POST: 2019-05-21T07:48:28+05:30

வெண்ணிலா மண்ணாயிற்று !
================================

இந்த நாள் என்னை அழவைக்கின்ற நாளாக இருக்கின்றது.

என் அருமை தமக்கை மகளான வேனிலா ஸ்டாலின் தமிழ் முதுகலை படித்து பி.எச்டி. பட்டமும் பெற்று அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் சிறப்புறப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஔவையின் பேத்தி என்ற அருமந்த பெயரைக் காத்த வகையில் வேனிலாவுக்குச் சிறப்பான பெருமை உண்டு. மைத்துனர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தைக் காத்துக் கொண்டு தான் பெற்ற செல்வங்களை போற்றிக் காத்த வகையில் ஈடு சொல்ல முடியாத பெருமிதம் கொண்டிருந்தார்.

அருமைப் பெயர்த்தி சுகன்யா சிவகுமார் திருமகன் கௌதமனையும் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள் மதிப்பிற்கினிய மக்கட்செல்வங்கள்.
வேனிலா என்னிடத்தில் பேசும்போதெல்லாம் ” மாமா எனக்கு எந்த மனக்கவலையும் இல்லை. மகன், மருமகன், மகள், மருமகள் நால்வரும் சிறப்பாக இருக்கிறார்கள். எனக்குத் தமிழ்நாட்டுக்கு வந்து உங்களிடத்தில் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நிறைவேறாத ஆவலாக இருக்கிறது ” என்று கண்கலங்கச் சொன்னார்கள்.

வாழ்க்கையில் அடுக்கி வந்த இடுக்கண்களை உடைத்து எறிந்து வீரப்பெண்மணியாக வாழ்ந்தார்கள்.
என் மாமன் மகன் டாக்டர் எழில் ஒப்பற்ற பண்பு நலன்களால் உயர்ந்து ஒளிர்பவர் .
பண்பாட்டின் மேலோங்கி நிற்கும் எழில் அக்காவின் உடல் நலத்தில் தனிப்பெரும் அக்கறை செலுத்தினார்.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மகள், மருமகன் அணைப்பில் வேனிலாவின் உயிர் பிரிந்தது.

உருக்கமான நெஞ்சுடைய வேனிலாவுக்கு எப்படி அடைப்பு வந்தது ? என்று விளங்கவில்லை.

எங்கள் மரபின் திருவிளக்கு
அணைந்துவிட்டது.

தங்கையைப் பிரிந்த டாக்டர் எழிலுக்கும், பேராசிரியர் கயற்கண்ணிக்கும்,
அண்ணன் இளவரசுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது ?

சுகன்யா அமெரிக்காவிலிருந்து பேசி என்னைத் தேற்றினார் !

தாத்தாவினுடைய ” நற்றிணை உரைநலம் ” வேனிலாவின் எழுத்தோவியமாகும் அது என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்நாட்டு நிலா இங்கே வீசும் வேனிலைக் காணாமல் அமெரிக்க மண்ணில் தேய்ந்துவிட்டது.

அமெரிக்காவில் கிடைக்கும் மருத்துவம் தமிழ்நாட்டில் கிடைக்காது என்று நினைத்துவிட்டாயா !
மாமாவும் அக்காவும் உன் நினைவுடனே காத்திருந்தார்கள் போலத் தெரிகிறது .

” பிள்ளை நிலா வெள்ளை நிலா கொள்ளை போய்விட்டது ” .

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *