தமிழா, தொல்காப்பியப் பூங்காவா ? தாய்க்காவியமா ? வான்புகழ் வள்ளுவத்தோடு காலப்பேழையைக் கொடுத்துக் கவிதைத் திறவுகோலையும் தந்தார். சேனை அமைத்த இனம் செங்கோலை இழக்கலாமா ? என்றார்.

வானம் இருண்டு விடாதிருக்க
வல்லிருட்டு சூழ்ந்துவிடாதிருக்க
செம்மொழி வரலாற்றில் சிலபல
செப்பேடுகளைக்
கண்டுகண்டு சொன்னார்.

மீண்டும் கண்டுகொண்டார்.

கால்டுவெல் காட்டிய திராவிடத் தனிச்சிறப்பை செம்மொழித் தமிழுக்கு சிம்மாசனம் அல்லவாக் கண்டார்.

தொன்மைக்குத் தொன்மையாய் வாழ்ந்து புதியதொரு வரலாறு காணும் தொல் பழங்கால மொழிக்கு ஒரு செம்மொழி மாநாடு கண்டார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அன்று தந்தைக்கே பட்டமளித்துப் பூரித்துப்போனார் பேரறிஞர் அண்ணா தனையீன்ற பெருந்தாய்க்கே இன்று செம்மொழி மகுடம் சூட்டிப் பெருமைக்கொண்டார் வாழும் கலைஞர் இன்று.

திராவிட இயக்கத்தின் சரியாத வரலாற்றின் சாதனைச் செம்மலாய் செம்மொழிக் கண்ட வள்ளலாய் வரலாற்று உள்ளுணர்வாய் நம்மோடு வாழ்கின்றார். பாருள்ளவரை பருகும் நீருள்ளவரை நீரூற்றின் கண்ணான காருள்ளவரை வரலாற்றாய் வாழ்கின்றார் கலைஞர்.

தனை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் செந்தமிழ்த் தாய்மொழிக்கும் தினையளவு புகழ் காணாமல் கண்ட புகழ் பேணாமல் கண் துஞ்சுவதில்லை. என்பதே கலைஞர் பெருமான் கண்டெடுத்தத் திட்டம். கனவல்ல – அது கல்வெட்டு. காலத்தை வெல்லும் கண்ணான பொன்னெழுத்து அதை வணங்கி வாழ்த்தாமல் வேறென்ன வேலை நமக்கின்று.

வாழ்வளித்த என் தலைவா என்றும்
வணக்கம் அய்யா கலைஞரே !
வேண்டத்தக்கது அறிவாய் நீ
தமிழுக்கு வேண்டிய முழுதும் தருவாய் நீ !
வெற்றி உமக்கல்லாமல் வேறு யாருக்கு அமையும் ?

தமிழ் உனைக் காதலிக்கிறதா ‘
நீ தமிழைக் காதலிக்கிறாயா’
இதுகாறும் யார் அறிவார்
இந்த உண்மையைத்தான்,

தமிழுக்கு நீ வாழ்வளித்து வருகிறாயா
தமிழுக்கு வாழ்வளித்து வருகிறதா
யாரறிவார் இந்த உண்மையினை.

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *