தின செய்தி நாளிதழில் 22.09.2019 (ஞாயிறு) அன்று வெளியான கட்டுரை
==========================================================================
கம்பர் இயற்றிய கம்பராமாயணம் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பங்குனி மாதம் அத்த நட்சத்திரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது எனத் தனிப்பாடல் மூலம் அறியலாம்.
இராமவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தை காண்டம், சுந்தரக் காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10 ஆயிரத்து 368 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து, எட்டுச் சீர்கள் வரையிலான 4 அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டு கம்பர் இராமாயணத்தைப் படைத்தார்.
இயல்பாகப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒருவர் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை தான் இருக்கக் கூடும். வேண்டுமானால் ஐயாயிரம் சொற்கள் வரை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
புகழ்வாய்ந்த எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாகத் திகழும். கவியரசர் கம்பர் இந்த வரைமுறைகளையெல்லாம் விஞ்சி நிற்கிறார். ஏறத்தாழ நாற்பதாயிரம் சொற்கள் கம்ப இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன.
புதிதாகப் புனைந்த சொற்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடுகிறார்.
அரங்கேற்றத்தினைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு மார்ச்சு 24 – ஆம் தேதியையே கம்பர் திருநாளாகப் போற்றும் வகையில், நேர் கொண்ட பார்வையோடு நிமிர்ந்த தோற்றத்தோடு அமைந்த கம்பர் சிலைக்கு மார்ச் 24 – ஆம் தேதி மாலை அணிவிக்கின்றனர். மேலும், ஆண்டுதோறும் தமிழக அரசு கம்பர் விருதைத் தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
வால்மீகி எழுதிய ஆதிகாவியத்தைப் பின்பற்றிக் கம்பர் தம் காப்பியத்தைப் படைத்தபோதிலும் கம்பராமாயணம் மொழிபெயர்ப்பும் அன்று, தழுவலோ, சார்பு நூலோ அல்ல. ஒரு புதுக் காப்பியத்தைப் போன்றே அமைத்திருக்கிறார்.இந்தக் காப்பியத்தை மொழி பிறப்புக் காப்பியமாகவே அமைத்த திறமை கம்பரைப்போல் பிறரிடம் காண முடியுமா என்று மூதறிஞர் வ.சு.ப.மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி இராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காப்பியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்றைக் கம்பர் விரிவாக்கி எழுதினார். வால்மீகி சொல்லாத சிலவற்றைக் கம்பர் தானே படைத்தும் மணம் கமழச் செய்தார்.
வால்மீகி வரைந்த ஆதிகாவியம், வடநாட்டிலேயே பிறந்து அங்கேயே நிறைவுற்ற காப்பியமாகும். கம்பரோ, தமிழ்நாட்டில் தமிழ்மண்ணில் பிறந்த தமிழ் உணர்வாகவே எல்லாவற்றையும் பார்க்கின்றார். கம்பர் காட்டுகிற வயல் வளம், காவிரி நாடன்ன கழனி நாடாகவும், கோதாவரி ஆறுகூடக் கூடல் மாநகரில் தோன்றிய சங்கப் பாடலாகவும், இராமன் ஏந்திய வில்லில் விரைந்த அம்புகூடத் தமிழ்ச் சொல்லாகவும், தமிழ் வழக்கன்ன தனிச் சிலையாகவும்” வண்டு தமிழ்ப்பாட்டிசைக்கும் தாமரையே” என்று பாடி வண்டு முரல்வது கூடத் தமிழாகவே நெஞ்சம் குளிர அமைத்துள்ளார்.
கம்பருடைய காட்சிகளெல்லாம் தமிழின் பெருமையைப் பாடுவதாகவே அமைந்தன. அகத்தியர்தான் தமிழின் தந்தை என்று சிலர் கூறியபோது, அதை நயமாக மறுப்பதுபோல“ என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்று கூறி, அளப்பரிய பெருமை கொண்ட தமிழைப் பேசியதால் தான், அகத்தியருக்கே பெருமை வந்தது என்று கம்பர் பாடினார்.
சீதை திருமணத்தைக் காதல் திருமணமாகவே அகத்திணை அன்பாகவே கலைத் திருமணமாகப் பழந்தமிழர் இலக்கியப் பண்புக்கு ஏற்ப அமைத்துக் காட்டினார்.
ஒரு மருத நிலக் காட்சியைக் கம்பர் காட்டும் அழகு ஈடற்றது. வடிவழகும் நடையழகும் வாய்ந்த உழத்தியர் வயலில் பணிபுரிகின்றனர். அவர்களின் நடையழகைக் கண்ட அன்னப் பறவைகள் தாமும் அவர்களைப் போல் நடந்து பழக விரும்புகின்றன.
அன்னங்கள் தம் குஞ்சுகளைத் தாமரை மலராகிய படுக்கையில் கண் வளர்த்திவிட்டு அங்கும் இங்கும் நடந்து திரிகின்றன. அதனைக் கண்டு அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் எருமைகள் தம் கன்றுகளை நினைத்துக் கனைக்கின்றன. அவற்றின் மடியில் தானாகப் பால் சுரந்து வழிகிறது . நீரில் கலந்த அப்பாலை அன்னக் குஞ்சுகள் பிரித்துப் பருகி, தாமரை மலரில் படுத்து உறங்கத் தொடங்குகின்றன. அவை உறக்கம் கொள்ளத் தவளைகள் தாலாட்டுகின்றன.
கம்பர் கற்பனை உருவத்தை ,ஒரு கவியோவியமாகப் புனைந்து நாம் கண்டு களிக்குமாறு காட்டுகிறார்.
“சேல் உண்ட ஒண் கணாரின்
திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி,
வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி
கன்றுஉள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத்
தேரை தாலாட்டும் – பண்ணை”.
இதில் வடிவழகும் நடையழகும் வாய்ந்த உழத்தியரையும், செங்கால் அன்னங்கள் திரிவதையும், அழகிய தாமரை மலர்களையும், அதில் அன்னக் குஞ்சுகள் கண் வளர்வதையும், சேற்று நிலத்தில் கால்பதிய நின்று மேயும் எருமைகளையும், அவற்றின் மடிவழியே பால் பெருகுவதையும், அன்னக் குஞ்சுகள் அப்பாலைப் பிரித்துப் பருகுவதையும், பருகி மலர்ப் பள்ளியில் கிடந்து உறங்கும் பச்சைத் தேரைகள் தாலாட்டு வதையும் காண்கிறோம்; எருமைகளின் கனைப்பையும், தவளைகளின் ஒலியையும் கேட்கிறோம்.ஆகவே, இதனை ஒலியும் இயக்கமும் அமைந்த ஒரு மும்மடங்கு பொலியும் வண்ண ஓவியம் என்றே பாராட்டலாம்.
கம்பர் கவிதைகளைக் கண்டு மகிழ்ந்தவர்கள் கம்பசூத்திரம், கம்பச்சித்திரம் ,கம்பநாடகம் என்று பெயர் சூட்டி வாழ்த்தினர்.
இத்தாலியத் தலைநகரான பிளாரன்சு மாநகரில் இருள் சூழ்ந்து கிடக்கும் வேளையில் கவியரசர் தாந்தே தம் நூலை விரித்துக் காட்டுகின்றார். அவ்வேளையில் அந்நூலிலிருந்து செல்லும் ஒளி வெள்ளத்தால் நகர் புத்துயிர் பெறுகின்றது. இதனை ஓவியக் காட்சியில் தாம் கண்டதாக அறிஞர் தனிநாயக அடிகள் எழுதியது நினைக்கத்தக்கது.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றவை அஃறிணை” என்று நம்பப்பட்டது. உயர்திணையில் அஃறிணைச் சிறுமைகளையும் அஃறிணையில் உள்ள உயர்திணைப் பெருமைகளையும் கண்டு தெளிந்து கலை செய்தவன் கம்பன். போர் வெற்றி தான் புகழின் கல்வெட்டு என்று நம்பப்பட்டது, இல்லை…
யாரோடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது – என்று எதிர்வினை ஆற்றியவன் கம்பன்” இப்படிக் கவிப்பேரரசு வைரமுத்து வாயாரப் புகழ்கிறார்.
கவிதையின் மீது கம்பர் கொண்ட காதலுக்கு எல்லையில்லை. எந்த உயர்ந்த பொருளையும் கவிதை அமைப்பும் அழகும் கொண்டவையாகவே கண்டார். சீதையின் இயற்கையழகைப் பாராட்டிக் கூறும் அனுமன் சீதையின் நடையழகை அன்னநடையாகக் கூறவில்லை .அது உண்மைக் கவிஞரின் கவிதை நடையழகாகும். அவள் சீதை செம்மொழிக் கவிதை போல் நடந்தாராம்.
“பாவரு கிழமைத் தொன்மை பருணிதர் தொடுத்த நாவரு கிளவிச் செவ்வி நடையன்ன நடையள் நல்லோய்” என்று குறிப்பிடுவது வியப்பைத் தருகிறது. கோசலம், கிட்கிந்தை, இலங்கை என்ற மூன்றுமே அரசர்களைக் கொண்ட முடியரசாகும். தானே அரசன் என்ற தருக்கும் செருக்கும் இலங்கையை அலைக்கழிக்கிறது. தம்பி என்று பாராமல் தரையில் தேய்க்கிறான் வாலி, கோசல அரசைக் குடியரசுக் கோட்பாட்டைத் தழுவியதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.
“அந்த அரசில் எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தியதால் இலாரும் இல்லை ,உடையார்களும் இல்லை”
என்ற குறிக்கோளைக் காட்டுகிறார். இராமன் முடிசூடுகிறான் என்பதை அறிந்த மக்கள் “பூவலயம் இன்று தனியன்று” என்று பொது எனப் புகழ்ந்தார்களாம்.
பொது என்ற சொல்லை வேந்தர்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்று பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன.
கவிதை, கலையழகு, கருத்துவளம், கடவுள் நெறி, மக்கள் உரிமை, குடிமக்களின் பெருமிதம் என்றெல்லாம் புது மரபுகளுக்கு மதிப்பூட்டிக் கம்பர் பாடுவதை” எல்லை ஒன்றின்மை என்னும் பொருளதனை கம்பர் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதி அருந்தமிழ் அழியாப் புகழ் கொள்கிறது” என்று பாரதியார் ஆழ்ந்த பொருளோடு பாடினார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு : dr.n.arul@gmail.com
———————

Add a Comment