POST: 2019-10-14T08:53:16+05:30

தின செய்தி நாளிதழில் இன்று (14.10.2019) அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

நினைவலைகள் : மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்… !
===============================================
(பகுதி-4)

நெஞ்சில் நின்ற நெகிழ்வான தருணங்கள்…
********************************************************************

எங்கு பார்த்தாலும், என்னைத் தமிழ் என்றுதான் கூப்பிடுவார். நான் ஒருமுறை அவரைப் பார்த்துச் சொன்னேன். ‘அண்ணா! எனக்குப் பத்தாண்டுகள் முடிந்து விட்டன. இனிமேல் என்னுடைய ஊதியத்தில் உயர்வு வராது. எனவே பொதுப்பணிக்குச் செல்லலாம் என எண்ணுகின்றேன்’ என்றேன்.

‘அதென்ன பொதுப்பணி? இப்போது ஆற்றுவது, என்ன பணி? என்று கேட்டார். ‘இல்லை, அரசுப்பணி போதும் என் நினைக்கிறேன்” என்றேன் நான்.
‘நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்ன பணி உயர்வு தரலாம்’ என்று சொல்லுங்கள் என்றார் எம்ஜிஆர். ‘நான் யோசித்துச் சொல்கிறேன் அண்ணா” என்று சொல்லிவிட்டு, வந்துவிட்டேன். ரொம்பநாள் கழித்து, ‘நான் கேட்டேன். நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே’ என்று கேட்டார் எம்ஜிஆர். அதன்பின் இதுபற்றி யோசித்து, முதலமைச்சர் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

தமிழோடு தொடர்புடைய துறைகள் என்று தமிழக அரசில் சில துறைகள் இருக்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறை, மொழி பெயர்ப்புத்துறை, சட்ட மொழிபெயர்ப்புத்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அகரமுதலித்திட்டத்துறை, செந்தமிழ்ச் சொல்லியல், அருங்காட்சியகத்துறை, தொல்பொருள் ஆய்வுத் துறை, நூலகத்துறை, ஒவிய நுண்கலைக்குழு, தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றம் என்று பல பிரிவுகளை இணைத்து, தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டுத்துறை என்ற துறை உருவாக்கலாம்.

சட்டத்துறைக்கு சட்டம் படித்தவர்தான் செயலாளர். மைய அரசின் அணுசக்தித்துறையில், அந்தத் துறை வல்லுனர் தலைமை தாங்குவார். அதுபோல, அரசுச் செயலாளர் என்ற பொறுப்பில், தமிழ் அறிந்த ஒருவரைக் கருதிப் பார்க்கலாம் என்று முதலமைச்சருக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தேன். புதுவைப் பல்கழைக்கழக முன்னாள்துணைவேந்தர், என்னுடைய நண்பர் வேங்கட சுப்ரமண்யம்தான், இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று சொன்னவர்.

அப்போது உடன் இருந்து, தன் கைப்பட அந்தக் கடிதத்தை எழுதியவர் ஜெகத்ரட்சகன். என்னுடைய உடன்பிறந்த சகோதரர் போன்றவர். நாங்கள் சென்றபோது, ஏதோ ஒரு அலுவல் காரனைத்தினால், மறுநாள் வரச்சொன்னார் எம்ஜிஆர். அதன்பின் நான் போகவில்லை. ஆனால் பாருங்கள் அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, அமைச்சர் ராசாராம் மற்றும் ஆர்.எம். விரப்பனைச் சந்தித்துக் கொடுத்தார் ஜெகத்ரட்சகன்.
எப்படியோ, அந்தக் கடிதம் முதலமைச்சருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. நான்கு நாட்களுக்குள் ஒரு முடிவு சொல்கிறேன் என்று அதனைப் பார்த்து விட்டுச் சொன்னார் எம்ஜிஆர். சொன்னால் நம்பமாட்டீர்கள்! நான்கு நாட்கள் கழித்து, காலை பத்து மணிக்கு, எம்ஜிஆரே என்னிடம் தொலைபேசியில் பேசினார். ‘அரசுச் செயலாளர் இருக்கிறாரா’ என்று கேட்டார். ‘என்ன அண்ணா!’ என்று கேட்டேன் நான். ‘உங்களைச் செயலாளராகப் போட்டு விட்டேன். உடனே புறப்பட்டு வாருங்கள் என்றார் எம்ஜிஆர்.

நானும் ஜெகத்ரட்சகனும் ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, அவரைப் பார்க்கச் சென்றோம். அந்தச் சமயத்தில் என்னைப் பார்த்து, நீங்கள் கேட்ட பதவியை உருவாக்கலாம் என்று சொன்னார் எம்ஜிஆர். இதை வாழ்நாள் எல்லாம் நன்றியோடு நினைக்க வேண்டும். உடனே தலைமைச் செயலாளரிடம், அவரே தொலைபேசியில் பேசினார். அவ்வை நடராஜனை அனுப்பு கிறேன். அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் என்று அப்போது சொன்னார். இப்படி நெகிழ்ச்சியான தருணங்கள் பல உண்டு.
புரட்சித்தலைவர் அவர்களின் நலிவைப் பயன்படுத்திக்கொண்டு, ஆயுர்வேத மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், கைரேகை, ஜோதிடம் பார்ப்பவர்கள், குறி சொல்பவர்கள், வேதம் படித்தவர்கள் என்று நாள் தவறாமல், எப்படியாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டு, எம்ஜிஆரைப் பார்க்க வருவார்கள். தன்னுடைய நலிவை மனதில் வைத்துக்கொண்டு, புரட்சித்தலைவரும் கூட, அவர்கள் சொல்வதற்குத் தலையசைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நல்லநிலையில் இருந்தபோதே, என்னிடம் ஒரு ஒலை நறுக்கைக் காண்பித்தார். அது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் என்னுடைய எதிர்காலக் குறிப்பெல்லாம் இருக்கிறதாம். தொல்பொருள் ஆய்வுத்துறையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று சொன்னார்.

ஒலைநறுக்கின் ஆயுட்காலம் நாற்பதாண்டுகள்தான். பொடிப்பொடியாகி விடும். போலியான ஒலைச்சுவடிகளைத் தயாரிப்பதும், இது போன்ற புரட்டுகளை எழுதுவதையும் நம்புவதற்கு இடமில்லை என்று சொன்னேன். ஒருதடவை பார்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அதற்கான செலவு, ஞாபகத்தில் இல்லை. எப்படியாவது அந்த ஒலைச்சுவடியின் காலத்தை கண்டறிய வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அதில் எழுதியிருப்பது என்னவென்று பார்த்தால், பொருள் விளங்காத ஏழெட்டு பாடல்கள் மற்றும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல். சீகாளத்துப் புராணம் என்று எதிலிருந்தோ ஒரு பாடலை எடுத்து, நான்கு ஒலைநறுக்குகளில் எழுதியிருக்கிறார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒலைச்சுவடி அது என்று பம்பாயில் இருந்து ஒருவர் கண்டுபிடித்துச் சொன்னதைக் குறிப்பிட்டேன். நீங்கள் சொன்னது உண்மைதான். இப்படியொரு பொய்மை கூட, தமிழ்நாட்டில் நடக்கிறதே என்று சொன்னார்.

இன்னும் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். திருக்குறளைக்கூட தேசிய நூல் ஆக்கலாம் என்ற கருத்து, ஒருமுறை எழுந்தது. குன்றக்குடி அடிகளார், எழுத்தாளர் அகிலன் போன்ற பலர் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். முதலமைச்சர் என்னை அழைத்து, இது பற்றி ஆங்கிலத்தில் கடிதம் எழுதுங்கள். நான் தில்லியில் போய், பேசிவருகிறேன் என்றார். அதன்பின் சிலநாள் கழித்து தில்லி சென்ற முதலமைச்சர், இது பற்றிப் பேசிவிட்டு வந்தார்.

தொடர்ந்து, பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “எந்த நாட்டில், எந்த நூல் தேசிய நூலாக இருக்கிறது. ஒரு மாநிலத்து மொழியில் உள்ள நூலை, தேசிய நூல் ஆக்குவதற்கு, இதற்கு முன் என்ன வாய்ப்பிருக்கிறது? ஒரு காலத்தில் தன்னைத் தேடி வருபவர்களிடம், பகவத்கீதை வழங்கும் வழக்கம், குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணனுக்கு இருந்தது. என்னுடைய தந்தையார் நேரு, அவ்வாறு இந்திய நூல் என்று எதையும் வியப்பாகச் சொல்லக்கூடாது என்று கூறினார். சிலநேரங்களில் பஞ்சாபியர்கள், தங்களது கிரந்தசாகிப் நூலை, இந்திய தேசிய நூல் என்று கூறினார்கள். உங்களிடம் வேலைபார்க்கும் யாரோ ஒரு செயலாளர், தவறான வழி காட்டிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இனிமேல் இந்த வேலை செய்யாதீர்கள் என்று என் முதுகைத்தட்டி, அந்த காகிதத்தைக் கொடுத்து விட்டார் எம்ஜிஆர். எனவே, புரட்சித்தலைவர் மீது பரிவான உறவை, இப்படித்தான் நான் நினைக்க முடிகிறது.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை….

….. ஔவை நடராசன்
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *