புது தில்லியில் புறநானூறு
நிதியமைச்சர் கூறிய நிகரற்ற உவமை
=======================================================
மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பாதீட்டு ( பட்ஜெட் ) உரையில் பன்மொழிப் பொன்மொழிகளுக்கு இடையில் புறநானூற்றை எடுத்துக்காட்டி அறிவுடை நம்பிக்கு வழங்கிய பிசிராந்தையாரின் நல்லுரை இந்த நாட்டுக்குப் பொருந்துவதாகும் என்று கூறியதைக் கேட்டு நம் உள்ளம் பெருமிதம் அடைந்தது .அந்தப் புறநானூற்றுப் பாடல் இவ்வாறு ஒளிர்கிறது …..
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்,
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்,
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்,
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
( புறநானூறு 184 … )
தமிழ் மடந்தையாக நின்று புறநானூற்றைச் செழுந்தமிழிலும் செவ்விய ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து மொழிந்ததைத் தலைமையமைச்சரும் ,மக்களவை உறுப்பினர்களும் கரம் தட்டி மகிழ்ந்தார்கள்.ஆங்கிலத்தில்
தோல்வி பெற்ற பேரியக்கத்தை ” அந்தப் பெரிய யானை ” ” THE GREAT ELEPHANT ” என்று குறிப்பாகச் சுட்டுவார்கள் . அந்தப் பொருளும் உள்ளடங்கி இருக்கிறதோ ! என்று ஆஸ்திரேலிய நண்பர் வினவினார் .
” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற பொன்மொழி சிகாகோ மாநாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும்போது தில்லியில் நிதியுரையில் புறநானூற்று அரச நீதியைச் சுட்டிக்காட்டியது போற்றுதற்குரியதாகும் .
தில்லி தமிழ்ச்சங்கத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் புறநானூறு சீனிவாசன் என்றே ஓர் உயர் அலுவலர் பொறுப்பேற்று இருந்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.அவருடைய கனவு நனவாகி இருக்கிறது .
வாழிய இந்நன்னாடு பொன்னாடாக !
வளர்க நலத் திட்டங்கள் !
வாழ்க நிதியமைச்சர் !
—– ஔவை நடராசன்

Add a Comment