POST: 2019-02-15T11:37:54+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 256)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..

(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 2)
***************************************************************
(ஏப்ரல் 27, 1995)

தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு தனிநிலைப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு இணைவு பெற்ற கல்லூரிகள் எதுவும் இல்லை.

உயர் ஆய்வு மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த இப்பல்கலைக்கழகம் தமிழ்ச் சமுதாயத்தின் தேவையைக் கருதி தற்போது முனைவர்’ பட்ட ஆய்வையும், ஆய்வியல் நிறைஞர் கல்வியையும் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் வழங்குகிறது. மேலும், உலகளாவிய நாடுகளிலிருந்து வரும் ஆய்வாளர்களுக்குத் தமிழ் மொழியை, பண்பாட்டை, கலை நலன்களைக் கற்பிக்கும் நிறுவனமாகவும் இது திகழ்கிறது. சீனம், சப்பான். போலந்து, செக்கோஸ்லோவாகியா, அமெரிக்கா, செருமணி, தென்னாப்பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்குத் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசில் பணியாற்றும் அயல் மாநில ஆட்சிப் பணியாளர்களாக மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு மையமாகை தமிழ்ச் சமுதாயத்திற்குத் தொண்டு சேர்க்கும் பணியில் இதுவரை நூல்களை வெளியிட்டுள்ளது. இந்நூல்கள் தமிழ் அறிஞர்களாலும் வெளிநாட்டு அறிஞர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. பல அரிய நூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் விளைவாகத் தஞ்சையில் உருவானது. இப்பல்கலைக்கழகம் 1995 சனவரி 1 ஆம் நாள் முதல் 5 ம் நாள் வரை எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் களமாக அமைந்தது குறிக்கத்தக்கதாகும். 21 ஆம் நூற்றாண்டுக்குத் தமிழகத்தின் பங்களிப்பு குறித்த விரிவான ஆய்வுகள் உலகத் தமிழ் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அறிஞர்களிடமிருந்து பெறப்பட்டு அரங்கேற்றப்பட்டன.

உலகத் தமிழ் மாநாட்டின் விளைவாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் புத்துணர்ச்சியையும் புதிய சிந்தனையையும் பெற்றுள்ளது. இசுலாமிய இருக்கை இந்த ஆண்டிலிருந்து செயற்படுகிறது. உலகத் தமிழ் மாநாட்டில் தொடர் நடவடிக்கையாக “மகளியத் துறை” ஒன்றும் தோற்றுவிக்கப்படவுள்ளது. பதிப்புப்பணிக்கு ஊக்கமளிக்கும் முறையில் ரூ. 10 இலட்சம் சுழல் நிதியாகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சுழல் நிதியிலிருந்து இதுவரை 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிற பல்கலைக்கழகங்கள் செய்யவியலாத பணியைத் தமிழ் மொழிக்கும் சமுதாயத்திற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆற்றவேண்டுவது இப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *