POST: 2019-04-02T12:20:13+05:30

கொள்ளைப் பெருமிதம் கொண்ட கொலோன் – சிந்தை கவர்ந்த செர்மனி !
============================================

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் செர்மனி மொழிபெயர்ப்புக்காக கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு, கொலோன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு உதவியாளர்
திரு சுவன் ஒர்த்மேன் மற்றும் மெக்சிகோ நாட்டைச் சார்ந்த ஆய்வு மாணவரான ரெனேடோ ஆகியோரையும் சந்தித்து உரையாடினேன். இவர் இந்தியா குறித்து எம்.ஏ., பட்ட மேற்படிப்பு படிப்பதோடு, பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அவர்களின் மேற்பார்வையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் குறித்து முனைவர் பட்டத்திற்காக பதிவு செய்துள்ளார்.

பின்னர், கொலோன் பல்கலைக்கழகத்தில் நூலகப் பகுதிக்குள் நுழைந்தோம். அரிய ஏட்டுச் சுவடிகள், பழம் பனுவல்கள் பல.

விசாகப் பெருமாளய்யர் 1904 இல் வெளியிட்ட நன்னூல் காண்டிகையுரை, உரைவேந்தரின் திருவருட்பா உரைத்தொகுதியைக் கண்டு சிலிர்த்துப்போனேன்.

அறிவியலிலும் சிறப்பாகப் பொறியியலிலும் உலகளாவிய புகழ் கொண்டது செர்மனி நாடு.

டாக்டர் வா .செ .குழந்தைசாமி தன் பொறியியற் மேற்படிப்புக்காகச் செர்மனி சென்று பயின்றதை எழுதியுள்ளார் .இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு மாநகரத்தையும் அணி செய்கின்றன.

அறிவியல் பயிலும்போதே இசை ,ஓவியம் ஆர்வத்தையும் கற்ற நிலையில் மாணவ வாழ்வு அறிவும் இன்பக்களிப்பும் இணைந்ததாக அமைந்துள்ளது .
அறிவியல் மாட்சி வளர்ந்த நிலையில் ஆழ்ந்த மெய்யியற் சிந்தனைக்கும் அழியாப் புகழ் சூட்டிய சோபென்ஹர், நீட்சே,ஹெகல், மார்க்ஸ் போன்ற மதிவாணர்கள் செர்மனியில் தோன்றியவர்கள்.

அவர்கள் படைத்த சிந்தனைக் களஞ்சியங்களில் இந்திய சமயங்களும் மெய்யியலும் பெரிதும் இடம்பெற்று ஆராயப் பெற்றுள்ளன. இந்தியச் சிந்தனையின் மீது செர்மன் காட்டிய ஆர்வம் தான் மார்க்ஸ் முல்லரிடத்தில் கனிந்தது. வேத மூலர் என்று அவரை வடமொழி வாணர்கள் இன்றும் கொண்டாடுகின்றனர்.

சென்ற நூற்றாண்டில் தான் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்டதும் பிறரை அடக்கி ஆளப் பிறந்தவர்கள் என்ற கொடுமையான கொள்கை இட்லரின் இனவெறிக் கொள்கையாக அந்த நாட்டை சீர்குலைத்து நூறாயிரம் மக்களை இனப்பெயர் சூட்டி அழித்ததை எவரும் மறக்க இயலாது . செர்மனியப் பெரும் புலவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். கெதே ,சிலர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கெதே என்ற மாபெரும் கவியரசர் காளிதாசரின் சாகுந்தல நாடகத்தைப் பயின்ற பின் விண்ணுலக மண்ணுலக இன்பங்கள் அனைத்தும் உன் பெயரில் ஒளிந்துள்ளன என்ற பொருள்படும் புகழ்வாய்ந்த பாடலை எழுதினார்.

பெர்லின், மூனிச், கொலோன் போன்ற மாநகரங்களில் உள்ள மாளிகைகளும் கோயில்களும் செர்மனியின் கலைத்திறனைக் காட்டுகின்றன.

கோதிக் முறையில் கட்டப்பட்ட பழைய கட்டடங்கள் எதிரிலேயே இக்காலத்து கட்டிடக் கலைச் சிற்பிகள் புதிய முறைகளுக்கு முன்னோடியாக புதுவகையில் கட்டடங்கள் கட்டியுள்ளனர்.

ஒரு மாநகரத்தை விட்டு வேறொரு மாநகருக்குத் தொடர்வண்டியில் பயணம் செய்தால் தமக்கு தேவையென்றால் சுருக்கெழுத்தாளரையும் அங்கேயே வழங்கி கடிதங்களையும் கோப்புக்களையும் தட்டச்சு செய்து பெறலாம் என்ற அரிய குறிப்பை தனிநாயக அடிகள் எழுதியது என் நினைவுக்கு வருகிறது.

மொழிபெயர்ப்புக்காகச் சில நாள்கள் நம் அன்புச் செயலாலருடனும் அண்ணன் விசயராகவனுடனும் சென்று வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

அங்கே எடுத்த சில படங்கள் இங்கே காட்டப் பெறுகின்றன .நான் முன்னரே இந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வந்தாலும் செல்லும் போதெல்லாம் அந்த நாடுகளின் வளர்ச்சியும் மாற்றமும் பெரிய வியப்பை நாளும் நாளும் வளர்த்து வருகின்றன.

நடுங்கும் குளிரை விட்டு நாளெல்லாம் கொதிக்கும் சென்னைக்குப் புறப்படுகிறோம்.

எவ்வளவு தான் கொதித்தாலும் இல்லம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சி மிதப்புக்கு எல்லையில்லையே.

—– அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *