கொள்கைச் செம்மல் குணசேகரன்
====================================
முனைவர் குணசேகரன்,
இணை இயக்குநர்,
கலைப்பண்பாட்டுத்துறை,
தமிழ்நாடு அரசு.
பணி நிறைவு பாராட்டுரை
****************************************
(18.10.1990 முதல் 31.05.2019 வரை)
நேற்று நிகழ்ந்தது போல் என் நினைவில் நிற்கிறது. அடக்கமும் ஒடுக்கமும் நற்பண்பும் நல்லிணக்கமும் கொண்ட நண்பர் குணசேகரன் மறைந்த வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களால் எனக்கு அறிமுகம் ஆனார்.
அன்பிற்கும் பண்பிற்கும் வாய்த்த அருமந்தத் திருமகனாகிய குணசேகரன் தமிழ் வளர்ச்சித் துறையிலும், கலைப் பண்பாட்டு துறையிலும் இணை இயக்குநர் என்ற நிலைக்கு உயர்ந்து சிறந்த பணிகளைச் செம்மையாக ஆற்றினார்.
பொதுவாழ்வில் தகுதி வாய்ந்த குணசேகரனுக்கு வாய்த்த துணைவியாரும் திருமகளின் உயர்ந்த செல்வங்களாக அவர் குடும்பத்திற்குத் துணை நின்று வருகின்றனர்.
அரும்பணி ஆற்றி அரசுப் பணிகள் புரிந்து ஓய்வு பெறும் குணசேகரன் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிப் புகழ் பெறுவார் என்பதில் ஐயமில்லை.
அலுவலால் அவருடைய இலக்கியப் பணிகள் முடிவடையாமல் முடங்கின. அவர், தன் பணிகளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இருபத்து எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், பதினான்கு நாட்கள் சிறப்பாகப் பணி புரிந்த குணசேகரனை நான் பாராட்டுகிறேன்.
—– முனைவர் ஔவை நடராசன்
#################################################
முறுவல் மாறா முரளி
======================
முனைவர் முரளி,
பதிவாளர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
பணி நிறைவு பாராட்டுரை
****************************************
பணி ஓய்வு நாள் : 31.05.2019
தஞ்சை பல்கலைக்கழகத்தில் நான் துணை வேந்தராகப் பணியாற்றியபோது, திரு.முரளி எனக்கு அணுக்கமாக இருந்தார். பல்கலைக்கழக நிலைகளையும், சட்ட நுணுக்கங்களையும், நடைமுறை பணிகளையும் நன்கறிந்த முரளிக்கு அவர் துணைவியாரும் தோளுக்குத் தோளாகவும் அவர் கை வாளுக்கு வாளாகவும் மிளிர்ந்தார்.
முரளி, முகமோ, அகமோ முதுமை அடைந்ததில்லை. எந்த அலுவலகத்திற்கு அவர் சென்றாலும் இருகரம் நீட்டி வரவேற்பார்கள்.
முரளி, பல்லாண்டுகள் வாழ்க. தான் அறிந்த கருத்துகளை வரைந்துகாட்டும் திறத்தை வளர்த்துக் கொள்வாராக.
முப்பத்தைந்து ஆண்டுகள் எட்டு மாதங்கள் எட்டு நாட்கள் சிறப்பாகப் பணிபுரிந்த நண்பர் முரளிக்கு என் வாழ்த்துகள்.
_____ முனைவர் ஔவை நடராசன்

Add a Comment