============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 269)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு
சுருக்கம்
தமிழ் வளர்ச்சி -கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதிவைத்தல்-ஆணைகள்-பிறப்பிக்கப்படுதல்.
தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத் துறை
அரசாணை நிலை எண்: 291
நாள் 19-12-1990
திருவள்ளுவர் ஆண்டு-2021
பிரமோதூத,
மார்கழி, 4
ஆணை :
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையர் தமிழ் மொழியை எந்த வகையிலேனும் சிதைத்துப் பயன்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசின் கொள்கைக்கு ஏற்புடையதாகாதென்பதாலும், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உணவகங்கள் முதலியவற்றின் பெயர்ப் பலகைகளைச் சரியான தமிழ்ச் சொற்களில் எழுதி வைக்குமாறு செய்ய வேண்டுமென்று தமிழ்ச் சான்றோர் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தங்கள் இன்னுயிரைக் காணிக்கையாக்கிய பல்வேறு பெருமக்களின் நீண்ட நாள் விழைவாக இக்கருத்து அமைந்துள்ளது. எனவே, மேற்குறித்த கருத்துருவுக்கு சொல்வடிவம் கொடுப்பது குறித்து ஆழ்ந்து கருதியதன் பின்னர், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா ஆண்டான இந்த ஆண்டு எடுக்கப்படவேண்டும் என்று, அரசு முடிவு செய்துள்ளது.
2. மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகச் சிறந்த தமிழறிஞர்கள் மூவரைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதென அரசு கருதியுள்ளது. கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றின் பெயர்ப் பலகைகளில் பயன்படுத்தப்படுவதற்குரிய பெயர்களின் சரியான, இணையான, பொருத்தமான தமிழ்ச் சொற்களை இந்த அறிஞர்கள் குழு வெளியிடும்.
3. எனவே, மேலே குறிப்பிடப்பட்ட குழுவினால் வெளியிடப்படும் பட்டியலில் காணப்படும் சரியான தமிழ்ச்சொற்களே கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றின் பெயர்ப்பலகைகளில் பயன்படுத்தப்படுமாறு, அவற்றிற்கு உரிமங்கள் வழங்கும்போதோ உரிமங்களைப் புதுப்பிக்கும் போதோ, பதிவுச் சான்றிதழ்களை வழங்கும்போதோ, அவற்றைப் புதுப்பிக்கும் போதோ உறுதியாகப் பார்த்துக் கொள் ளுமாறு, உரிமம் வழங்கும் அதிகாரிகள்-அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனினும், பெயர்ப் பலகைகளில் காணப்படும் தனிப்பெயர்கள் (Proper Nouns) அவற்றிற்கு இணையான, சரியான தமிழ்ச் சொற்களாக மாற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு கடையின் பெயரானது, ‘ஜெயம் சில்க் ஹவுஸ்’ என்றிருக்குமாயின், அதற்குச் சரியான, இணையான தமிழ்ச் சொல்லாட்சி “ஜெயம் பட்டு மாளிகை’ என்பதாகவே இருக்கலாம்.
4. மேலே உள்ள 1 ஆம் பத்தியில் சுட்டப்பட்டுள்ள குழுவானது பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்:—
1. ஔவை நடராசன் — அமைப்பாளர்
2. டாக்டர் மெ. சுந்தரம் — உறுப்பினர்
3. சு. செல்லப்பன் — உறுப்பினர்
5. பல்வேறு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகம் முதலியவற்றிற்கு உரிமங்கள் வழங்குவதற்கும் அவற்றிற்குப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் தொடர்புடைய நிருவாகத் துறைகள் அனைத்தும், தத்தம் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுகின்ற அலுவலர்களுக்கு இதுகுறித்துத் தக்க பணிப்புரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
ஔவை நடராசன்,
அரசுச் செயலாளர்,

Add a Comment