அறம் குலைந்ததே !
=====================
அன்று விடியலில் இடி போல் இந்தச் செய்தியை என் செயலர் அனுப்பியிருந்தார். அண்ணா என்று அழுகை ஒலியோடு அறம் குலைந்து விட்டது பாருங்கள் என்று தங்கை தாயம்மாள் பதறிப் புலம்பியதைக் கேட்டு நெஞ்சுறுதியோடு நின்றாலும் கண்களில் நீர் மல்கின.
அறிஞர் அறவாணன் இணையரை பச்சையப்பர் கல்லூரியில் வந்து சேர்ந்த நாள் முதலே அறிவேன். படிப்படியாக ஓங்கி வளர்ந்து உலகளந்ததையும் எண்ணிப் பலமுறை பாராட்டியிருக்கிறேன்.
மொழி வளர்ச்சியோடு இன எழுச்சியையும் இரு தோள்களாகக் கொண்டு அறிஞருலகில் நிமிர்ந்து நின்றார் .மணிமுடி போல வெள்ளை உடையும் தொப்பி முடியும் எடுப்பாகவே இருந்தன.
திருவனந்தபுரத்திலிருந்து வந்த இளைஞர்களில் இனமான உணர்வு தலைக்கேறி மிளிர்ந்தவர்கள் மிகச்சிலரே பேராசிரியர் அறவாணன் தலைமணியாக ஒளிர்ந்தார்.
வையாபுரியார் வழிப்பட்டிருந்த மருள் நீங்கி திராவிட மாட்சியை நிறைநாளில் முழக்கமிட்டு வந்தார் மாந்தவியலில் தனிப்புகழோடு தன் ஆய்வுகளை வலியுறுத்தினார். தங்கை தாயம்மாளும் மருகியார் வாணியும் தமிழ்ப்பதாகையைத் தாங்கி நிறுத்த வேண்டும் என்று தான் என்னால் ஆறுதல் கூற முடிந்தது.
என்னினும் இளையோர் மறைவு நடைத் தளர்ச்சியையும் நடுக்கத்தையும் மிகுவிக்கின்றன.
—– ஔவை நடராசன்

Add a Comment