செவ்வழி வாழிய செருமனி நாடே !
====================================
நேற்று இரவு பெர்லின் நினைவுகள் என்று புகழ் வாய்ந்த புலம் பெயர்ந்த கலைத்திலகம் கருணாமூர்த்தி எழுதிய நூலைப் புரட்டினேன். அறுபது பக்கங்கள் முடிந்திருக்கும். காவலர்கள், கண்காணிப்பாளர்கள், சிறையலுவலர்கள், பயணச்சீட்டு விழிப்பாளர்,பாதிரியர்,கன்னியர், விருந்தக உரிமையாளர், பரிமாறியவர், கடைக்காரர், விற்பனையாளர், காரோட்டி என ஐம்பதின்மருக்கு மேல் பலரைக் காணும் வாய்ப்பைப் புலம் பெயர்ந்த இளைஞர் கூட்டம் பெறுகிறார்கள் .
முன்பின் தெரியாத நாட்டில், அச்சமும் அவலமும் பெருகிய சூழ்நிலையில், இளைஞர் கண்ட ஐம்பதின்மர்களின் எவருமே எள்ளளவும் தீங்கு நினைப்பவர்களாகவே இல்லை. துணை செய்வதற்காகக் காத்திருப்பவர்கள் போலவே அனைவரும் துணை நிற்பதைப் படித்து மெய்சிலிர்த்துப் போனேன்,நானிலமெங்கும் பரவியிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை சுடர்விட்டது. எவரைப் பார்த்தாலும் ஐயுறுகிற,அச்சுறுத்துகிற நமது நாட்டை எண்ணிப்பார்த்தால் இங்கே எத்தனை அத்திகிரிகள் வந்தாலும் ஏமாற்று, ஐயப்பாடு, புறக்கணிப்பு,கொடுமை நீங்காது போலத் தெரிகிறது.
நள்ளிரவில் நடைபாதையில் எதிர்ப்படும் இவர்களை எவரும் புறக்கணிக்கவில்லை. விலையில்லாமல் கடையில் சுவைநீர் பெற்றதற்கு நன்றியாக இலங்கைத் தேயிலைப் பொதியை அளித்தது ஈழத்தமிழரின் நன்றிய நெஞ்சைக் காட்டியது .
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment