POST: 2019-05-08T10:17:06+05:30

தங்கமகனா சாய்ந்தது?
======================

இந்தத் திடுக்கிடும் செய்தி கேட்டு, என் மனம் தவியாய்த் தவிக்கிறது. தியாகராசர் கல்லூரியில் என் மாணவராக எந்தப் பாடத்திலும் முதன்மை பெற்று விளங்கியதோடு மருத்துவக் கல்லூரி தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தங்கப்பதக்கம் பெற்ற தங்க மகன். அவருடைய தந்தையார், என் இனிய நண்பர். லோக முத்து கிருஷ்ணனின் எதிர்காலம் இளைஞர்களின் நல்வாழ்வுக்கு மிகப்பெரிய பயனை நல்கும் என்று நான் பலமுறை பேசியிருக்கிறேன்.

நரம்பியல் துறையில் நாயகமாகத் திகழ்ந்து ஓய்வுக்குப் பிறகு வீட்டிலேயே தேர்ந்தெடுத்த சில நோயர்களுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தவர்.

ஒரு திங்களுக்கு ஒரு முறை என்னோடு பேசுவார். தாங்க முடியாத இந்த வேனில் சில பேரைத் தவிக்க விடுகிறது. சில பேரைச் சாய்த்து விடுகிறது. அந்த வகையில்தான் அவருடைய எதிர்பாராத இழப்பு மருத்துவ உலகத்தின் ஒரு மாணிக்கக் கல்லை இழந்தது போன்ற மாபெரும் இழப்பாகும்.

மதுரையில் மாணவப் பருவத்தில் இருந்து சென்னையில் ஜப்பான் நாடு சென்று திரும்பிய வரவேற்புக்கு நான் வாழ்த்து சொன்னதையும் இப்போது என் மனம் நினைந்து நெகிழ்கிறது. நேற்று இருந்தார்… நம் எதிரே வீற்றிருந்தார்…. பால்தெளிக்க வாருங்கள் என்று உறவினர்கள் அழைத்ததை என் மனம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

லோக முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் அரிதாகப் பிறப்பார்கள். பெரிதாக வெற்றி பெறுவார்கள்.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *