POST: 2019-06-17T11:23:36+05:30

பண்புத் திலகம் டாக்டர்.பலராமன் மறைவு !
=========================================

மருத்துவ மாமணி டாக்டர் வி.டி.பலராமன், எண்ணி ஏழு வீடுகள் தள்ளி அண்ணா நகரிலேயே எனக்கருகில் குடியிருந்தவர்.சில ஆண்டுகள் நாள் தவறாமல் நடைப் பயிற்சிக்கு என்னை அழைத்துப் போவார். பரிவும் பண்பும் ததும்பப் பார்க்கின்றவர்களிடம் அன்பொழுகப் பேசும் அவருடைய உருக்கமான நெஞ்சை நான் பலமுறை எண்ணி வியந்திருக்கிறேன்.

வெள்ளியன்று இரவு திருப்பத்தூருக்குச் சென்று தன் ஊர் மக்களுக்கு மருத்துவம் செய்துவிட்டுத் திங்கள் மருத்துவக் கல்லூரியில் தன் பணிக்கு வந்து கண்ணும் கருத்துமாகக் கடமையாற்றுவார்.இப்படிப் பல ஆண்டுகள் தன் ஊர்மக்களுக்கு ஆற்றிய பணிகளை போற்றிப் புகழாதவர் இல்லை.என் இல்லத்துக்கு வந்து எனக்கு மருந்தளித்ததோடு
என் மனைவி டாக்டர் தாரா நடராசனைப் பார்த்து
” பேராசிரியர் பேராசிரியர் ” என்று தான் மதிப்போடு பேசுவார்.

தமிழார்வத்தோடு திருக்குறளை ஓதி உணர்ந்த ஊக்கம் பெற்றிருந்தார். பெருந்தகை ” அருங்கலை அண்ணல் ” சுப்பு ரெட்டியார் தன் பெயரனை மருத்துவர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தப் பெருமிதம் கொண்டவர் சுப்பு ரெட்டியார் அவர்களை எப்போதும் போற்றிக் கொண்டிருந்தார் .

பெயர்த்தி என்ற வகையில், அவருடைய திருமகள் திருமதி.மிருனாளினி. சுப்பு ரெட்டியாருடைய நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி நெகிழ்ந்தார்கள்.

நெடிய தோற்றமும் நிலை மாறாத நெஞ்சமும் கொண்ட மருத்துவத் திலகமாகிய டாக்டர் வா.தெ.பலராமன் ஓராண்டாகவே வெளியில் நடந்து வரக் கண்டதில்லை.

ஓய்வில் முதுமையின் பிடிப்பில் கட்டுண்டிருக்கிறார் என்று கூறினார்கள். எளியவர்களின் கல்வி ஏழைகளின் துயரம் இல்லாதவர்களுக்கு உதவுவது முதலிய மன்னாயப் பணிகளில் முன்னோடியாக நின்று அவர் ஆற்றிய நற்பணிகளை நாடு மறவாது இருக்கும்.

என் மகன் பரதனின் சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியப் பெருந்தகையாகப் திகழ்ந்தவர் டாக்டர் பலராமன் அவர்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு அவர் வாழ்வு ஒரு பாடமாக இருக்கும்.

அண்ணல் பலராமன் நினைவுகள் நெஞ்சில் நிலைத்துள்ளன.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *