சுடர்மணி அணைந்ததே !
===========================
கையில் பையும் நெஞ்சில் மெய்யும் தாங்கி நெடுந்தூரமானாலும் நடை ஓயாமல் நடந்து பெருமூச்செறிந்தபடி இராமலிங்கர் பணி மன்றத்தில் என்னைக் காண வந்த வேம்பத்தூரார் ஆயகலைகள் அறுபதாவது தெரிந்தவர்.
காலம் கடுமையான மாற்றத்தைக் கண்டு வருவதைத் தாங்க முடியாமல் தன் பழம்போக்கில் அற நூல்களையும் அருட் பாடல்களையும் சுடர் மணி மாலையாகத் தொகுத்து வழங்கும் தொண்டிலேயே திளைத்திருந்தார் .
ஒளவையார் அறப் பாடல்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு நாடு முழுவதும் வழங்கினார் .
ஒளவையார் கோட்டம் அமைக்க வேண்டும் என்று மனதில் கோட்டைக் கட்டியபடியே இப்போது மறைந்து விட்டார்.
கலைத்துறையிலிருந்து பொதுத்துறைக்கும் பின்னர் சமயத்துறைக்கும் தன்னை மாற்றிக்கொண்ட வேம்பத்தூராரின் அரிய செயல்களைப் பாராட்டு விழாவில் கலைமாமணி சாருகாசன் நெகிழ்ந்து பேசியது என் நெஞ்சில் நிலையாக நிற்கின்றது.
வேம்பத்தூராரைப் போன்ற இனிப்பான தலையாய தொண்டரை இனித் தேடித் தான் காண முடியுமா என்று தெரியவில்லை.
—– ஔவை நடராசன்

Add a Comment