POST: 2019-07-19T10:11:30+05:30

===============================================
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பு தமிழக சட்டப் பேரவையில் 18.07.2019 அன்று வெளியிடப்பட்டது.
===============================================

மொழிபெயர்ப்புத் துறை
**********************************

இயல் – 2
————–

மொழிபெயர்ப்புத்துறை
—————————————

2.1. அறிமுகம்
********************

“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்”

என்ற மகாகவி பாரதியாரின் பொருண்மொழி, மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை எடுத்து மொழிகிறது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்து, எழுது, திறன், நடை, சூழல் முதலியவற்றைப் புரிந்து மொழிபெயர்த்து வழங்குவதால், மொழிபெயர்ப்பு அறிவியலாகவும், மொழித் தொடர்பான அழகியல் சிதையாமல் படைப்புகளை வடிவாக்கம் செய்ய நேர்வதால், கலையாகவும் கருதப்படுகிறது.

2.2. தோற்றம்
********************

மொழியாக்கத்தின் முதன்மையைக் கருத்திற்கொண்டு, ஆங்கிலேயர் காலத்திலேயே தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை உருவாக்கப்பட்டுத் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியோடிணைந்து செயற்படுகிறது. 1968 – ஆம் ஆண்டில் இத்துறைக்கு இயக்குநர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டு, இத்துறையின் இயக்குநர்களாகப் பணிபுரிந்த பெருந் தமிழறிஞர்கள் மூவரில் இருவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களாகவும், ஒருவர் இத்துறையின் அரசு செயலராகவும் பதவியேற்றுத் தமிழ்ப்பணியாற்றியதோடு, மற்றொருவர் நாடறிந்த முதுபெரும் எழுத்தாளராகவும் மிளிர்ந்த சிறப்பை இத்துறை பெற்றுள்ளது.

2.3 பணியமைப்பு
*************************

இத்துறையின் பணியமைப்பு விவரம் வருமாறு:-

1. இயக்குநர் – 1
2. துணை இயக்குநர் – 2
3. உதவி இயக்குநர் – 4
4. பிரிவு அலுவலர் – 4
5. உதவிப் பிரிவு அலுவலர் – 16
6. உதவியாளர் – 1
———
மொத்தம் 29
———

2.4. மொழியாக்கப் பொருண்மைகள்
**************************************************

தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளிலிருந்து வரப்பெறும் கோப்புகள், நேர்விற்கேற்பத், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.

பல்வேறு துறைகளிலிருந்து வரப்பெறுகிற அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழிலும் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டிலும் வெளியிடப்படுவதற்காகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசு மைய அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தின் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறையிலிருந்து வரப்பெறும் அறிவிக்கைகள், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கன்னியாகுமரி, சேலம் மற்றும் நீலகிரி மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப்படுகின்றன.

தலைமைக் கணக்காளரிடமிருந்து, பொதுத்துறை நிறுவனங்கள் குழுவிற்கும் பொதுக்கணக்குகள் குழுவிற்கும் வரப்பெறுகிற தணிக்கை அறிக்கைகள் தமிழாக்கத்திற்காக மொழிபெயர்ப்புத் துறைக்கு அனுப்பப்பெறும். கடந்த ஓராண்டில் மட்டும் வேளாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சுற்றுலாத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீதான தணிக்கை அறிக்கைகள் 700 பக்கங்கள் அளவிற்குத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம், விழிப்புப்பணி ஆணையம் ஆகிய அமைப்புகளிடமிருந்து பெறப்படும் ஆண்டறிக்கைகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன. இவ்வகையில் கடந்த ஓராண்டில், 400 க்கும் மேற்பட்ட பக்கங்கள் அளவிற்குத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்திடமிருந்து வரப்பெருகிற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள், தேர்தல் வழிகாட்டிக் குறிப்புகள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையினரான தேர்தல் பணியாளர்களுக்கான குறித்த கையேடுகள் போன்றவை, உரிய காலத்திற்குள் தமிழாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. கடந்த ஓராண்டில் 600-க்கும் மேற்பட்ட பக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன .

தலைமைச் செயலகத் துறைகளின் அரசாணைகளும், வனத்துறையின் மாநில வனக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வழிகாட்டிக் குறிப்புகளும், சுற்றாணைக் குறிப்புகளும் இத்துறையால் மொழிபெயர்க்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு மட்டுமல்லாது, பல்வேறு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு உரிய திருத்தங்களுடன் அனுப்பப்பெறுகின்றன.

தமிழ்நாடு அரசு முகநூலில் வெளியிடப்படுவதற்காகச், செய்தித் துறையிடமிருந்து வரப்பெறும் அரசின் அன்றாட நிகழ்வுகள், மாண்புமிகு முதலமைச்சரின் சந்திப்புகள், மக்கள் நலத்திட்டச் செயலாக்கங்கள் போன்றவை குறித்த செய்தித் துணுக்குகளும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உடனுக்குடன் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.
நிறைவாக, பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட மொழியாக்கத்திற்கான கோப்புகள், கடந்த ஓராண்டில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் அளவிற்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2.5. மொழிபெயர்ப்புத் துறையின் சாதனைகள்
****************************************************************

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், “பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிரெஞ்சு மற்றும் செருமானிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்” எனச் சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டார். இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், பிரான்சு மற்றும் செருமனியில் இத்துறையின் அரசு செயலர் தலைமையில், 26/03/2019 முதல் 02/04/2019 வரையில் நடைபெற்ற மொழியாக்கம் தொடர்பான கருத்தியல் நுணுக்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ் மன்றம் மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து சிகாகோ மாநகரில், 4.07.2019 முதல் 07.07.2019 வரையில் நடத்திய 10-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழ்நாடு மாநில அரசின் சார்பில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், இத்துறை இயக்குநரும் அரசுப் பேராளராகக் கலந்து கொண்டார்.

2..6 மொழிபெயர்ப்புத் துறையைக் கணினிமயமாக்குதல்
**************************************************

மொழிபெயர்ப்புத் துறை தொடங்கப்பட்ட நாள் முதல், 2017ஆம் ஆண்டு வரை மொழியாக்கத்திற்காக வரப்பெறும் கோப்புகள் அனைத்தும், கையால் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க இத்துறை கணினிமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துக் கோப்புகளும் ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட்டு உடனுக்குடன் மென்வடிவில் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுன்றன. மொழியாக்கத்திற்கு வரப்பெறுகிற கோப்புகளின் விவரப் பட்டியல் மின்வடிவில் பேணப்படுகிறது.

2..7 காணொலிக்காட்சி மொழியாக்கம்
******************************************************

கோப்புகள் மற்றும் ஆவணங்கள் மட்டுமல்லாது, தேவைகருதி, காணொலிப் பதிவுகளும் மொழியாக்கம் செய்யப்பட்டு உரைவடிவில் தட்டச்சு செய்யும் அளவிற்கு மொழிபெயர்ப்புத்துறை வளர்ச்சி பெற்று விளங்குகிறது.

2.8 அயல் மொழியாக்கம்
***********************************

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தையும், தேர்வு அச்சத்தையும் போக்கும் நோக்கத்துடன், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுரைகளை வழங்கும் வகையில், பாரதப் பிரதமரின் இந்தி உரை, இத்துறையால் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘தேர்வுக்கானத் தேன்மொழிகள்’ என்னும் தமிழ் நூலாக மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் வெளியிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகை, பாரதப் பிரதமர் அலுவலகம், தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரப்பெறும் இந்தி மொழிக்கோப்புகள், இத்துறையால், தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் வரப்பெற்ற கோப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

2.9 பிற பொருண்மை
*****************************

மொழிபெயர்ப்புப் பணி மட்டுமின்றிப் பல்வேறு துறைகளிலும் மொழிபெயர்ப்பு அலுவலர்கள் திறன்பெற்று மிளிர வேண்டுமென்ற நோக்கத்தில், இத்துறையின் பிரிவில் உள்ள பிரிவு அலுவலர் ஒருவருக்கு மொழிபெயர்ப்புத் தொடர்பாக பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இசைவளிக்கப்பட்டுள்ளது.

இத்துறையின் மொழிபெயர்ப்பு அலுவலர்கள் அரசு நடைமுறைகள் குறித்த நிருவாகப் பயிற்சிகளையும் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் இத்துறையின் அரசு செயலாளர் பரிந்துரைத்ததன்பேரில், மொழிபெயர்ப்புத் துறையைச் சேர்ந்த உதவிப் பிரிவு அலுவலர்கள் அனைவரும், தலைமைச் செயலகத்தின் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையால் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சி பெற்று, அதற்கான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

உதவி இயக்குநர் ஒருவருக்கு துணை இயக்குநராகவும் உதவிப் பிரிவு அலுவலர்கள் நால்வருக்கு பிரிவு அலுவலர்களாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கி சுடுதலில் ஆர்வமுள்ள உதவிப் பிரிவு அலுவலர் ஒருவருக்கு அவ்வகையில் பயிற்சி பெறவும் அரசின் அனுமதியுடன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்புக் கலை நாளும் வளர்ந்து வருவதாகும். மொழி பெயர்ப்பைப் போலவே உரை பெயர்ப்புக்கும் சூழல் ஓங்கி வருகிறது. எதிரதை முன்னுணர்ந்து ஆற்றலோடு வழங்கும் அறிவுத்தெளிவு வளர்ந்து வருகிறது. மொழிபெயர்ப்பு முக்காலத் தகைமை இடந்தருகிறது.

“பன்முகம் கொண்டு பரந்த பொருளைச்
சொல்முகத் தான் அவை துணைமை எய்த
கூறற்கு அரிய ஆயினும், கூறிய
பொருளொடும் இனத்தொடுந் தெருள்உற அமைத்துச்
சொல்ல வல்லுநர்”

என்ற தொல்காப்பியரின் இலக்கணத்திற்கு உரிய இலக்கினை எய்தும் வகையில் மொழிபெயர்ப்புத்துறை செயலாற்றி வருகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *