POST: 2019-03-26T12:29:11+05:30

தினமணி நாளிதழில் 19.03.2019 அன்று வெளியான கட்டுரை
============================================

தொல்காப்பியரைத் தொழுவோம்
*****************************************************

—– ஔவை அருள்

தொல்காப்பியம் காலப்பழமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும்.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்ற ஒரு தொடரை நாம் காணும்போது இலக்கியங்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல் தோன்றும் என்பது வெளிப்படை. தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல்,பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தை படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891-இல் பதிப்பித்த பெருமை யாழ்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையைச் சாரும். இந்நூலுக்கு பனம்பரணார் அருளிய சிறப்புப் பாயிரம் உண்டு.

தொல்காப்பியன் என தன்பெயர் தோற்றி என்ற குறிப்பால் தொல்காப்பியன் என்பதே இவருக்கு இயற்பெயர் என்றும் இவர் வழங்கியதால் அம் ஈறு சேர்ந்து தொல்காப்பியம் என்று அழைக்கப்பட்டது. சங்க இலக்கியம் ,சமய இலக்கியம் தோத்திர சாத்திர நூல்கள், மறுமலர்ச்சி நூல்கள் என அனைத்து வரிசையலார்களும் தொல்காப்பியத்தைத் தொட்டே தன்னை வரைந்திருக்கிறார்கள்.

எழுத்தும் சொல்லும் இனைந்து இலங்கிய பொருளாகிய இலக்கியப் பொருண்மையின் வரையறைகள் அமையுமாறு தொல்காப்பியம் அமைந்தது. இலக்கியம் வாழ்வின் படமாக அமைவதால் தொல்காப்பியர் தமிழர் வாழ்வுக்கு இலக்கணம் வரைந்தார் என்றும் கூறுவதோடு இந்தத் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற பெருமிதத்தை சேர்த்தது.

‘அந்நிலை மருங்கின் அற முதலாகிய மும்முதற் பொருட்டும் உரிய என்ப’ என்ற நூற்பா (363) குறிப்பிட்டபடியே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலாக வகுத்தார். தொல்காப்பியத்தின் பயன் திருக்குறளாகும்.

திருக்குறளுக்கு முதல் அதிகாரத்தில் ” மலர்மிசை ஏகினான் ” என்ற தொடரில் “ஏகினான்” என்பதற்கு பொருள் உரைத்த பரிமேலழகர்

“வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள’ என்மனார் புலவர் “.

என்ற தொல்காப்பிய நூற்பாவைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.

இன்றும் கூட நண்பர்கள் நம்மை அழைக்கும் போது விரைந்து செல்வதற்கு முன்னால் இதோ வந்து விட்டேன் என்று இறந்த காலத்தால் சொல்லுகிற வழக்கம் நம் மனத்தில் தொல்காப்பியம் பதிந்ததைக் காட்டுகிறது.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. 1963-இல் பேரறிஞர் அண்ணா, தொல்காப்பிய ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி அவர் குறித்த வரிகள் என்றும நீடித்து நிலைத்திருக்கும் புகழ் வரிகளாகும்.

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதியன்று தமிழ்த்துறைப் பேராசிரியா முனைவர் ஒப்பிலா மதிவாணன் தன்னுடைய உரையில் தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்தார். மெரீனா கடற்கரையில் ‘தமிழனந்த பெருமான்’ தொல்காப்பியருக்கு திருவுருவச் சிலை நிறுவ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையினை பல ஆண்டுகளுக்கு முன்பு மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் கேட்டுக் கொண்டதை அந்தக் கூட்டத்தில் நினைவுறுத்தியதைத் தொடர்ந்து, உயிரோவியமாகத் தீட்டப் பெற்ற தொல்காப்பியர் திருவுருவச் சிலை கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றி தொல்காப்பிய நூற்பாக்களைப் பொறித்துள்ளது தமிழறிஞர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலை மாநிலக்கல்லூரியிலும், தொல்காப்பியமே கடலாக வடிவெடுத்த தொல்காப்பியர் சிலையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையகமான மெரினா வளாகத்தில் தமிழ்த் துறையின் முகப்பிலும் அமைந்துள்ளன. அலைகடல் நோக்கிய அழகுத் திருமேனியாகத் தொல்காப்பியர் சிலை அமைந்துள்ளது.

அறிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஆயிரக்கணக்கான அளவில் பட்டங்களையும் பதக்கங்களையும் பரிசில்களையும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித்துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் (படம்) அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது. தொல்காப்பியர் படிமத்தைத் தொழுவதில் தமிழக அரசு ஆர்வத்தோடு முன்னின்று வழிகாட்டுகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *