உடைந்த சிலம்பால் எழுந்த ஓலம் !
ஒளவை நடராசன்
1958 ஆம் ஆண்டு நான் முதுகலைத் தேர்வெழுதும் போது என்னோடு உடன் இருந்தவர் சிலம்பொலி.
அன்புப்பிழம்பான சிலம்பொலியைக் கணக்குப் பேராசிரியராக ,மாவட்டக் கல்வி அலுவலராக ,உள்ளாட்சித் துறையில் பொது நல அரசு அலுவலராக ,தமிழ் வளர்ச்சி இயக்குநராக ,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக ,தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ,உலகத் தமிழ் மாநாடுகளுக்கெல்லாம் ஒளியும் பொலிவும் ஊட்டும் மலர் தொகுக்கும் மாமணியாக ,ஆயிரக்கணக்கான மேடைகளில் எனக்கு அருமந்த துணைவராக, தோழராக ,அண்ணலாக என் வாழ்வின் உள்ளும் புறமும் உணர்ந்த பன்புத் திலகமாக ,உங்களால் முடியவில்லை – நீங்கள் விடைபெறுங்கள் நான் உங்களுக்கும் சேர்த்து நன்றி கூறுகிறேன் என்று மூச்சுத் திணறலோடு என்னை மார்கழிப் பெருவிழாவில் வழியனுப்பியதைச் சிலம்பின் மணிமேகலை சிற்றப்பா என்று நாள் தவறாமல் அழைக்க வாய்த்த செம்மலை ,என் தோள் முறிந்தது போல் இடர்ப்பட்டு
விம்முகிறேன்.முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருந்தபோது அவருக்கு மாரடைப்பு நேர்ந்தது ,அப்போது உடனிருந்த நாங்கள் மருத்துவ நிலையத்தில் சேர்த்ததை இப்போது எண்ணி நெகிழ்கிறேன்.ஓய்வு காணாத உள்ள உரமும் ,இலக்கியப் புலமையும் அவரை எப்போதும் நிமிர்ந்த நிற்க வைத்தன .சிலம்பொலி .ஈரோடு தமிழன்பன், நான் ,அப்துல் ரகுமான் ஆகிய நால்வரும் சேலம் சென்று வராத திங்களில்லை .அகர முதல எழுத்தெல்லாம் – இலக்கியப் பரப்பு முழுவதும் எண்ணி எண்ணி அளந்து பார்த்தவர்,ஆழ்ந்து தோய்ந்தவர் ,தன்னலமே கருதாது தமிழ்நலமே வாழ்வென்று அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு அளவில்லை .சிலம்பொலி படிக்காத நூலில்லை – பேசாத நாளில்லை – வாய் திறந்தால் தமிழ் வெள்ளம் ததும்பும் தமிழ்ப்பெருங்சுடர் .முத்தமிழ்க் கலைஞர் சொன்னது போல முரசொலியோடு இசைந்த சிலம்பொலி .
அன்னோனை இழந்த உலகம் இனி என்னாவது கொல் அளியது தானே !

Add a Comment