POST: 2019-05-10T10:44:28+05:30

மருத்துவர் லோக முத்துகிருஷ்ணன் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தெளிந்த நிலையில் மருத்துவ உலகத்துக்குப் பெரும்பணி ஆற்றி இருக்க முடியும் என்ற ஏக்கத்தைக் கேட்டு, என் இளவல் டாக்டர் மெய்கண்டான் தானே ஒரு முதுநிலை மருத்துவராக இருந்து எனக்கு அனுப்பிய தகவல் என் நினைவைப் பல்லாண்டுகளுக்கு முன்பு பின்னிழுத்துச் சென்றது.

உயரிய மருத்துவர்களையும் ஓய்வுக்குப் பின்னர்த் தனி ஆர்வம் காட்டி, அரசு எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க வேண்டும். பிரான்சு நாட்டில் ஓய்வு பெற்ற துணை வேந்தர்களுக்கு இரண்டு அரசு பணியாளர்களை அவரோடு எந்நேரமும் இருக்குமாறு அமர்த்தியிருந்தார்கள் என்றும் அவருக்கு ஒரு வளமனையை அரசு ஒதுக்கிக் காத்துக் கொண்டது என்றும் நண்பர் கூறக் கேட்டிருக்கிறேன்.

தனிமை என்பது, தளர்ந்த வயதில் சிந்தனை தடுமாற்றத்தைப் பலருக்கு ஏற்படுத்துகிறதோ என்று எண்ணுகிறேன்.

—– ஔவை நடராசன்

****************************************************************
டாக்டர் ஔவை மெய்கண்டான் எழுதியது வருமாறு…..
****************************************************************

மருத்துவர் லோக முத்துகிருஷ்ணன் அவர்களின் மறைவு மருத்துவ உலகிற்குப் பேரிழப்பாகும். மதுரை மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவனுக்கான பரிசு பெற்று மூளை, நரம்பு அறுவை சிகிச்சை துறையில் சிறந்த மருத்துவராகத் திகழ்ந்தவர். எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்.

என் தமக்கை திருமதி திலகவதி நரசிம்மன் அவர்கள், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் GBS -Guillain-Barre syndrome (ஓர் அரிய புற நரம்பு மண்டலக் கோளாறு ஆகும்) என்ற நோயினால் அவதிப்பட்டார். திடீரென இரண்டு கைகளும், கால்களும் செயல் இழந்து படுத்த படுக்கையாகி மூச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது கிடைக்கும் அரிய மருந்துகளும், செயற்கை மூச்சுக் கருவிகளும் அதிகம் இல்லாத காலம் அது. Prof.LMK அவர்களின் தலைசிறந்த மருத்துவத்தினால் உடல் நலம் நன்கு தேறி நடமாட முடிந்து இன்று அறப்பணிகள் பல செய்கின்ற அளவுக்குத் தேறி இருக்கிறார் என்றால் அது அவருடைய திறமையின் எடுத்துக்காட்டு எனக் கருதலாம். Prof.LMK அவர்களின், “மூளை உள் அழுத்தம்” பற்றிய மருத்துவ ஆய்வு இன்றும் உலக அளவில் பேசப்படுகிறது. அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *