POST: 2019-06-20T10:41:28+05:30

==========================================
தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா
==========================================
நாள் : 12.07.2019

நூலுக்குள் நூலகம்
**************************
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை காணொளி

அறிமுக உரை
********************

1.கவியரசர் கண்ணதாசன் – ஜூன் 23 – 2016 – தினமணி கட்டுரை
2.வள்ளலார் – ஏப்ரல் 19 – 2017 – கோயம்புத்தூர்
3.ஆண்டாள் – சனவரி 7 – 2018 – இராஜபாளையம்.
4.திருவள்ளுவர் – பிப்ரவரி 19 – 2018 – மதுரை.
5.மறைமலையடிகள் – பிப்ரவரி 13 – 2018 – சென்னை.
6.தொல்காப்பியர் மே 2 – 2018 – சென்னை.
7.ஜெயகாந்தன் – ஜூன் 13 – 2018 – சென்னை.
8.இளங்கோவடிகள் – ஜூலை 7 – 2018 – தஞ்சாவூர்.
9.செயங்கொண்டார் ஜூலை 12 – 2018 – சென்னை.
10.கால்டுவெல் – ஆகஸ்ட் 25 – 2018 – திருநெல்வேலி.
11.உ.வே.சா – செப்டம்பர் 7 – 2018 – சென்னை.
12.கம்பர் – நவம்பர் 8 – 2018 – சென்னை.
13.திருமூலர் – நவம்பர் 14 – 2018 – சென்னை.
14.கபிலர் – டிசம்பர் 22 – 2018 – சென்னை.
15.அப்பர்
16. மகாகவி பாரதியார், சென்னை.
17. பாவேந்தர் பாரதிதாசன்
18.புதுமைப்பித்தன்
19.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
20.கலைஞர், சென்னை .
21. கவிக்கோ அப்துல் ரகுமான் – சனவரி 6 – 2019 – திருப்பூர்
22.ஒளவையார் – பிப்ரவரி 9 – 2019 – சென்னை.
23.பேரறிஞர் அண்ணா – மார்ச் 3 – 2019 – காஞ்சிபுரம்
24.தந்தை பெரியார் – மே 5 – 2019 – திருச்சி

ஆற்றுப்படை என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு தனி வகையாகும்.

தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயில்எடை நிலையும்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிசச் சொன்ன பக்கமும்
சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்
நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும்
மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும்
மன்னயில் அழித்த மண்ணுமங் கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயின் தோன்றிய இருவகை விடையும்
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

—– புறத்திணை, தொல்காப்பியம் நூற்பா (30)

பரிசில் பெற்று வருகிறவன் தகுதி மிகுந்தவனாகத் தன்னை மாற்றிய நிலையில் பிறரைக் கண்டு நீங்களும் அத்தகுதியைப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பிறக்கிற நூல்தான் ஆற்றுப்படையாகும். ஆற்றுப் படைகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு.

கவிப்பேரரசு வைரமுத்து தொட்டால் எதையும் வைரமாக்கும் தகுதியுடையவர். அவர் பேசினால், அவர் உதிர்க்கின்ற சொற்கள் வைரக் கற்கள். சொற் செரிவும், பொருட் பொலிவும், சிந்தனை ஆழமும், ஆய்வு நுணுக்கமும், நுட்பமும், திட்பமும் வாய்ந்த தமிழாற்றுப்படையின் இருபத்து நான்கு கட்டுரைகளையும் நான் கேட்டும், படித்தும் மகிழ்ந்திருக்கிறேன். தனிப்பெருங்காப்பியமான தொல்காப்பியத்தின் நுணுக்கத்தைக் காட்டுவதில் தொடங்கி, தந்தை பெரியாரின் வாழ்வின் பெருமிதத்தைக் காட்டி முடிக்கும் இந்த நூலுக்கு வழிகாட்டி என்பது எளிதான பொருளாகும்.

தமிழாற்றுப்படை என்று சொன்னால், தமிழுக்கு வழிகாட்டி. தமிழ் கற்க விரும்பினால், தமிழை அறிந்துகொள்ள விரும்பினால், தமிழின் நலங்களை எல்லாம் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணம் வருமானால், இளைஞர்களே வாருங்கள். எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது என்று அழைத்து வழிகாட்டுவதற்குக் கவிப்பேரரசை மிஞ்சுவதற்கு எவருமில்லை.

கவிப்பேரரசு எடுத்துப் பேசுகிற முறையும், தொடுத்துக் காட்டுகிற அழகும் எப்படியெல்லாம் இலக்கியங்களைப் படைத்துக்காட்டலாம் என்பது போல இந்தத் தமிழாற்றுப்படையை பக்கம்தோறும் புரட்டினால் பழந்தமிழ் தொடங்கி நடைமுறை தமிழ் வரை இலக்கியம் எப்படியெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதைக் காணலாம்.

தமிழாற்றுப்படை என்பது தமிழ் இலக்கியத்திலேயே ஒரு தனித்த பேறு படைத்த மாண்புடையதாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கவிப்பேரரசு வாழ்க ! அவர் கருத்து வளம் வெல்க !

—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *