POST: 2019-03-09T11:34:29+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 271)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நூலுக்கு அப்போதைய தமிழ் ஆட்சி மொழி தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர்
முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்கள் எழுதிய முன்னுரை
முன்னுரை
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” எனும் கொள்கையினை உயிர் மூச்சாகக் கொண்ட தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயற்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது நாடறிந்த ஒன்றாகும். தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தினை ஓர் ஒருங்கிணைந்த திட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்பதனை அரசு உணர்கின்றது. அத்தகைய நடவடிக்கைகளுள் ஒன்று, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் தக்கவாறு இடம் பெறுவதாகும். வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுதி வைப்பது தொடர்பில் 29-12-83ஆம் நாளிட்ட அரசுத் தொழிலாளர் துறை நிலையாணை எண் 3312 இல் ஆணைகள் வெளியிடப்பட்டன. அதன்படி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் முதன்மையாக இடம் பெறவேண்டும்; அடுத்து ஆங்கிலம் இடம்பெற வேண்டும். பிறமொழி ஏதேனும் இருப்பின் அது மூன்றாவதாக இடம் பெறலாம். மேலும் தமிழ்ப் பெயர்களைக் குறிப்பிடும்போது அரசால் ஏற்கப்பெற்ற எழுத்துச் சீரமைப்பினைத் தவறாது பின்பற்றுதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழியக்கம்’ தந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டில் தமிழ்ப் பெருமக்களின் விருப்பத்திற்கிணங்க வணிக நிறுவனங்கள் முதலியவற்றின் பெயர்ப் பலகைகளில் சரியான தமிழ்ச் சொற்களை இடம் பெறச் செய்ய 19-12-90ஆம் நாளிட்ட அரசு-தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை நிலையாணை எண் 291 இல் அரசு குழு ஒன்றை அமைத்தது.
அடுத்து இத்திட்டத்தினைச் செயற்படுத்த, 2-7-96 அன்று அரசுச் செயலகத்தில் வணிகர் சங்கச் சார்பாளர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டி அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க, தமிழ் ஆட்சிமொழி-தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரால் வேண்டுகோள் விடுக்கப்பெற்றது. சங்கச் சார்பாளர்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் வணிக நிறுவனங்கள் பெயர்களைத் தமிழில் உரியவாறு எழுத உதவும் வகையில் அரசு சொற்பட்டியல் ஒன்றை அச்சிட்டு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆங்கில-தமிழ்ச் சொற்கள் தொகுப்பு ஒன்றினை உருவாக்கி வெளியிட அரசு தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறைச் செயலாளர் அவர்களை அமைப்பாளராகவும், முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன், பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு 16-7-96ஆம் நாளிட்ட அரசு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை நிலையாணை எண் 150 இல் அமைக்கப் பெற்றது.
இக்குழு என் தலைமையில் கூடி 515 சொற்களை அறுதியிட்டு அளித்தது.
அவ்வாறு அறுதியிடப்பெற்ற சொற்பட்டியல் இப்போது கையேடாக வெளியிடப் பெறுகின்றது. இப்பட்டியலுக்குச் சேர்ப்பும் திருத்தமும் வரவேற்கப்படுவதற்குரியன. இக்கையேடு, வணிக நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவியாக அமையும் என நம்புகின்றேன். அந்தவகையில் பாவேந்தர் கண்ட கனவு நிறைவேறுகிறது எனலாம். இப்பணியினை மேற்கொள்ள என்னைப் பணித்து, ஒரு வாழ்த்துரையும் வழங்கியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கட்கு என் நன்றி உரியது. “தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை” எனும் ஏக்கம் இனிமேலாவது தீரட்டும். இப்பணியை எங்கள் துறை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு அ. இரகுமான்கான் அவர்கட்கும் என் நன்றியைப் புலப்படுத்த விரும்புகிறேன்.
முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
தமிழ் ஆட்சிமொழி-தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *