POST: 2018-09-06T12:49:20+05:30

==========================================
பேரூர்ப் பணிகள் வெல்க – அடிகள் நினைவே ஆறுதல் நல்கும்
==========================================

பேரூர் அடிகள் மறைவு – பழுத்த கனி உதிர்ந்தது போலப் பட்டாலும் கலை பயின்ற தெளிவாலும், கரை காணாப் புலமையாலும். தனக்குவமை இல்லாத பேரூர் ஆதீனத் தலைவராகத் திகழ்ந்தார்.

தமது கனிந்த பண்பால் கடல் கடந்து பறந்தும் விரைந்தும் தமிழினம் உறையும் நாடுகளில் அவர் ஆற்றிய பொழிவுகளில் தமிழுணர்வும் சைவஉணர்வும் ததும்பின.

கடல் கடந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் அடிகளாருக்குத் தொண்டராகி ஆண்டுதோறும் பேரூருக்கு வருவதைப் பெரும் பேறாகக் கருதி நெகிழ்ந்தனர்.

புலவர் குழுவுக்குத் தலைமையேற்றுப் பொலிவூட்டியதையும் புலவர் பயின்றோர் முதுகலையும் ஆய்வு பட்டப்பேறுகளையும் பெற வைத்த வரலாறும் தமிழுக்கு வாய்த்த வரமாகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக அடிகள் ஆற்றிய பணிகள் அளவில்லாதன.

அருட்செல்வரும் அடிகளாரும் தமிழினப் பெருமிதம் தழீஇய நிலையில் பரிவு பூண்டிருந்தனர்.

அடிகளாரின் எளிமை வியப்புக்குரியது.எங்குச் சென்றாலும் தமக்குத் தக்கதெனத் தோன்றும் உணவைத் தாமே அமைத்துக் கொள்வார்கள்.

அமைதியும் ஆற்றலும் சான்ற தவத்திரு. மருதாசல அடிகளாரின் ஆட்சியின் மாட்சியை இளவரசு நிலையில் இருந்த போதே தமிழுலகம் வியந்து மகிழ்ந்தது.

பேரூர்த் தமிழும் பெருமை சான்ற பண்பாடும் என்றும் நிலைநிற்கும் என்பதே தமிழினத்தின் உயர்வாகும்.

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *