POST: 2019-08-07T11:58:21+05:30

கல்வியையும் கலைகளையும் வளர்த்த கனிவு ! – ஒப்பற்ற ஒய்.ஜி.பி
======================================================

கலை உணர்ச்சி ததும்பும் புகழ் வாய்ந்த குடும்பத்தின் மணி விளக்காகத் திகழ்ந்த மாதரசியார் – ஒய்.ஜி.பி அன்னையார் மறைவு அவலம் தருகிறது.

பல்லாயிரக்கணக்கான மாணவ நெஞ்சங்கள் அழுது துடிக்கின்றன.
நடக்க முடியாத நிலையிலும் கூடச் சாய்வு இருக்கையில் அமர்ந்தபடி கலை நிகழ்ச்சிகள், இலக்கிய அரங்குகள் என வேறுபாடில்லாமல் பங்கு கொண்டவர்.

எந்த நிகழ்ச்சியிலும் ஒய்.ஜி.பி.-அவர்களை நினைக்கத் தவறியதில்லை.

வாழ்க்கையை எளிமையாகவும், இனிமையாகவும் நடத்தி ஊராரின் உயர்ந்த மதிப்புக்கு உரியவராக வாழ்ந்தார். தொண்ணூறு வயதைக் கடந்தவர் என்றாலும் முன்னூறு ஆண்டுகள் பணிகளை முடித்தவர் என்பது போலச் சாதனைகள் பலவற்றைச் செய்திருக்கிறார்.
வாழ்வில் பல வாகை சூடியவர் .

ஒய்.ஜி.பி.-யின் அரவணைப்பில் மாபெரும் கலை மணிகள் வளர்ந்தனர். பத்மா சேஷாத்திரி என்ற பெயர்
கல்வியளிப்பில் பாரெங்கும் ஒலிக்கும் சீரிய பெயராகும்.

கனிந்த மனம் கொண்ட அன்னையாரின் மறைவு நண்பர் மகேந்திரனுக்கு ஆற்ற முடியாத துயரம் தருவது.

ஆறுதல் கூற பல்லாயிரம் பெற்றோர் அணிவரிசையில் நிற்கின்றனர்.
கணவரை இழந்து நெடுநாள் வாழ்ந்த ஒரு துணைவியார், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் எத்தகைய உயர் பணிகளைச் செய்ய முடியும் என்பதற்கு ஒய்.ஜி.பி. அன்னையே ஒப்பற்ற சான்றாவார்.

நாள் முழுவதும் இசை கேட்கவும், நாடகம் பார்க்கவும் நான் சலித்ததில்லை என்று கூறிய கலையன்னையின் மறைவு இந்த நாளைக் கசப்பாக்கி இருக்கிறது.

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *