“மக்கள் சிந்தனை” காலாண்டு இதழில் (சனவரி – மார்ச் 2019) வெளிவந்த என் தாத்தாவின் சொற்பொழிவுக் கட்டுரை – ஞானாமிர்த சாரம் – (29.12.1939).
================================================
ஞானாமிர்த சாரம்
குன்றக்குடியில் 29.12.1939 இல் நடைபெற்ற
சைவசித்தாந்த மகா சமாசக் கருத்தரங்கச் சொற்பொழிவு
உரைவேந்தர். ஒளவை. துரைசாமி பிள்ளை
“ஞானாமிர்த சாரம்” என்னும் பெரும் பொருள் பற்றி அடியேனைப் பேசுமாறு எனக்குக் கட்டளையிட்டவர் நமது சமாசக் காரியதரிசியாகிய சைவத்திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்களே ஆவர். அவர்கள் செய்துவரும் சைவத் தொண்டும், சமயத் தொண்டும் தமிழ்நாடு நன்கறிந்த செய்தியாகும். அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றும் இல்லையாயினும், அவர்கள் பெருநலம் எய்திப் பல்லாண்டு வாழ ஆண்டவனை வழிபடுவதொன்றையே உடையோம். என் போன்றோர். அதனோடு அவர் இடும் பணிகளை ஆற்றவேண்டும் என்னும் கடமையுடையவராவார். அதனால் என் பேச்சில் நலம் உண்டாகுமாயின் அதனை அவர்களுக்கே உரிமை செய்து விடுமாறு முதற்கண் வேண்டிக் கொள்ளுகிறேன்.
சென்ற சில ஆண்டுகளாக, யான்ஞானாமிர்த நூலுக்கு விளக்கவுரை ஒன்று வகுத்து நம் சித்தாந்தத்தின் வாயிலாக வெளியிட்டு வருகின்றேன். சுமார் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் மதுரைத் தமிழ்ச்சங்கத்தினர் இந்த ஞானாமிர்த நூலைப் பதிப்பித்தனர். இதனை ஆராய்ந்து தந்த பெரியார் சேற்றூர் – திரு. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் இத்துறையில் பட்ட துன்பத்துக்கு அளவில்லை என்பது அவர் எழுதியுள்ள முன்னுரையால் விளங்குகின்றது. தற்செயலாக எங்கள் வீட்டின் பழைய ஏட்டுப் பிரதி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப் பெற்றது. அதனைப் பார்த்த போது பாட்டுக்கள் பலவும் செவ்வையாகவே காணப்பட்டன. ஆனால் அவற்றில் இலக்கணக் குறிப்பும், உரைக் குறிப்பும், பாடவேறுபாடுகளும் இருப்பக் கண்டேன். அவ்வுரைக்கும், அச்சாகி வெளிவந்துள்ள உரைக்கும் மிக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒன்று கூறுகிறேன்; “யாளி, கூவல் தூண்டும் ஆதப் புலைச்சி, காதற்காசனியாகி, மேதினி இன்னிசை எழுவர்ப் பயந்தோள் ஈண்டே” (ஞானா – 40) என்பதன் உரையில் எழுவர் என்றது கபிலர் அதிகமான் முதலிய எழுவர் என அச்சாகியுள்ள உரை கூறுகிறது; ஏட்டுப் பிரதியில் உள்ள குறிப்புரை. ” எழுவர் என்றது முனிவர் எழுவரை ” என்று கூறுகின்றது. அதனால், இவ் வேறுபாடுகளை ஆராய்ந்து விளக்கவுரை ஒன்று எழுதி வெளியிட விரும்பி நமது சமாசக் காரியதரிசி அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள், அவ்வாறு வெளியிடுவது நன்றே என உரைத்தார்கள். யானும் அவ்வண்ணமே எழுதியுள்ள விளக்கவுரையைச் சென்ற சில ஆண்டுகளாக நம் சித்தாந்தத்தில் வெளியிட்டு வரலானேன். சென்ற சில மாதங்களுக்குமுன் ஓர் எண்ணம் தோன்றியது.
“இதனை இவ்வாறே செய்துவரின் காலம் நெடிது பிடிக்கும்; முழுதும் நன்கு எழுதித் தனி நூலாக வெளியிடுவதே தக்கது” என எண்ணி வேண்டுவன செய்யத் தொடங்கினேன். அதனால், நம் காரியதரிசியவர்கள் யான் இதனைக் கைவிட்டுவிட்டதாகக் கருதலானார்கள். தில்லைத் தமிழ்க் கழக ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொருள் நூல் ஆசிரியரும், என் இனிய தோழருமாகிய உயர்திரு. S.K. கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள் என்னை இந்த ஞானாமிர்தத்தைப் பற்றியே பேசவேண்டும் என்றார்கள். அப்போது செவ்வியபடி எடுப்பதற்காகப் பிரதிகளை வேற்றூருக்கு அனுப்பியிருந்தமையால் முடியாது போயிற்று. போயினும், இம்முறை குன்றக்குடி முருகன் திருமுன் அது வெளிப்பட வேண்டும் என்பது திருவருள் முடிபு போலும் என்று எண்ணி, என் மனமொழிகளால் ஆண்டவனை வேண்டுகின்றேன். இது குறித்து என்னை ஊக்கிய திரு. கோவிந்தசாமிப் பிள்ளை M.A., அவர்களுக்கும் என் பணிவான நன்றி செலுத்துகிறேன்.
பெரியோர்களே, ஞானாமிர்தம் என்கிற போதே, குற்றமோகோதோ ஏதுமில்லாத அமுதமாகும் இது என்பது விளங்கும். குற்றமும் கோதும் உள்ளதாயின். அதனை வடித்துச் சாரம் காண்பது இயல்பாகும். ஆனால், இங்கு சாரம் என்றொரு சொல்லைப் பெய்து நம் காரியதரிசியார் குறித்துள்ளார்கள். வேண்டாத ஒரு சொல்லைப் பெய்து கூறுவது வேறொரு பொருளைக் கருதுமிடத்து உண்டு. அதனால், ஞானாமிர்தம் என்பது ஒரு செவ்விய தமிழ்ச் சைவப் பெருநூல் என்றும், அதனுடைய சுருங்கிய கருப்பொருள்தான் அடியேனால் பேசப்படவேண்டும் என்றும் சமாசம் கட்டளையிட்டது என்று கருதுகின்றேன்.
அமுதம் என்று சொல்லுகிறபோதே, அதன் ஓசை இரண்டு செய்திகளை நம் நினைவிற்குக் கொண்டுவருகிறது. ஒன்றுதேவருண்ட சாவா மருந்து என்பது ; மற்றொன்று பண்டு. அது குறித்துக் கடல்கடையப்பட்டசெய்தி. சாவா மருந்து என்பது சாதலை நீக்க வந்த – உயிர் உடலை விட்டு நீங்குவதாகிய சாதலை நீக்க வந்த அமுதமாகும். ஆகவே, உடலின் நீங்காது உயிர் நெடிது நிற்றற்குதவும் மருந்தாகியஅந்த அமுதத்தினும் இந்த அமுதம் வேறுபட்டது. உயிரை உடலின் நீக்குவோரை நண்பர் என்றும் ஒன்றுபடுத்துவோரைப் பகைவர் என்றும் கூறும் பான்மை உடையது இந்த ஞானாமிர்தம்.
” ஈன்றோர் பகைஞர் கீழ்ந்தோர் நட்பே
அருஞ்சிறை விடுநரின், அருஞ்சிறை இடுநரின்
யார்கொல் உறுதி யோரே ”
என்று இது கூறுகின்றது. ஆனால் கடைந்து கொள்ளப்படும் செய்தியை நோக்கின், இந்நூல் அதனைத் தழுவி,
” ஆகம மத்தின், அருளின கோலத்து
ஆசிரி யமலன் பாத் பங்கயப்
போதொளி யிலகப் புனைந்து , மாதவன்
அருள் உபதேச அரும்பெறல் நோன்ஞாண்
மதிமாத் தடக்கைக் கதுமெனப் பூட்டி
முறுக வாங்க மறுகுபு கலுழந்து
அச்சா னாழி ஏற்பட எழுதலின்
ஞானா மிருதம் என்ப
ஆனாச் செவ்வி மாநூற் பெயரே ” – ஞனா – 3
என்கின்றது.
இனி, இந்நூலாசிரியர் வாகீச முனிவர் என்பவர், இவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கோடலம்பாகை என்னுமிடத்தில் இருந்த பரமானந்த முனிவரிடம் சித்தாந்த சைவ மெய்நெறியை உணர்ந்தவர். இச்செய்தி, இந்நூலில் ,
” பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ
வாடாத் துப்பின் கோட லாதி
அருளா பரணன் அறத்தின் வேலி
அருள் மொழி திருமொழி போல ” – ஞனா – 28
என வருவதாலும்.
” இருள்நெறி மாற்றித்தான் தாணிழல்இன்ப மெனக்களித்தோன்
அருள்மொழித்தேவன் நற்கோடலம் பாகை யதிபனெங்கோன்
திருநெறி காவலன் சைவ சிகாமணி சில்சமய
மருணெறி மாற்ற வரும்பர மானந்த மாமணியே ”
என இவர் பாடியதாகக் கூறப்படும் தனிச்செய்யுளாலும் தெரிகின்றது.
வேறு குறிப்புகள் மிகுதியாகக் கிடைத்தில. கிடைத்துள்ளவற்றைக் கொண்டு பின்னர் ஆராய்ச்சி செய்யக் கருதி இதுபோது நிறுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இவர் பாடிய பாட்டுக்களை எங்கள் சைவத் தனிமுதலாகிய சிவஞான முனிவர் யாம் செய்த தவப்பயனாகத் தந்துள்ள மாபாடியத்தும், பிறாண்டும் பொன்னே போற் போற்றி ஆண்டிருக்கின்றார் எனின், இப்பாட்டுக்களின் நலங்கள் எத்துணைச் சிறப்புடையது என்பது யாவர்க்கும் நன்கு விளங்கும். பெரியோர்களே, இனியான் பேசவேண்டியது ” ஞானாமிர்த சாரமே ” யாதலின், இனியும் இவற்றைப் பற்றிக் கூறிச்செல்வது மற்றொன்று விரித்தல் ஆகும். அதனால் இனி யான் பொருளுக்கு வருகின்றேன்.
( தொடரும் )

Add a Comment