POST: 2019-02-14T11:07:00+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 255)
============================================
(ஜுலை 2018 தொடர்ச்சி….)

முனைவர் ஔவை நடராசன்
—————————————————

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..

(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 1)
***************************************************************(ஏப்ரல் 27, 1995)

தமிழ் மொழி, இலக்கியப் பண்பாட்டு வளங்கருதும் உயராய்வு மையமாக 1981-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. உலகளாவிய தமிழ் மக்களை இணைக்கும் பாலமாகவும், பிற நாட்டுச் சாத்திரங்களைத் தமிழிலும் தமிழ் மொழியிலுள்ள கருவூலங்களைப் பிற மொழிகளிலும் பரிமாறிக்கொள்ளும் மையமாகவும் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இத்துணைக் கண்டத்தில் ஏற்படுத்தப்பட்டதென்ற நிலையில் இதுவே முதலாவதாகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டமை, தமிழகத்தின் முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

ஐந்து புலங்களையும் 23 துறைகளையும் கொண்டு விளங்கும் இப்பல்கலைக்கழகத்தில் அரிய பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.
தமிழ் மொழியை வளப்படுத்துவதற்குத் தேவையான களஞ்சியங்களும், அகராதிகளும் உருவாக்குந் திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 400 ஆய்வேடுகள் உருவாகிய நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கித் தன்னுடைய திட்டங்களை வகுத்துள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *