POST: 2019-05-09T12:01:45+05:30

******************************************************************
இந்தக் குறிப்புகள் மறைந்த மருத்துவ மாமணி லோகமுத்துக் கிருட்டிணன் அவர்களின் தமிழார்வத்தையும் திருக்குறள் பற்றையும் சுட்டிக் காட்டுகின்றன. இவை 01.03.1983 நாளைய செந்தமிழ்ச்செல்வி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
******************************************************************

சப்பானிய மதிப்பும் மருத்துவ மாமணியும் !
=========================================

திருக்குறளைச் சப்பானிய மொழியில் பெயர்த்த சப்பானியப் பேரறிஞரின் கடிதம் 1981 ஆம் ஆண்டில் செப்டம்பர் 15 இல் எழுதப்பட்டது .

அன்புள்ள டாக்டர் லோக முத்துக்கிருட்டிணன் அவர்கட்கு, என்னுடைய பெயர் இன்னமும் தங்களுடைய நினைவில் இருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் ” An Apple of Gold ” என்னும் அழகிய புத்தகமொன்றைத் தாங்கள் பதிப்பித்துள்ளீர்கள். நான் திருக்குறளைத் தமிழில் மொழிபெயர்த்தவன்.

நூலகர், பதிப்பாளர் திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்களின் அழைப்பின்பேரில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்துவிட்டுத் தாயகம் திரும்பியபோது, அவர் என்னைச் சென்னையிலுள்ள தென்னிந்தியச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிலையத்துக்கு அழைத்துச் சென்று தலைவர் திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கட்கு அறிமுகம் செய்து வைத்தார். திரு.சுப்பையா பிள்ளையவர்கள் இந்த முதிர்ந்த அகவையிலும் நல்ல உடல் நலத்தோடு இருந்து வருகிறார்.

அவர் ” An Apple of Gold ” என்னும் அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து என்னை வியப்பிலாழ்த்தினார். இந்தியாவிலிருந்த போது திருக்குறளைப் பற்றி நான் என்ன எழுதிவிட்டு வந்தேனோ அதே சொற்றொடர்கள் அப் புத்தகத்தில் இருக்கக் கண்டு அளவிலா வியப்புற்றேன். அதே நேரத்தில் நன்றாக இல்லாத என்னுடைய கையெழுத்தைக் கண்டு நானே வெட்கப்பட்டேன். இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர் ஒரு நரம்பியல் டாக்டர் என்பதையும், அவர் தம்முடைய சொந்தச் செலவிலேயே இதனை வெளியிட்டுள்ளார் என்பதையும் கேள்விப்பட்டேன். என்னுடைய நன்றியையும் நன்மதிப்பையும் எப்படி வெளிப்படுத்துவதென்றே எனக்குத் தெரியவில்லை. தங்களுடைய முகவரியைத் தெரிந்திருந்தும் இதுகாறும் தங்கட்குக் கடிதமேதும் எழுதாமற் போனமைக்கு வருந்துகிறேன். இதனை மன்னிப்பதற்கே இடமில்லை.

தாயகம் திரும்பியதும், திருக்குறள் மொழிபெயர்ப்பைச் ‘சொந்தச் செலவிலேயே பதிப்பிப்பது என முடிவு செய்தேன். அதற்காக நான் அரும்பாடுபட வேண்டியிருந்தது. இப்போது அப் பணி முடிந்தது. என் புத்தகத்தைத் தங்கட்கு அனுப்புகிறேன். அதுவே, தங்களுடைய அன்புக்கு நான் செலுத்தும் நன்றியாகும். என்னுடைய உறவினர், நண்பர்கள், எங்கள் சமுதாயத்தில் முதன்மையானவர்கள், இந்திய நாட்டிடம் பற்றுக்கொண்டுள்ள பேராசிரியர்கள் ஆகியோர்க்கு இப்புத்தகத்தை வழங்கினேன். இதனால் “திருவள்ளுவரும் அவரது குறளும்” சப்பானில் படிப்படியாகப் பரவத் தலைப்பட்டுள்ளது. அவ்வகையில் என்னைப் பற்றிக் கீழ்வரும் விவரங்களைத் தருகிறேன்.

பெயர் : சுசோ;
குடும்பப் பெயர் : மட்சுனகா.
பிறப்பு: 1921 இல்;
கல்வி : சிசுவோகா உயர்நிலைப்பள்ளி, சிசுவோகா நகர்; ஹமாமட்சு நுண்கலைப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று, ஒகாசா பல்கலைக் கழகத்தில் இயைபியல் மேற்படிப்பு; நொதியியல் கலைப் பயிற்சி;

தொழில் : சிமேடா தொகை பல்ப் கம்பெனியில் இயைபியல் பொறியியலாளராகவும், ஆய்வுக்கூடத் தலைவராகவும் 1946 -1976 வரை பணியாற்றியதோடு தனிப்பட்ட முறையில் நுண்கலை மொழிபெயர்ப்பாளராகவும் பணி செய்தேன்.

மனைவி : மிட்சுகோ, அகவை 57;
அன்னையார் : யாசு, அகவை 83;
மக்கள் மூவர்.
அவர்கள் தனித்தனியே வாழ்கின்றனர்.

சிமேடா எனும் ஊர் டோக்கியோவுக்கும் நகோயாவுக்கும் இடையே உள்ளது. டோக்கியோவிலிருந்து சின்கான்சென் என்னுமிடம் செல்ல 2 மணி நேரம் ஆகும். வாய்ப்புக் கிடைக்கும் போது ஒருமுறை வாருங்கள். நான் சென்னையில் ஓர் இதழ் அலுவலகத்தில் இருந்தபோது, சப்பானில் என்னைத் தேடி, சென்னை மருத்துவர் ஒருவர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். அது தாங்களாக இருக்கும்போலும். நான் தங்களை நேரில் பார்த்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். தங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது எனக்குக் கடிதம் எழுதுங்கள்.

தங்கள் நன்றியுள்ள,
சுசோ மட்கனகா

டாக்டர் லோகமுத்துக்கிருட்டிணன் அவர்களுக்குச் சப்பான் நாட்டுப் பல்கலைக்கழக விருது
============================================

சென்னை மருத்துவக்கல்லூரி, மூளை நரம்பியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் லோகமுத்துக் கிருட்டிணன் அவர்கள் மண்டை மற்றும் மூளை தொடர்பான நரம்பு நோய்கள் தடுப்புப் பற்றி ஆய்வு நடத்தி, கண்டறிந்த உண்மைகளைப் பாராட்டி, அண்மையில் சப்பானிய நாட்டுப் பீஜிட்டா காகீன் பல்கலைக்கழகம், அவருக்குப் புதிய அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகளை விருதாக வழங்கிச் சிறப்பித்தது. பதினேழாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தக் கருவிகளைத் திரு.லோகமுத்துக் கிருட்டிணன் அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார் .

டாக்டர் லோகமுத்துக் கிருட்டிணன் அவர்கள் எழுதிய நரம்பு மருத்துவம் சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட அரிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *