POST: 2019-01-22T10:36:04+05:30

கனவில் மிதந்த கலைத்திறனாளர் !
==================================

நண்பர் எம்.என்.டி. என்னும் நடராசன் எனக்கு நெருங்கிய நண்பர்.

தொடக்கப் பொறியியல் நுணுக்கமும் கலை பயின்ற தெளிவும் அவரைக் கட்டடக் கலையாளராக மாற்றியது.

அருள் காட்டிய ஆர்வத்தால், அருளோடு சேர்ந்து டைடல் பூங்கா – தொழில் வளாகத்தில் முகப்பு ஒளிப் பலகையை உருவாக்கிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

பழநியில் வாழ்ந்த அவருக்கு, திடுமெனப் புத்துணர்ச்சி மருள் வந்ததாகவும், தமிழின் தொன்மை வரலாற்றுக் காட்சி தன் கனவில் வந்ததாகவும் சொல்லத் தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

நண்பர் வலம்புரி ஜான், பேராசிரியர் ஜோசப் முதலியோரோடு நெருங்கிப் பழகி, அழகிய வெளியீடு ஒன்றை வெளியிட்டார். நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம்.

என் நண்பர் இராஜகோபாலன் என்னும் இராஜாஜியை அடிக்கடிக் கனவு வரைவை எழுத வைத்தார். அவர் கருத்துக்களுக்கு மனம் ஒவ்வாமலேயே கலந்து பழகினோம்.

என் மீது அவர் காட்டிய பரிவு பெரிது. ஓய்வறியாமல் இருந்த அப்பண்பாளர் மறைந்தார் என்பது மனத்தை உருக்குகிறது.

எம்.என்.டி.-யின் மக்கள் தந்தையாரின் கட்டடக் கலைப் பணியை மேலும் செழிப்பாக்கி, அவர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

முதுமையைத் தொடும் போது இயல்பாகவே, கனவும், கற்பனையும், கடவுள் காட்சியும் இயல்பாகவே சிலரைத் தடுமாற வைக்கின்றன.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *