பேகனுக்குப் போர்த்திய நீர்ப்போர்வை
====================================
விருதுநகர் மாவட்டத்தில் பாப்புனையும் இளைஞராக வளர்ந்து அரசு அலுவலராகப் பணியில் சேர்ந்து பல்லாண்டுகளாக உழன்றவர். வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் புரட்சித் தலைவர் தலைமையில் கவியரங்கில் பாடிய கவிஞர் பேகன் என்னும் பாண்டியனை வருவாய்த் துறை அலுவலராக வளர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தோம். அன்று முதல் அவர் நட்பும், குடும்பப் பரிவும் பல்லாண்டுகள் தொடர்ந்தன. புரட்சித்தலைவர் மனங்கவர்ந்த தமிழ்த்தாய் பிள்ளைத்தமிழ் என்ற நூலைப் பல படிகள் வாங்கி எல்லோருக்கும் வழங்கினார்.
புரட்சித்தலைவரின் அன்பு அவரை சென்னைக்கு அழைத்து வரச் செய்து பல உயர்வுகளை அளித்து இந்திய ஆட்சிப் பணி அலுவலராக அவரைச் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளராக அமர்த்தி அழகு செய்தார்.
“இகல் வேந்தரின் இயல்பறியாது தீப்புண் பட்டார்”. பணிநிறைவுக்கு முன்னாலேயே பதவி நீங்கிய கவிஞர் பேகன் முழுநேர இலக்கியச் செல்வராகத் தன்னை மாற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்தார்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் ஐம்பெருங்காப்பியங்களை மொழியாக்கம் செய்தார். பலர் பாராட்டு பெறாத மாமணியாகச் சோர்வுற்றுத் தனித்திருந்தார். என் இனிய நண்பர் மொழிபெயர்ப்புத் துறை துணை இயக்குநர் கு.பாலசுப்ரமணியன் அவருடைய பெரும்புலமைக்கு அருந்துணைவராக இருந்து வந்தார். உலக நாடுகள் பல வலம் வந்தவர். அவருடைய நன்மக்கள் அயல்நாடுகளில் சிறப்பாக வாழ்கின்றனர்.
பாண்டியன் மறைந்தார் என்ற செய்தி மனத்தைக் கலக்கியது. 90 ஆண்டு வரையிலும் தன் கையூன்றியபடியே சலியாது கடமையாற்றிய பெருந்தகை பாண்டியன் அவர்களை அவர் படைத்த மொழியாக்கங்கள் அவர் பெருமிதத்தைத் தமிழுலகத்துக்கு வழங்குமென நம்புகிறேன். கவிஞர் பாண்டியன் செய்யாத யோகமில்லை. பாடாத அம்மனில்லை. வேண்டாத தெய்வமில்லை. அவரே இப்போது இல்லையாகிவிட்டார்.
கனிந்த முதுமை இப்படித்தான் கண்மூட வைத்து விடுகிறது. கண்ணீர் ததும்புகிறது.
—– ஔவை நடராசன்

Add a Comment