POST: 2019-07-28T10:41:55+05:30

அங்கேயும் ஓர் அருள்
======================

பெரும்பாலும் என்னோடு பணியாற்றியவர்கள் நான் மாறினாலும் அவர்கள் மாறியதில்லை .
என்னிடத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் காரோட்டியவர் இளவல் தனராஜ் .
ஒல்லியான உடலும் ,ஒடிந்து விழுகிற சாய்வும் கொண்ட தனராஜ் பரிவு கொண்டவர் பண்பாடு மிக்கவர் .

என் மக்கட் செல்வங்கள் மூவர்க்கும் என் துணைவியார் தான் காரோட்டக் கற்றுக் கொடுத்தவர் .

அதைச் செப்பமாக வளர்த்த பெருமை திரு தனராஜைச் சேரும்.

நாளிதழை அவர் நாள்தோறும் படிப்பவர் .
அவர் திருமணத்தை நான் தான் முன்னின்று நடத்தினேன் .

அரிதின் முயன்று அவரை அரசுப் பணியில் சேர்த்து விட்ட பிறகும் எனக்கு வந்து கார் ஓட்டுவதை நிறுத்தவில்லை .

நான் பதவிகளில் மாறி தஞ்சையில் பணியாற்றிய போது தனராஜும் பதவி உயர்வு பெற்று முதலமைச்சரின் உயர்தனிச் சீருந்து வரிசையில் ஓட்டுநராக உயர்ந்தார் .
ஆண்டு தவறாமல் தீபாவளி திருநாளன்று தன் குடும்பத்தோடு வந்து செல்வார் .

ஒரு வீடு கட்டினார்.
ஒளவை நடராசன் இல்லம் என்று பெயர் வைத்தார் .

என் பிள்ளைகளின் பெயரையே அருள் என்றும் கண்ணன் என்றும் சூட்டியதோடு தன் ஒரே மகளுக்குத் தாரா என்றே பெயர் சூட்டினார் .

அவர் ஓய்வு பெற்றதும் எனக்குத் தெரியும்.நான் நலிந்திருந்த போது மருத்துவமனைக்கு வந்து சென்றார் . கண் கலங்கினார் .

அவர் மக்கட் செல்வங்கள் திருமணங்களுக்கு
நானும் என் துணைவியாரும் அருளோடு சென்று வாழ்த்தி வந்தோம்.

கடமை முடிந்தது என்று உயிர் நீத்தார் .
அருளும், தாராவும் பொறியாளராக மாறி வாழ்வில் உயர்ந்துள்ளார்கள் .

மூன்றாம் மகன் நடராசன் அம்மாவுடனேயே இருப்பேன் என்று தன் வணிகத்தை வளர்த்துக் கொண்டான் .

இவ்வளவும் நான் ஏன் எழுதுகிறேன் என்றால் வளர்ந்து அருளைப் போலவே அந்த அருளும் பொறியியலில் உயர்ந்தார் .

கடந்த திங்கள் அருள் சிகாகோ மாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். முகநூல் உறவால் அண்ணா நான் சிகாகோவில் இருக்கிறேன் என்று ஆரத் தழுவிக் கொண்டாராம் .

ஆறடி உயரம் வளர்ந்த அருள் தன் மனைவி பிரசுனா, பிள்ளைச் செல்வங்களான சரண்ஜித் சாய், குருமித்ரா ஆகியோரோடு சிகாகோவில் இப்போது வாழ்கிறார். அவர் துணைவியாரும் பொறியாளர்.

உலகில் நீ எங்குப் போனாலும் உறவு சொல்லி வருகிறார்களே என்று உடன் சென்றவர்கள் எல்லாம் அருளைக் கண்டு வியந்தார்கள்.
அருளின் உயரத்தைக் கண்டு வியந்த தந்தை தனராஜ் அவருடைய பதவி உயர்வைக் காணாமல் மறைந்தார். ஆனால் ஆண்டுதோறும் அவருடைய குடும்பம் என்னை வந்து காணாமல் இருப்பதில்லை .தனராஜின் குடும்பம் வளர்ந்திருப்பதைப் பார்த்து என் மனம் களிப்படைகிறது

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *