‘தினமணி கதிர்’ வார இதழில் (16.4.2019) வெளியான எந்தையாரின் கட்டுரை
__________________________________________________
கடந்த சில திங்கள்களாக கதையாசிரியர் பிரபஞ்சன், ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், துணைவேந்தர் அறவாணன், முதுபெரும் புலவர் சிவசுப்பிரமணியன், சிலம்பொலி செல்லப்பன் ஆகிய நல்லறிஞர்களின் இழப்பு ஆற்றாமையும் அவலத்தையும் பெருக்குகின்றது .
அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தொண்ணூற்றைத் தொட்டு வருந்தினாலும் அவர் நம்மோடு இருக்கின்றார் என்பதே நமக்கு ஆறுதலாக இருந்தது.
1958 – ஆம் ஆண்டு நான் முதுகலைத் தேர்வெழுதும்போது என்னோடு உடன் இருந்தவர் சிலம்பொலி.
அன்புப் பிழம்பான சிலம்பொலியைக் கணக்குப் பேராசிரியராக, மாவட்டக் கல்வி அலுவலராக, உள்ளாட்சித் துறையில் பொது நல அலுவலராக, தமிழ் வளர்ச்சி இயக்குநராக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக, உலகத் தமிழ் மாநாடுகளுக்கெல்லாம் ஒளியும் பொலிவும் ஊட்டும் மலர் தொகுக்கும் மாமணியாக, ஆயிரக்கணக்கான மேடைகளில் எனக்கு அருமந்த துணைவராக, தோழராக, அண்ணலாக என் வாழ்வின் உள்ளும் புறமும் உணர்ந்த பண்புத் திலகமாக உடன் வாழ்ந்தார்.
முப்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ் வளர்ச்சி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மாரடைப்பு நேர்ந்தது. அப்போது உடனிருந்த நாங்கள் மருத்துவ நிலையத்தில் சேர்த்ததை இப்போது எண்ணி நெகிழ்கிறேன். ஓய்வு காணாத உள்ள உரமும், இலக்கியப் புலமையும் அவரை எப்போதும் நிமிர்ந்து நிற்க வைத்தன. சிலம்பொலி, ஈரோடு தமிழன்பன், நான், அப்துல் ரகுமான் ஆகிய நால்வரும் சேலம் சென்று வராத திங்களில்லை. அகர முதல – இலக்கியப்பரப்பெல்லாம் முழுவதுமாக எண்ணி எண்ணி அளந்து பார்த்தவர், ஆழ்ந்து தோய்ந்தவர், தன்னலமே கருதாது தமிழ்நலமே வாழ்வென்று அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு அளவில்லை. சிலம்பொலி படிக்காத நூலில்லை – பேசாத நாளில்லை – வாய் திறந்தால் தமிழ் வெள்ளம் ததும்பும் தமிழ்ப்பெருஞ்சுடர். முத்தமிழ்க் கலைஞர் சொன்னது போல முரசொலியோடு இசைந்த சிலம்பொலி.
கரும்புச் சாறாக இளம்பிள்ளைகளுக்குக் கணக்குப் பாடத்தைக் கற்றுத் தந்த அவருடைய மதிநுட்பம் பாராட்டப்பட்டதோடு அவர் எழுதிக்காட்டிய கணக்கு நூல்கள் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயன்பட்டன. கணக்கில் தொடங்கிய வாழ்வு – பதினெண்கீழ்க்கணக்கும், பதினெண்மேல்கணக்கும் எவற்றையும் பாராமல் எடுத்துச் சொல்லும் புலமைச் செழுமையை வழங்கியது.
நண்பர் சிலம்பொலி என்னைத் தம்பி என்று அழைப்பதில்லையே தவிர, தோளோடு தோள் இணைத்துத் தோழராகவும், துணைவராகவும் பல நிலைகளில் என்னைக் காத்துவந்த பரிவுக்கு இணை சொல்லமுடியாது. எந்த நேரத்திலும் அவர் இல்லத்திற்குச் சென்றால், அவருடைய துணைவியாரும், மணிமேகலை, தொல்காப்பியன், கெளதமி, கொங்குவேள், நகைமுத்து ஆகிய எல்லோரும் விருந்தோம்பலில் தாயினும் சாலப்பரிவு காட்டுவதோடு என்னை “சிற்றப்பா’ என்று தான் அழைப்பார்கள்.
கவியரசர் ஈரோடு தமிழன்பனைத் தன் இளவலாக அரவணைத்து அவருக்குத் திருமணத்திற்குப் பொருத்தமான துணைவியாரைக் கண்டு தேர்ந்து அவர் வாழ்க்கையை மங்கலமாக்கிய மாட்சி சிலம்பொலியாரையே சாரும்.
ஓயாமல் தொண்டு செய்வதிலும் பிறர்க்குரியாளராகப் பணியாற்றுவதிலும் அவர் சலித்ததில்லை.
உதவுவது போலவே கை சலிக்க எழுதும் ஆற்றலும் அவர் உடன் வளர்ந்ததால் இன்றைய தமிழ்நாட்டுக் கவிஞர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேராவது அவருடைய முன்றிலில் காத்திருந்து அணிந்துரை பெற்றதை நான் நன்கறிவேன்.
சிலம்பொலியின் சொற்பொழிவு எப்போதும் விரிவாக அமையும். நினைவிலிருந்து நூறு தொடர்களேனும் கூறுவதோடு, தம் நெடிய வாழ்வில் ஆங்காங்கே தாம் கண்ட நிகழ்ச்சிகளையும், நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் நடைமுறைகளையும், பாடல்களையும், விடுகதைகளையும் இடையிடையே இணைத்துச் சொல்லும் பாங்கு அவருக்கே அமைந்த தனிப்பாங்காகும்.
அந்நாளில் மனப் பயிற்சியாகவே கல்வி கருதப்பட்டது. மனனம் செய்யும் பெருந்திறமையால் கடல் மடை திறந்த வெள்ளம் போலச் சீறாப்புராணமானாலும், தேம்பாவணியானாலும், கம்பர் காதையானாலும், இராவண காவியமானாலும் நூறு பாடல்களையேனும் சொல்லி வியப்பிலாழ்த்துவார்.
மார்கழித் திங்களில் நடந்த பாராட்டு விழாவில் “”உங்களுக்குத் தளர்ச்சியாக இருக்கும், மணிமேகலை சிற்றப்பாவை வீட்டுக்கு அனுப்பு” என்று வழி அனுப்பினார். நான் இருந்து அவர் சொல்லைப் பொய்யாக்கி விட்டேன். நான் வழியனுப்ப நேர்ந்தது. என் தோள் முறிந்தது போல் இடர்ப்பட்டு விம்முகிறேன்.
என்னோடு உடன்வந்த டாக்டர்.பத்மானந்தம் ஆறுதலாகக் கூறிய உரையை அப்படியே எழுதுகிறேன்
” சிலம்பொலி என்னும் ஒரு மாமணி இனி
ஒலிக்கப் போவதில்லை.
தமிழுக்காகவே எழுதிய கைகள்
இனி எழுதப் போவதில்லை.
தமிழையே பேசிய வாய் நிரந்தர அமைதி கொண்டது. பல சமயங்களில் அவர் நமக்குத் தந்த ஆறுதலும் அரவணைப்பும் இனிக் கானல் வரி தான்.
விடியாத மேன்கரையில் நாம் காத்திருப்போம் .
இனி எஞ்சியவை நீங்கா நினைவுகளே.”
சிலம்பொலியால் நேர்ந்த இலக்கிய உலகத்தின் வெறுமையை இளைஞர்கள் இட்டு நிரப்ப வேண்டும்.
– ஒளவை நடராசன்

Add a Comment