POST: 2019-02-12T14:12:52+05:30

============================================
பாரதியார் பதில்கள் நூறு – நூலில் இடம்பெற்ற முன்னுரை
============================================

நுழைவாயில்…

வல்லமை தாராயோ!
••••••••••••••••••••••••••••••••••••

—– ஔவை அருள்

சென்னை கிறித்தவ மேநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு நெருங்கி வந்த அந்த நேரத்தில் எங்கள் அண்ணா நகர் இல்லம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாகவே எங்கள் வீடு ஒரு பொதுக்கூட்டம் நடப்பது போலத்தான் இயங்கும். அப்போது என் தந்தையார் தமிழக அரசில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மூதறிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் எனப் பலரைக் கண்டு அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மேலும் அந்தக் காலச் சூழலில் தான் தேசியகவி மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவைப் புரட்சித்தலைவர் அறிவித்திருந்து ஏற்பாடுகள் பல நிலைகளில் நிகழ்ந்தன.
விடுதலைக் கவியரசருக்கு வீர வணக்கம் தெரிவிக்கும் வகையில் விழாக்கோலம் எங்கும் தெரிந்தது, பள்ளி மாணவனாக இருந்த என்னை எழுத்தாளரும், பேச்சாளரும், ஊடகச் சுடருமாக விளங்கும் திருமதி. சுபா வெங்கட் முதல் முறையாக ஸ்ரீராம் இலக்கியக் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். கோபாலபுரம் மாநகராட்சிப் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியிலும், கட்டுரைப் போட்டியிலும் பங்கு பெறச் செய்தார். என் அன்னையார் தனது மருத்துவமனையில் இருந்து இதற்காக வந்து நான் பேசுவதைக் கேட்டு எங்களை உட்லண்ட்ஸ் உணவகத்துக்கு அழைத்துச் சென்றதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக உள்ளது.
மூதறிஞர்கள் சிலம்புச் செல்வர், பெ.நா.அப்புசாமி, கிருஷ்ணசாமி பாரதியார், அருட்செல்வர் நா.மகாலிங்கம், ஆங்கிலப் பேரறிஞர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், முதுமுனைவர் டி.என்.ஆர், பேராசிரியர்கள் பி. சுந்தரம், கே.ஜி.சேஷாத்திரி, நாகராஜன், ந.சஞ்சீவி, என்னை வளர்த்த சி.பா, சர்மா, வழக்கறிஞர் இரவி, சொல்லின்
செல்வர் சுகி சிவம், அன்னையாக அரவணைத்த கவியரசியார் திருமதி செளந்தரா கைலாசம், கலைமாமணி விக்கிரமன், கம்பர் கவிநயச் செல்வர் எஸ். நல்ல பெருமாள், பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி, அரு.சங்கர், புலவர் வீரமணி, எனக்கு வழிகாட்டியான பேராசிரியர் எஸ்.ஏ. சங்கர நாராயணன், பாரதி காவலர் இராமமூர்த்தி, பாரதி அடிப்பொடி மணி, பாரதி சுராஜ், எஸ்.வி. சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன், இதயம் பேசுகிறது மணியன், பாரதி ஆய்வுச் சுடர் பெ.சு.மணி முதலிய பெருமக்கள் அவ்வப்போது பேசுவதைக் கேட்டதோடு அவர்கள் அன்போடு முதுகில் தட்டிய பரிவும் என்னை இப்போது ஆளாக்கி உள்ளன.
பாரதியார் நம் தமிழ்ப் பரம்பரையின் மாபெரும் சொத்து, அந்தக் கவிதைக் களஞ்சியத்தில் பாடல்கள் சிலவற்றையாவது எந்த நேரமும் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வை முற் குறித்தோர் ஊட்டினார்கள். இந்த ஊக்கம் தான் என்னை வேறு துறைகளுக்குச் செல்லாமல், அப்போது என் அம்மா விரும்பாமலும் கூடத் தமிழ்க் கல்வியை ஆர்வமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

மொழி பெயர்ப்புத்துறை இயக்குநராக இருந்தபடி இந்த வரலாற்றுக் குறிப்பை எழுதுவது ஒரு பெரும்பேறு. என் தந்தையாரின் நிழலாகவே எப்போதும் இருந்ததால், எனக்குத் தமிழ்வழி காட்டியாகப் புலவர் மாமணி அமிர்தலிங்கனார் பாரதியார் பாடல்களை எப்படிப் படிக்க வேண்டும் என்று எழுத்தெண்ணிச் சீர் பிரித்து எனக்கு வகுப்பாக நடத்திக்காட்டினார்.

அன்றைய காலச் சூழலில் தான் கவிப்பேரரசு வைரமுத்துவின் “கவிராஜன் கதை” வெளிவந்தது. வாய் திறந்தால் கவிராஜன் கதையில் வந்த வரிகளையும், தொடர்களையும் மனப்பாடமாகவே மாணவர்கள் சொல்லி பெருமிதமுற்ற காலமது. முண்டாசுக் கவிஞர் பாரதியார், எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தார். பாரதியார் வரிகள் இல்லாத மேடை இல்லை , திரைப்படமில்லை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்லை, செய்திகள் இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் பாரதியார் அலை வீசிய நேரத்தில், பாரதியாரின் பற்று என்னைச் சிறிதாவது நிமிர்த்தியது. தொடர்ந்து பாரதிதாசன் வரிகளைச் சொல்வதிலும் செருக்குடன் அலைந்தேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் மாநகரில் ஓராண்டு வதிந்த போது, ஆங்கிலத்தின் முழு வடிவமாகத் திகழ்ந்த சேக்ஸ்பியர் ஆங்கில நாட்டார் தலைமீது வைத்துக் கொண்டாடி மகிழ்ந்து வருவதை ஆவான் நதிக்கரையின் ஸ்டார்ட் போர்டுக்கு சென்று கண்டிருக்கிறேன். “கவிஞர்களைப் போற்றும் நாடு தான் உன்னத நாடு என்பதை நான் அங்கு தான் உணர்ந்தேன்.

ஸ்ரீராம் நிறுவனங்களின் தனிப் பெருந்தலைவர் பத்மபூஷண் திரு. ஆர். தியாகராஜன் அவர்களின் நன்முயற்சியால் பல்லாண்டுகளாகப் பாரதியார் இலக்கியக் கழகம், பாரதியார் விழாவினை நடத்தி வருவதும், பாரதி அறிஞர்களைப் போற்றி மகிழ்வதும் வழக்கமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் அறிஞர்களைக் கொண்டு பாரதியாரைப் பற்றிய நூலினை எழுதச் செய்து விழாவுக்கு வந்த பெருமக்கள் அனைவருக்கும் கையுறையாக வழங்கி வரும் வழக்கத்தைத் தமிழகத்தில் வேறு எவரும் தொடர்ந்து நிகழ்த்தியதில்லை. எதிர்பார்ப்பு எதுவுமின்றி வாரி வழங்கிடும் திறமை கொண்ட ஸ்ரீராம் நிறுவனம். 38 ஆண்டுகளுக்கு முன்பு பேசத் தொடங்கிய என்னைப் போன்றவர்களின் முயற்சிக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதற்கு என்றும் நன்றி பாராட்டுகிறேன். நாளெல்லாம் எனக்கு ஊக்கம் ஊட்டி வரும் அண்ணல், கடமைச் செம்மல் திரு.ஜி.சுந்தரேசன் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எழுதினால், பிழைகள் மலியும், அப்பாவின் பெயருக்குக் குறை வரக்கூடாதென்று அஞ்சியே எழுதாமல் ஒதுங்கிய என்னைத் தூண்டி, எழுத வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பெரும் பேராசிரியர் இரா.மோகன், வினா விடைப் போக்கில் இந்த நூலை வடிவாக்க வேண்டுமென்று கூறி இந்த முயற்சிக்கு அவர் எழுதிய நூலே மூலநூலாகும்.

”பாரதியார் காலத்திற்குப் பின் – எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின் – தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் பாடி மகிழும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன். என்ற பரலி சு. நெல்லையப்பரின் கனவுக் காட்சி வெற்றி பெற்றுள்ளது.

விலை மதிப்பில்லாத விடுதலைக்கவி மாமன்னர் பாரதியாரின் புகழைப் போற்றிப் பாராட்டும் ஆர்வம் பள்ளிப் பிள்ளைகளுக்கு மனத்தில் பொங்கிப் புரள்வதற்கு ஸ்ரீராம் இலக்கியக் கழகம் விரும்புவது போல இச்சிறுநூலும் பயன்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

வினாக்களை ஒழுங்குபடுத்திய செல்வி. சுபத்திரா தேவிக்கும் நூலை உருவாக்க உதவிய செயலாளர் பொன்னேரி. பிரதாப்க்கும் என் நன்றி.

“வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற பாரதியாரின் வேண்டுகோள் அனைவருக்கும்
குறிக்கோளாகட்டும்.

வாழிய செந்தமிழ்! வாழ்க பாரதியார் பெரும்புகழ் !!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *