===============================================
கலைமகள் ஜூலை 2019 மாத இதழில் வெளிவந்த கட்டுரை
===============================================
உலகம் போற்றும் பிரெஞ்சு அகாதெமி
*****************************************************
(பகுதி-1)
பண்பாடு, நாகரிகம், பெருமிதம், அறிவார்வம், நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்ற ஆறு தூண்களும் எழுந்து அமைந்த எழில் நாடுதான் பிரான்ஸ்.
எல்லோரும் சமம், எல்லோருக்கும் உரிமை, எல்லோரும் உடன் பிறந்தவர்கள் என்ற மூன்று மணிமொழிகளை மறை மொழிகளாக ஒலித்த பெருமை பிரெஞ்சு புரட்சியின் விளைவாகும். எப்கிரிகாயிர் என்பவரால் திட்டமிட்டு 25.10.1795-ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற ஆய்வரங்கம் தான் பிரெஞ்சு கலைக்கழகம் ஆகும். இந்த நிறுவனத்தின் இலச்சினையாக ரோமானிய ஞானக் கலைமகள் மினர்வா வடிவம் இலங்குகிறது. மொழி, கலை, அறிவியல் தொல்பொருள் மேம்பாட்டுக்காகப் பிரெஞ்சு அரசின் அரவணைப்போடு அமைந்த இந்த நிறுவனத்தை உலக நாடுகளெல்லாம் நம் ஆய்வரங்கத்துக்கு இதுதான் தாய்க்கழகம் என்று சுட்டிக் காட்டுவார்கள். 1968-இல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பிரெஞ்சு அகாதெமியைப் போல உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்குவோம் என்று பேரறிஞர் அண்ணா முழக்கம் செய்தார். அந்தக் கனவுதான் சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக உருவாக்கப் பட்டுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்வது தொடர்பான நுண்ணாய்வுக் கூட்டத்துக்கு அரசு முறைப் பயணமாக நான் அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது பிரெஞ்சு அகாதெமியைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.
‘எத்திசையும் புகழ்மணக்க இருந்த சீரிளமைத்திறம் குன்றாத தமிழணங்கே’ என்று நாம் போற்றுவது போலவே, பிரெஞ்சு மொழியைப் பேரழகு ததும்பும் பெண்ணரசியாக இலக்கிய வித்தகர் விக்டர் யூகோ எழுதியது வியப்பில் ஆழ்த்தியது. ‘பிரெஞ்சு மொழி ஒரு பெண். இந்தப் பெண் மிக அழகானவள், மிக அடக்கமானவள், மிகத் துணிவானவள், மிக உணர்ச்சியானவள், கற்புள்ளவள், மிக உயர்வானவள், மிகப் பழக்கமானவள், மிக அறிவானவள்; அவளை நேசிக்கும் நாம், அவளுக்கு நன்றி ஊட்டுபவளாக ஒருபோதும் முயன்றதில்லை என்று அறிஞர் அனடோல் பிரான்ஸ் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
கோவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கோமான்களும் வேளிர்களும் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்திருந்த நாடு, எனவே காணும் இடமெல்லாம் அவர்கள் கட்டியிருந்த மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வளமனைகள், ஒப்பற்ற பூங்காக்கள், ஓங்கிய மரங்கள் சூழ்ந்த விடுதிகள், வாவிகள், சோலைகள், எங்கு பார்த்தாலும் எழிலார்ந்த சிற்பங்கள், உன்னத ஓவியங்கள், நீல விதானம் போன்ற திரைச் சீலைகள், நித்திலப் பந்தர், கால் பதிக்கக் கூசும் கம்பள விரிப்புக்கள், அணிகள், அறைகலன், பால்நிலப் பளிங்கால் அமைத்த தரைகள் எனக் கற்களின் காவியங்களையே எங்கும் காண முடிகிறது.
இத்தகைய அரண்மனைகளும் மாளிகைகளும் நூலகங்களாகவும் ஆய்வு மாடங்களாகவும் சிந்தனையாளர் மேடைகளாகவும் அருங்காட்சியகங்களாகவும் தொல்பொருள் களஞ்சியங்களாகவும் இருபதுக்கு மேற்பட்ட மாளிகைகள் பிரெஞ்சு நிறுவனத்துக்கு பரிசளிக்கப்பட்ட உரிமையானவை.
” வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார் ” .
பாரதியார் தீட்டிய ஓவியம் தான் மனநிறைவைத் தரும். ஏறத்தாழ மைசூரும்,ஜோத்பூரும் என் நினைவுக்கு வந்தன.
மூவேந்தர்களும் அமைத்த தமிழ்ச்சங்கம் கூட மாடங்கள் நிரம்பிய மாமதுரையில் ஒரு மாபெரும் கலைக்கோயிலாக அமைந்திருக்கும் போலும்.
எனக்கொரு நினைவு வருகிறது அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களோடு என் தந்தையார் ஒருமுறை பாரிசு சென்றபோது அங்கே இருந்த நண்பர் சிவசண்முகம் அருட்பெருஞ்சோதி அன்பராவார் .
இங்கே ஒரு இராமலிங்கர் பணிமன்றம் அமைக்கலாம், அதற்கு இங்கே ஒரு இடம் பார்க்கலாம். இடமா அது கல்லால் அமைந்த ஒரு குறுங்கோட்டை அதற்கு மேலிருந்த இராமகிருஷ்ண பணிமன்றத்தையும் காட்டினார்கள்.
விலைபேசிக் கொண்டிருந்த நிலையில் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போயிற்று. எங்கு பார்த்தாலும் கல் அரங்கள் அமைந்த பழங்கால வளமனைகள் இருந்தன.
1793ஆம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஏப் கிரிகாயிர் (abbe Gregoire) முடியாட்சியின் எஞ்சிய பகுதிகளை அரசகுல அமைப்புகளை அவமதித்தார். அவர்களின் அடக்குமுறையால் உருவான இடைவெளியை நிரப்புவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆண்டு III ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக 25.10.1795 அன்று இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. ”புதிய கண்டுபிடிப்புகளைச் சேகரித்து, கலைகளையும் அறிவியல்களையும் செம்மையாக்குவது” இந்நிறுவனத்தின் பணியாகும். அறிவு, திறமை மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரோமானியப் பெண் தெய்வமான மினர்வா (Minerva) இந்நிறுவனத்தின் சின்னமாகும்.
தொடக்கத்தில், லோவேரில் (Louvre) நிறுவப்பட்ட இந்த “ அறிஞர் சபை” 1805ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில், இந்நிறுவனத்தின் உறுப்பினரான முதலாம் நெப்போலியன், முந்தைய குவாட்டர்- நேஷன்ஸ் கல்லூரிக்கு மாற்றினார். பிரான்சு நாட்டுடன் புதிதாக இணைந்த நான்கு நாடுகளைப் (பிக்நெரோல், ஆல்சேஸ், ஆர்டாயிஸ் மற்றும் ரெளசில்லான்) சேர்ந்த இளைஞர்களை வரவேற்பதற்காக, 1661ஆம் ஆண்டு கார்டினல் மசாரின் விருப்பத்தின்படி இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. அரை நிலா வடிவில், செயின் (Seine) நதியை நோக்கி அமைந்த கட்டடமும், வெளிப்புறத்தில் வட்டமாகவும் உட்புறத்தில் நீள்வட்ட வடிவிலும் அமைந்துள்ள அக்கட்டடத்தின் இரட்டை மாடமும் லூயிஸ் லி வோ (Louis Le Vau) என்னும் கட்டடக் கலை வல்லுநரின் அளப்பரிய திறமைக்குச் சான்றாக இன்றும் சிறந்து விளங்குகிறது.
அரண்மனைக்குள் இந்நிறுவனம் வந்தபோது, அந்தோனி வாதோயர் (Antoine Vaudoyer) அதன் வழிபாட்டறையை விவாத அறையாக மாற்றினார். ஒலியைக் குறைப்பதற்கும் ஒலியியல் பிரச்சனைகளைக் களைவதற்கும் ஒரு போலி மர மாடம் பயன்படுத்தப்பட்டது. சொற்பொழிவு மாடங்களும் 1200 நபர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டன.
1950 ஆம் ஆண்டுகளில் கட்டடக் கலைஞர் ஆண்ட்ரே வண்ணம் தீட்டப்பட்டுச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஓரளவு சேதமடைந்த அலங்காரங்களைப் புதுப்பிக்கக் கருதாமல், லீ வா-வின் (Le Vau) மீண்டும் கண்டறியப்பட்ட கட்டடக் கலையின் ஒரு அங்கமாக, கட்டடக் கலைஞர் ஆண்ட்ரே கட்டான் என்னும் கட்டடக் கலைஞர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். 19ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி அடிக்கடி கடுமையாக விமர்சிக்கப்பட்டன. முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. வாதோயாரால் உருவாக்கப்பட்ட அமைப்புகளுள் மீதமிருப்பது தலைவர் சொற்பொழிவு மாடம் மட்டுமே ஆகும்.
பிரான்சு கல்வி நிறுவனம், 1816 மற்றும் 1832 ஆகிய ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது முதல், அதில் இடம்பெற்றுள்ள ஐவரும் குடியரசு தலைவரின் பாதுகாப்பின் கீழுள்ள பொதுச் சட்டத்தின் கீழ் வரும் சிறப்பு நிலை சட்டமுறை நபர்களாவர். எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமாகத் தன்னைத்தானே நிருவகித்துக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், மனிதநேயம், அறிவியல் மற்றும் கலைகளைச் செம்மைப்படுத்திப் பரப்புவதில் ஆதாயம் ஈட்டும் செயலில் ஈடுபடுவதில்லை அல்ல.
இந்நிறுவனம் மத்திய நிருவாக ஆணையம் மற்றும் அவ்வாணையத்தால் மூன்றாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வேந்தரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. அந்நிறுவனத்திலுள்ள கல்வியாளர்களுள் இருந்து ஒருவர், ஓர் ஆண்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பொது விழாக்களில், அந்நிறுவனத்தின் சார்பாக அந்தத் தலைவர் கலந்து கொள்வார். மேலும், பொதுக் கூட்டங்களுக்கும் முறையான அவைகளுக்கும் அவர் தலைமையேற்பார்.
பிரெஞ்சு நிறுவனம்
==================
இந்தப் பிரெஞ்சு நிறுவனம் கார்டினல் டி ரிச்சிலி அவர்களால், 1635ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட பிரான்சு நிறுவனத்தை இன்று கொண்டுள்ள ஐந்து நிறுவனங்களுள் முதல் நிறுவனமாகும்.. ”நமது மொழிக்கு உறுதியான விதிகளை வரையறை செய்வதும், அதனைத் தூய்மையானதாகவும் சொல் திறன் மிக்கதாகவும் ஆக்கி, கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டையும் எடுத்துரைக்க இயலும் வகையில் அதனை உருவாக்குவதால்” இந்நிறுவனத்திற்கு முதலில் வழங்கப்பட்ட பணியாகும். இதன் அடிப்படையில், பிரெஞ்சு அகராதி வெளியீட்டின் வாயிலாகப் பிரெஞ்சு மொழியை இந்நிறுவனம் கண்காணித்துப் பிரெஞ்சு மொழி பேசும் உலகைப் பாதுகாக்கிறது. இதில், 40 சட்டப்படியான உறுப்பினர்கள் உள்ளனர்.
கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்லீஸ் எழுத்துகள் நிறுவனம்
====================================
கால்பெர்ட் என்பவரின் முயற்சியால் 1663ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. வரலாறு குறித்த தகவல்கள், மொழிகள் மற்றும் நாகரிகங்களுடன் தொடர்புடைய கலை, மொழியியல் மற்றும் மனிதநேயங்களின் வரலாறு ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இவை குறித்த தகவல்களைப் பிறருக்குக் கொண்டு செல்வதும் இதன் நோக்கமாகும்.(பழங்காலம் முதல் வகுப்பு வாரியான காலம் வரை) வரலாற்று அறிவியல்களுடன் (வெட்டெழுத்தியல், காசியல், தந்திரவியல் முதலியவை) தொடர்புடைய தலைப்புகளின் மீதும் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. சட்டப்படி இதில், 55 உறுப்பினர்களும், 40 அயல்நாட்டு நிருவாகிகளும் 100 பிரெஞ்சு மற்றும் அயல்நாட்டு நிறுவனப் பேராளர்களும் உள்ளனர்.
அறிவியல் நிறுவனம்
===================
கால்பெர்ட் 1666ஆம் ஆண்டு கால்பர்ட் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். அறிவியல் மற்றும் அதன் பயன்பாடுகளின் வளர்ச்சி மற்றும் அதன் பரவலாக்கத்திற்கெனத் தொடங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகளும், விவாதங்களும் கலந்துரையாடல்களும் சமுதாயக் கட்டமைப்பிற்கு வகை செய்வதுடன் குறிப்பாக அரசு சார்ந்த அமைப்புகளுக்கு நிபுணத்துவம், ஆலோசனை மற்றும் எச்சரிக்கை கட்டமைப்புடன் வகை செய்கிறது. வாழ்க்கை அறிவியலை ஊக்குவிப்பதும், அறிவியல் கற்பித்தலை வளர்க்கவும், அறிவு பரிமாற்றமும், இவை குறித்த பன்னாட்டு இணைவாக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். இந்நிறுவனம், 273 உறுப்பினர்களையும், 124 அயல்நாட்டு நிருவாகிகளையும் 76 நிறுவனப் பேராளர்களையும் கொண்டுள்ளது.
கவின் கலை நிறுவனம்
======================
1816ஆம் ஆண்டிலிருந்து முதல், கவின் கலை நிறுவனம் என அறியப்படும் இந்நிறுவனம், 17ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட இசை மற்றும் கட்டடக்கலையின் ஓவியம் மற்றும் சிற்பக்கலையின் அரச குல நிறுவனத்தின் வழிதோன்றலாகும். பல்வேறு போட்டிகளை நடத்துதல், பரிசுகளை வழங்குதல், கலைஞர்களின் குடியிருப்புகளுக்கு நிதியளித்தல் உதவித்தொகை அளித்தல் ஆகியவற்றின் வாயிலாக ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும், கலைநயமிக்க படைப்புகளை வெளி கொண்டு வருவதற்கு இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. மேலும், பிரெஞ்சு பண்பாட்டு பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதையும் இது கண்காணிக்கிறது. இது பொது அதிகாரிகளுக்கான ஒரு ஆலோசனை அமைப்பாகும். கலை சார்ந்த விவகாரங்களையும் இது கருத்தில் கொள்கிறது. இன்று, சட்டப்படியான 59 உறுப்பினர்களையும், 16 அயல்நாட்டு நிருவாகிகளையும் 59 நிறுவனப் பேராளர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைக்கான நிறுவனம்
====================================
1795ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1803ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, கியுசாயிட் (Guizot) – இன் முயற்சியால், 1832ஆம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றது. மனிதநேயத்துடன், சட்டம் மற்றும் பொருளாதாரக் கொள்கையின்படி சமூகப் பிரச்சனைகளுக்கு இந்நிறுவனம் தீர்வு காண்கிறது. இந்நிறுவனம் சட்டப்படியான 50 உறுப்பினர்களையும், 12 அயல்நாட்டு நிருவாகிகளையும் 60 நிறுவனப் பேராளர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
கல்வியாளர்கள் (கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள்) நிரந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நெப்போலியன் காலத்திலிருந்து, அவர்கள் பச்சை நிற ஆடையணிந்து ( “habbit vert”) உரிமையாளரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கலை வேலைப்பாடுகள் நிறைந்த வாளினைக் கையில் ஏந்தி வருகிறார்கள். இம்மாடத்தில் நடைபெறும் பின்வரும் முறைப்படியான கூட்டத் தொடர்களில், இந்த உடை அணியப்படுகிறது. அவையாவன:
நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் நெருக்கத்தில் வரும் செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் ஐந்து நிறுவனங்களின் ஆண்டு பொதுக் கூட்டத்தொடர் ( அல்லது “இலையுதிர் காலக் கூட்டத்தொடர்”). இக்கூட்டத்தொடரில் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் வருகை தரும் சிறப்புப் பிரதிநிதிகள் ஒரு பொதுவான தலைப்பில் உரையாற்றுவர்;
ஐந்து நிறுவனங்கள் ஒவ்வொன்றின் இலையுதிர் காலக் கூட்டத்தொடர்.
ஜூன் மாதம் இரண்டாவது புதன் அன்று நடைபெறும், பிரான்சு கல்வி நிறுவனம் துவங்கப்பட்டதையொட்டி அளிக்கப்படும் மாபெரும் பரிசு வழங்கும் விழா;
நிறுவனத்தின் இருநூறாம் ஆண்டினைக் கொண்டாடுவதற்காக, 1995ஆம் ஆண்டு நடைபெற்ற விழா, 2005 ஆம் ஆண்டில் மாநிலத்திலிருந்து தேவாலயத்தைத் தனியாகப் பிரித்துச் சட்டம் இயற்றப்பட்ட நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற நூற்றாண்டு விழா அல்லது 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அறிவியல் கல்வி நிறுவனத்தின் 250ஆவது ஆண்டு விழா போன்ற விதிவிலக்கான கூட்டத்தொடர்கள்.
பிரெஞ்சு நிறுவனம், அறிவியல் நிறுவனம், கவின் கலை நிறுவனம் மற்றும் அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைகளுக்கான நிறுவனம் ஆகியவற்றின் புதிய உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடைபெற்ற நிகழ்வுகள்.
சிறிய மற்றும் பெரிய கூட்டத்தொடர் அவை அறைகளில், நடைபெறும் வாராந்திரக் கூட்டத்தொடர்களின் போது கல்விப் பணிகள், விவாதங்கள், சமுதாயப் பிரச்சனை குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் பரிசுகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த ஆலோசனைகள் அல்லது பிரெஞ்சு கல்வி நிறுவனத்திற்கான அகராதியைத் தொகுத்தல் ஆகியவை நடைபெறும்.
சிறிய கூட்டத்தொடர்கள் நடைபெறும் அறையில், ஒவ்வொரு வியாழன் அன்றும் பிரெஞ்சு நிறுவனத்தின் கூட்டம் நடைபெறும் அறிவியல் நிறுவனம், அறிவியல் ஆற்றல் மற்றும் கொள்கைக்கான நிறுவனத்தின் வாராந்திரக் கூட்டத்தொடர்களும் (திங்கட்கிழமை தோறும்) இங்கு நடைபெறும்.
பெரிய கூட்டத்தொடர்கள் நடைபெறும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் அறிவியல் நிறுவனத்தின் கூட்டமும், ஒவ்வொரு புதன் கிழமைகளில் கவின் கலை நிறுவனத்தின் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் கல்வெட்டு எழுத்துகள் மற்றும் பெல்விஸ் எழுத்துகள் நிறுவனக் கூட்டமும் நடைபெறும்.
நூலகங்கள்
===========
நிறுவன மாளிகை, (The Palais de I’Institut), விலைமதிப்பில்லாப் புத்தகங்களைக் கொண்டுள்ள இரண்டு நூலகங்களின் தாய் வீடாகும்.
மெசாரின் நூலகம் (The Mazarine Library)
====================================
மெசாரின் நூலகம், பிரான்சு நாட்டின் மிகப் பழமையான பொது நூலகமாகும். மேலும், அந்நாட்டின் பாரம்பரியமிக்க நூலகங்களுள் ஒன்றாகும். இடைப்பட்ட காலம் தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் உள்ள ஏறத்தாழ 5,000 கையெழுத்துப்படிகளையும், 500,000 அச்சிடப்பட்ட புத்தகங்களையும் (அவற்றுள் 2,300 புத்தகங்கள் 1501ஆம் ஆண்டிற்கு முன்னர் அச்சிடப்பட்டவையாகும்) பல்வேறு கலைப் பொருட்களையும் இந்நூலகம் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இது, பேரறிஞர் கேப்ரியல் நாடே (Gabriel Naude) (1600-1653) அவர்களால் சேகரிக்கப்பட்ட கர்தினால் மெசாரின் (1602-1661) என்பவரின் தனிப்பட்ட தொகுப்பே ஆகும். 1643 ஆம் ஆண்டு முதல், கர்தினால் காலத்தின்போது, பொது மக்களுக்கு இந்நூலகம் திறந்துவிடப்பட்டது. என்றென்றும் இந்நூலகம் நிலைத்திருக்க வேண்டி, அதனைக் குவாட்டர்-தேசிய கல்லூரியுடன் இணைக்க மெசாரின் முடிவு செய்தார். அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர், இக்கல்லூரியை அவர் தோற்றுவித்தார். பிரெஞ்சு புரட்சி முழுவதிலும், இந்நூலகம் செயல்பாட்டில் இருந்தது. பொதுமக்களுக்கு இந்நூலகம் திறந்து விடப்பட்டதால், இந்நூலகம் மிகச் சிறப்பான புத்தகங்களைக் கொண்டிருப்பதற்கு ஏப் லெப்லாண்ட் (Abe Leblond) எனும் பெயரால் அறியப்படும் இதன் நூலகர் காஸ்பர்ட் மைக்கேலுக்கு (Gaspard Michel) மிகப் பெரிய நன்றி. அன்று முதல், குறிப்பாக வரலாற்று துறையில் புத்தகங்களை வாங்குதல் மூலம் அல்லது நன்கொடையாகப் பெறுவதன் வாயிலாக இந்நூலகம், அதன் ஆதாரங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளது.
உண்மையில், இன்று, இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய கல்வி மற்றும் ஆய்வு நூலகமாக உள்ளது. 1647ஆம் ஆண்டில் பைரி லீ மியூட் (Pierre Le Muet) அவர்களால் வடிவமைக்கப்பட்டு, மரப்பலகைகள் மற்றும் தூண்களால் தனித்துவமிக்க வகையில் அலங்கரிக்கப்பட்ட மிகச் சிறப்பானதொரு பயிலும் அறையில், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அடுத்தடுத்து அமர்ந்து அவரவர் பணியை மேற்கொள்கின்றனர்.
நிறுவன நூலகம்
================
இந்நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலைய உறுப்பினர்களின் உதவியால், வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும், அனுமதியின் பேரில், இந்நிறுவனத்தின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனம் துவங்கப்பட்ட அன்றே தொடங்கப்பட்ட இந்நூலகம், தொடக்கம் முதலே, பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தைச் சார்ந்தோர்களின் நினைவுகளை என்றும் நிலைபெற்றிருக்கச் செய்வதும், நிறுவன உறுப்பினர்களுக்கு அவர்தம் பணி குறித்துத் தேவையான ஆவணங்களைக் கிடைக்கச் செய்வதும் இந்நூலகத்தின் நோக்கமாகும். இந்நிறுவனங்களின் செயல்பாடுகளினாலும், நிறுவனங்கள் பெற்றிருந்த புகழாலும், உலகம் முழுவதிலுமிருந்து வரப்பெற்ற கல்வி சார்ந்த எண்ணற்ற ஆவணங்களை இந்நூலகம் கொண்டுள்ளது.
இந்நூலகத்திலுள்ள பழமையான மற்றும் நவீன, விலைமதிப்பில்லா நூல்களும், பிரான்சு நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட புத்தகம் சேகரிப்பவர்களால் பரிசளிக்கப்பட்ட நூல்களும், இந்நூலக வளமைகோர் காரணமாகும். உலகளவில், பால்சாக்-இன் கையெழுத்துப்படிகளை அதிகளவில் இந்நூலகம் கொண்டுள்ளது.1913ஆம் ஆண்டு, சார்லஸ் டீ சுபோல்பெர்க் டீ லோவெஞ்சோல் (Charles de Spoelberch de Lovenjoul) அளித்த நன்கொடைக்கு நன்றி. நிறுவன உறுப்பினர்கள் படிப்பதற்காக, போனபார்டே (Bonaparte)-வால் இத்தாலியிலிருந்து மீண்டும் கொண்டு வரப்பட்ட, லியானார்டோ டீ வென்சி அவர்களால் கைப்பட எழுதப்பட்ட அறிவியல் சார்ந்த பன்னிரண்டு குறிப்பேடுகள், இந்நூலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
இந்நூலகத்தில் 600,00 அச்சிடப்பட்ட புத்தகங்கள், 7,000 பருவ இதழ்கள் மற்றும் 10,000 கையெழுத்துப்படிகள், தனியார் பெட்டகங்கள் மற்றும் ஆய்வு அறிக்கை உள்ளது. ஆய்வுப் பணிகளுக்கு இவை மிகவும் இன்றியமையாதவைகளாகும். பொறித்தல் வேலைப்பாடுகள், ஓவியங்கள், 40,000 பழைய புகைப்படங்கள், சித்திரங்கள், பதக்கங்கள் மற்றும் இந்நிறுவன உறுப்பினர்களின் மார்பளவு உருவச்சிலை மற்றும் அவர்களின் வாள்கள் போன்ற பல்வேறு வகையிலான பொருட்களையும் இந்நூலகம் கொண்டுள்ளது. இங்குக் கவின் கலை நிறுவனச் சிற்பிகளுக்காக, அண்மையில் ஒரு அச்சு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Add a Comment