POST: 2019-08-25T08:04:56+05:30

முதிர்ந்த கனி உதிர்ந்தது !
===================

காலை எழுந்ததும் அன்றாடம் மயிலைத் திருக்கோயிலை வணங்கி வரவேண்டும் என்பதற்காகவே மயிலை – வடக்கு மாட வீதியிலேயே என் அப்பாவின் நலன் கருதி நாங்கள் வாழ்கிறோம்.அவர்தான் எங்கள் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம்.வாழ்வில் தமிழ் மட்டுமே தனக்குத் துணை என்று கருதி இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்து ஏராளமான அரிய தகவல்களைத் திரட்டுவதிலேயே தன் பொழுதைப் போக்கினார் .

” தமிழ் இலக்கியத்தில் உவமைகள் ” என்ற இரு தொகுதிகளைப் பெருமிதமாக வெளியிட்ட போது ” பெருந்தகை இராமசாமி அவர்களை ” இலக்கியப் பேரொளி ” என்ற புகழ்ப்பெயர் சூட்டி அவரைப் பாராட்டினோம்.” தமிழவேள் ” மோகன் தாம் நடத்திய சேக்கிழார் விழாவில் பாராட்டிச் சிறப்பித்தார் .அருமைத் திருமகன் இராமநாதனும் – பெயரன் விஜயனும் அவருக்கு இரண்டு தோள்களாக இருந்தார்கள் .

சங்க இலக்கியங்கள் ஒன்றோடு ஒன்று உறவுடையனவாக காட்டுவதற்குத் தரவுகளை ஆயிரம் பக்கங்களுக்கு மேலாகத் திரட்டியிருந்தார்.சிறப்புற்றுத் திகழும் பள்ளியின் பழங்கால ஆசிரியராகவும் ,தோல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் இதழாசிரியராகவும், மாலை வேளையில் தமிழ் பரப்பிய தனி ஆசிரியராகவும் அவர் நடத்திய அற வாழ்வை நான் நினைத்து உருகுகிறேன்.பல்கலைக்கழகம் வழங்கும் ” முதுமுனைவர் ” பட்டப்பேற்றினை அவருக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்க ,என் நெஞ்சத்தின் நீளத்திற்கு கைகளை நீட்டவோ, உரியவர் வந்து பெறுவதோ இல்லாமற்போயிற்று .

நல்லறிவுக்கூடத்தில் நடந்த விழாவில்” நாடகக் கலைஞர் ” காத்தாடியும் ,” பெரும் பேராசிரியர் ” வ .வே .சு வும், ஆந்திர மாநில காவல் துறைத் தலைவரும் பேசிய சொற்கள் ஒவ்வொன்றும் எங்கள் இருவரின் செவிகளிலும் தேனாகச் சொரிந்தன .

” வந்து பார்க்கிறேன் ” என்று வாய் மணக்கச் சொன்ன இராமசாமி அண்ணலை முதுமைத் தளர்ச்சி அவர் நினைவை முடித்து வைக்கவில்லை .உயரிய மகன் – உளம் உருகி அழுவதை என்னால் இங்கிருந்தே கேட்க முடிகிறது .

பெயரன் திருமணத்தைப் பார்த்து விடவேண்டும் என்றெல்லாம் பேசினோம் .

இப்படி ” இலக்கிப் பேரொளி ” அணைந்ததை எண்ணி ஆறுதல் அடைவோம்.

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *