தினத்தந்தி – பதிப்புகள்
இந்தியாவில் 1. சென்னை, 2. மதுரை, 3. திண்டுக்கல், 4. திருச்சி, 5.
தஞ்சாவூர், 6. கோயம்புத்தூர், 7. திருப்பூர், 8. ஈரோடு, 9. சேலம், 10.
திருநெல்வேலி, 11. நாகர்கோவில், 12. வேலூர், 13. கடலூர், 14. புதுச்சேரி,
15. பெங்களூரு, 16. மும்பை என்று பதினாறு பதிப்புகளில் தினத்தந்தி
வெளியாகிறது. இது தவிர, வெளிநாட்டில் துபாயிலும் ஒரு பதிப்பு கொண்டு
வெளியிடப்படுகிறது.
தற்போது இலங்கை பதிப்பையும் சேர்த்து
மொத்தம் 18 பதிப்புகளில் தினத்தந்தி நாளிதழ்…..
தினத்தந்தி இலங்கை பதிப்பு – ஔவை நடராசன்
==================================================
வாழ்த்து
=========
இலங்கையில் 18-வது பதிப்பை தொடங்கிய தினத்தந்திக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசன், திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சனவரி 26, 2019.
சென்னை.
இலங்கையில் ‘தினத்தந்தி’ பதிப்பு தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது :-
நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது தினத்தந்தியாகும். எளிமையான கருத்துகளை வலிமையாக வழங்கி வருகின்ற தினந்தந்தி விடியலில் நமக்குப் பள்ளி எழுச்சி பாடும் ஒப்பற்ற ஏடாகும். எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களுக்கும் அரசியலைக் கற்றுத்தந்து உலகைக் கண்ணாடியாகக் காட்ட வேண்டும் என்பது தான் பெருந்தகை ஆதித்தனாரின் தனி முயற்சியாகும். பொதுப்பணியும், தமிழ்ப்பணியும் தென்காசிக்கு ஆற்றிய திருப்பணியும் சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை என்றும் பேசும். அந்த வகையில் கடல் தாண்டி மேலை நாடுகளுக்கும் பதிப்புப் பணிகள் மேன்மேலும் ஓங்கிச் சிறப்படைவதை இப்போதே காண்கிறேன்.
தலைமுறை தலைமுறையாக தழைத்து வரும் தினத்தந்தி 3-ம் தலைமுறையின் முன்னேற்ற முமாக 18-ம் பதிப்பினை இலங்கையில் வெளியிடுவது மகத்தான பணியாகும். தமிழுணர்வை ஊட்டுவதில் வீரகேசரிக்கும் வெற்றி முகம் உண்டு. சிவந்தி ஆதித்தனாரை தொடர்ந்து சிகரத்தைத் தொடும் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கடல் தாண்டி உறவு வளர்ப்பதில் முதன்மை பெற்றிருக்கிறார். வீர கேசரியோடு இணைந்து தினத்தந்தி வெளிவருவது கடல் தாண்டித் தமிழர்கள் கை குலுக்குவது போல் அமைக்கிறது. பாராட்டி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Add a Comment