============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 263)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 10)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
கொள்கைச் செயற்பாடு
======================
கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மேற்கண்ட கொள்கைகளை மனத்திற்கொண்டு செயற்பட்டு வருகிறது. ஐந்து புலங்களையும் 23 ஆய்வுத் துறைகளையும் உருவாக்கிப் பல ஆய்வுப் படைப்புகளைப் புத்தகங்கள், கலைக்களஞ்சியம் மற்றும் அகராதி வடிவில் வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 200 ஆய்வு நூல்கள், 14 வாழ்வியற் களஞ்சியங்கள், மூன்று பேரகராதித் தொகுதிகள், ஒரு நாடகக் களஞ்சியம், நான்கு சங்க இலக்கியப் பொருட்களஞ்சியங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
அறிவுசால் பேராளர்களால் பாராட்டப் பட்ட இவை, தேசிய மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. அச்சிட வேண்டிய நிலையில் 200 ஆய்வேடுகள் உள்ளன. ‘தமிழ்க்கலை’, ‘தமிழ் சிவிலிசேசன்’ (ஆங்கிலம்), ‘செய்திமலர்’ போன்ற காலமுறை ஏடுகள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற பல்துறைசார் அறிஞர் பெருமக்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றனர்.

Add a Comment