============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 270)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நூலிற்கு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதிய அணிந்துரை
மு. கருணாநிதி முதலமைச்சர்
தலைமைச் செயலகம் சென்னை -600 009,
நாள் : 11-11-1996.
அணிந்துரை
———————
தமிழகத்தில் ஊர்ப் பெயர்கள், மக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்று பெரியதோர் முயற்சியை தமிழ் ஆட்சி மொழி – தமிழ்ப் பண்பாட்டுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் எல்லாமே தனித் தமிழாக இருக்க வேண்டுமென்று கட்டாயமான திணிப்புக்கு இடமில்லை , பெயரைச் சுட்டுகின்ற சொல், முதலில் தமிழ் எழுத்திலும், அடுத்து ஆங்கில எழுத்திலும், பிறமொழி ஏதேனும் இருப்பின் அது மூன்றாவதாகவும் இடம் பெற வேண்டுமென விரும்புகிறோம். இந்த உணர்வு தமிழர்கள் உள்ளத்தில் வேரூன்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர். என்ற பெயரை எம்.சி.ஆர். என்று எழுதிடத் தேவையில்லை, ”உஷா சில்க் ஹால்” என்பதை “உஷா பட்டாடை நிலையம்” என்று எழுதினால் போதும். “உஷா” என்பதை “உசா,” என்று மாற்றிடத் தேவையில்லை,
ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் “முரசொலி”க்கு ஒரு கடிதம் எழுதினார், “எம்.ஜி.ஆர்., ஜானகி, ராஜேந்திரன், விஜயகுமாரி என்றெல்லாம் செய்தி வெளியிடுகிற முரசொலியில் என் பெயரை மட்டும் (ராசாசி”! என்று வெளியிடுவது நியாயமா?” என்று கேட்டிருந்தார். அன்றைக்கே அவரது நியாயத்தை நான் ஏற்றுக் கொண்டு மாற்றிக்கொண்டேன்.
எனவே, தமிழன் தமிழுணர்வுடன் வாழ்கிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக உறுதியான நிலையொன்று உருவாகும் வரையில், அப்படி உருவாகிடத் துணை நிற்கும் வகையில் தமிழக அரசின் தமிழ் ஆட்சி மொழி-தமிழ்ப் பண்பாட்டுத் துறையினர் எடுத்துள்ள முயற்சியின் ஒரு கட்டமே இந்த நூலாகும்.
இதனை வழி காட்டியாகக் கொண்டு வணிக நிறுவனம். போன்றவற்றின் பெயர்களில் தமிழ் முதலிடத்திலும், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், தேவைப்படின் பிறமொழி மூன்றாவது இடத்திலும் அமையுமாறு செய்திட தமிழ்நாட்டில் உள்ளோர், தமிழ் மொழிக்கு முதல் மரியாதை தருவதே ஏற்புடையதாகும். என் அன்பான வேண்டுகோளுமாகும்.
இந்த முயற்சியின் வெற்றி அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு மட்டுமல்ல-அனைத்துத் தமிழ்க்குடி மக்களுக்கும் உரியதாகும் என்பதில் அய்யமில்லை.”
அன்புள்ள,
மு.கருணாநிதி

Add a Comment