கனிந்த தமிழாசிரியர் கணபதி பிள்ளை
=========================================
ஆன்றமைந்து அடங்கிய கொள்கைச் சான்றோராக அமைதியாக வாழ்ந்து தம் மக்கட் செல்வங்களை ஒப்பற்ற செல்வங்களாக வளர்த்து மிளர வைத்த புலவர் கணபதி தன்னுடைய கனிந்த வயதில் மறைந்தார் என்பது பிரிவுத் துயர் என்ற அளவில் கலக்கம் தருவதாகும்.
அருமைத் திருமகள் ஆண்டாளை தமிழ்த்துறையிலும் இயல்பாகவே தேர்ந்து தெளிந்த திருமகளாக வளர்த்தார்.
மகனார், அறிவியல் துறையில் முன்னின்று வாழ்வில் வாகை சூடினார்.
ஆண்டாளின் வளர்ச்சியின் பெருமிதமும் தந்தைக்கு பெரு மகிழ்ச்சியைத் தந்தது. மகளால் பெருமை பெற்ற தந்தை என்ற மாட்சி சிலருக்கே வாய்ப்பதாகும். பள்ளித் தமிழாசிரியராக இருந்து பன்னூல் ஆசிரியராகவும் திகழ்ந்த கணபதி பிள்ளை அவர்களோடு பழகி பேசியிருக்கிறேன்.
பெரும்பாலும், அவரை படிப்பகங்களிலும், பாரதி கூட்டங்களிலும் பார்த்து பழகியிருக்கிறேன்.
நெல்லை தந்த பிள்ளையின் கனவுகள் நிறைவெய்தின என்றே மன ஆறுதல் கொள்ளலாம். மாதரசி ஆண்டாளுக்கு – மருகர் பால இரமணிக்கு எங்கள் நெஞ்சுருக்கத்தை கூறுவதன் மூலமே ஆறுதல் கொள்ள முடிகிறது.
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment