சுஸ்மா சுவராஜ் – அரசியல் தாரகை !
……………………………………………………………..
2002 ஆம் ஆண்டு பாரதியார் விழா வழக்கம் போல வானவில் இரவி அவர்களால் வனப்புற நடந்தது. நிறைவு நாளன்று நல்லுரையாற்ற திருமதி.சுஸ்மா சுவராஜ் வந்திருந்தார். பாரதியாரைப் பற்றி அவர் ஆற்றிய நிறைவுரையை நான் மொழிபெயர்த்தேன்.
நிறைவு விழா முடிந்ததும், என்னை அழைத்துப் பத்து மணித்துளிகள் கனிவோடு உரையாடினார்.சட்டம் படித்ததோடு கவிதையார்வமும் கலை விருப்பமும் ததும்பிப் பொங்கும் வகையில் மேடைப் பொழிவுகளில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி நிறுவனங்களில் தான் முதற் பரிசு பெற்றதையும் கூறினார்.
தென்னிந்தியர்கள், ஆங்கிலத்தின் ஆழம் தெரிந்தவர்கள். உங்கள் ஆங்கில ஒலிப்புக் கவர்ச்சியாக உள்ளது. எனக்கு சமஸ்கிருதப் புலமையும் உண்டு. அரசியல் தலைமையினால் தமிழ் மொழியின் கலை இலக்கியப் பண்பாட்டுத் திறங்களையெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
தமிழர்களின் மொழியார்வமும், ஈழத்தமிழர்களின் இன உணர்வும் போற்றுதற்குரியன.
மஞ்சள் பூசிய மங்கல முகம் என்பார்களே, அதுபோன்ற தாய்மை ததும்பிய முகமும் அகமும் கொண்ட திருமதி.சுஸ்மா அவர்களை நினைத்தபோது பா.ஜ.க. அரசு அம்மையாரால் பெருமை பெற்றுத் திகழும் வாய்ப்புகள் பல உள்ளன என்று நினைத்தேன்.
சுஸ்மா அம்மையாரின் பிரிவு, ஓர் அரசியல் திலகத்தின் திடுக்கிடும் மறைவாகும். மாற்றுறுப்புஅறுவை பெற்றவர்கள் பல ஆண்டுகள் வாழ முடிவதில்லை போலும்.
……. முனைவர் ஒளவை நடராசன்

Add a Comment