இளையவரை இழந்தோமே !
===========================
அண்ணல் அரங்கசாமி மூப்பனார் அடக்கமும் ஆற்றலும் நிரம்பிய அருங்குணச்செம்மல், எத்தனைப் பணிகள் இருந்தாலும் தஞ்சை வரும்போது தவறாமல் என்னைப் பார்த்துவிட்டுச் செல்வார். அப்போதும் கூட அய்யா உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பார்.
இப்போது கூட தஞ்சையில் நான் இருக்கிறேன் என்று தொலைபேசியில் சொல்லிவிட்டேன் என்று அடக்கம் ததும்பக் குறிப்பிடுவார் .
பேராசிரியர் சாமி .தியாகராசன் உடன் வரக் குடந்தை சென்றால் அவர் விருந்தினராகச் சிற்றுண்டியாவாது அருந்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
உயர்ந்து ஓங்கிய மரபின் மணம் கமழும் செழுங்குடிச் செம்மலாக அண்ணலுக்கு வாய்த்த இளவலாக எதிர்நின்றுகூட பேசாத இயல்பு மிளிர வாழ்ந்தார் , அனைத்திந்திய அரசியல் முழுவதையும் தெள்ளத்தெளிவாக அறிந்தவராக விளங்கினார்.
அண்ணலுக்கு வாய்த்த இலக்குவனாகத் திகழ்ந்தார் .ஓராண்டுக்கு முன்பு உங்களுக்கு உடல்நலமில்லையாமே தலைவர் தம்பி சொன்னார் ,தங்களைப் பார்த்து வந்ததாக ,நலமாகி விடுவீர்கள் கும்பகோணம் வந்து பத்து நாள் தங்குங்கள் ,பாரதியார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் தங்களை நாள்தோறும் பார்த்து மகிழ்ச்சியாக உரையாடுவார்கள் அதுதான் உங்களுக்கு ஊட்டம் தரும் என்று கனிவாக வினவினார் .
ஆலமரத்தின் செழுங்கிளை முறிந்து விழுந்தது போன்றது இந்த அவலம் தலைவர் வாசன் அவர்களுக்கு என் ஆறுதலையும் அன்போடு அளிக்கிறேன்.
மூப்பனார் குடும்பத்துக்கு என் நெஞ்சுருகும் பரிவைச் செலுத்துகிறேன்.
—– ஔவை நடராசன்

Add a Comment