POST: 2019-10-24T09:20:47+05:30

=============================================
தின செய்தி நாளிதழில் இன்று (24.10.2019) வெளியான கட்டுரை
=============================================

பாரத நாட்டின் முதல் பிரதமர் நேரு – கட்டி முடித்த கோபுரம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உலகில் மிகக் கடினமான ஒரு பணியை ஏற்று உழைப்பும் ஊக்கமும் கலந்த பெருமைக்குரிய வகையில் 1947 ஆம் ஆண்டில் சிறப்புடன் பணியாற்றி வந்தவர் நேரு. நாற்பதாண்டுகள் தன் நாட்டு மக்களுக்கும், தன் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து கடமையுணர்வுடன் செயற்பட்டார். அளவுக்கு மிகுந்த பணிச்சுமையே நேரு அவர்கள் உறக்கத்தில் இறப்பை ஏற்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஒரு நாளிதழில் இரங்கலுரை எழுதப்பட்டது.

நம் நாட்டில், கடந்த 19ஆம் நூற்றாண்டில், அரசியல் வானில் பேரொளி பரப்பிப் புகழ் பூத்துத் திகழ்ந்தவர்களுள், சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்! அண்ணல் காந்தியடிகள் (1869-1948), பண்டிதர் நேரு ( 1889 – 1964 ), சர்தார் வல்லபாய் படேல் (1875-1950) ஆகிய மூவர். இம்மூவரையும் முப்பெரும் முடிமணிகள் என்று புகழ் மாலை சூட்டுவர்.

புகழ்வாய்ந்த தலைமுறைப் பெருமையும் தகுதியும் கொண்ட அடித்தளத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் தான் நேரு பெருமகனாக நின்றார். நான்கு தலைமுறைகளுக்கு மேல் அவர் குடும்பத்தினர் ஒப்பரிய சிறப்பு பெற்றவர்களாயிருந்தனர். தில்லி நகரின் புறப்பகுதியில் ஒரு நீரோடைக்கு அருகில் சிறிது இடம் இவர் மரபினருக்கு வழங்கப்பட்டது. நீரோடையை உருது மொழியில் நகார் என்று கூறுவர். நகார் நேரு என்று மருவிற்று. இந்தியாவை ஆண்ட கடைசி இசுலாமிய மன்னர் பகதூர் ஷா அரசவையில் தலைமைக் காவல் துறை அதிகாரியாக நேருவின் பாட்டனார் பண்டிதர் கங்காதர் நேரு பதவி பொறுப்பிலிருந்தார்.

நேருவின் பாட்டியார் இந்திராணி இந்தி, பாரசீக மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்து, பாரசீகக் கவிதைகளை மிக அழகாகத் தம்முடைய உரையாடல்களில் மேற்கோளிட்டுப் பேசுவார். நேருவின் தந்தை மோதிலால் நேரு, மாபெரும் வழக்கறிஞராக ஒளிர்ந்தவர். உருது, பாரசீகம் மற்றும் ஆங்கில மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளில் அதிக நாட்டம் கொண்டவர். எந்தச் செயலையும் மிக நேர்த்தியாகச் செய்வதில் இவருக்கு இணை இவரே. எந்த நிலையிலும் முதல்தரமானவற்றையே விரும்புவார். தன்னைச் சுற்றிலும் உள்ள அனைத்தும் நெறியாக அமைய வேண்டும் என்று விரும்புவார். அண்ணல் காந்தியடிகள் அவர் மீது ஈடற்ற மதிப்பு கொண்டிருந்தார்.

பண்டிதர் சவகர்லால் நேருவோ, முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பயிற்சி பெற்று, ஏறத்தாழ ஆங்கிலேயராகவே வாழ்ந்தவர். இந்தியர் தங்கள் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். ஆனால், நேரு ஆங்கிலேயர்களைப் போலவே தன்னுடைய உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குணம் கொண்டவரில்லை.

நேருவின் தங்கை திருமதி.விஜயலட்சுமி பண்டிட், ஆங்கிலேய அரசு 1937 இல் விடுதலைக்கு முன்பு இந்தியர்களைக் கொண்டு அமைச்சரவை நிறுவியபோது திருமதி.விஜயலட்சுமியையும் அமைச்சராக நியமித்தார்கள். அதற்குப் பாராட்டாக அழகான கடிதத்தை ஏளனத் தொனியில், தங்கைக்கு நேரு எழுதினார். “சீனத் தத்துவ ஞானி ஒருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்களாம். அதில் முதல் பிள்ளை அறிவுடையவராகவும், கவிஞராகவும் மலர்ந்தார். இரண்டாம் பிள்ளை கலைகளில் மதிநுட்பம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். மூன்றாம் மகன், இராணுவத்தில் வீரராகச் சேர்ந்தார். கடைசி மகனோ, சோடை போய்த் தன்னுடைய புகழ் பெற்ற தந்தைக்குக் களங்கமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சி, அவரை என்ன செய்ய வேண்டும் என்று பலரை வினவியபோது, அவனுக்கு அறிவுக்கூர்மை சற்றுக் குறைவாக இருந்ததால், அமைச்சராக நியமித்தார்களாம். அதுபோல், நம் குடும்பத்தில் நீ அமைச்சராக நியமனம் பெற்றதை வாழ்த்தி, இந்தக் கதையை உனக்கு அனுப்புகிறேன்” என்றார். இது நேருவின் புகழ் பெற்ற கடிதமாகும். மதிப்பும் கேலியும் நிரம்பிய அன்புக் கடிதமாகும்.தங்கையின் மேல் அவர் கொண்டிருந்த பாசம் ஈடற்றது.

நேரு தன் வாழ்நாளில் கால் பகுதியை விடுதலைப் போருக்காகச் சிறை சென்றவர். “சிறைச்சாலைகள் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அங்கு இயல்பாகவே, எளிய வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். மனநிலை குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றில் தோயும். சிறைச்சாலைக்குச் செல்வதற்கு முன்னர், நம் வாழ்வில் நாம் கவனிக்காத சிறிய விஷயங்களைக் கூடச் சிறைச்சாலையில் நாம் பாராட்டத் தொடங்குகிறோம். இரண்டு வகையான சிறைச்சாலைகளில் இருந்தேன். ஒன்று ஆங்கிலேயர் ஆட்சியில், மற்றொன்று, நாடு விடுதலை அடைந்த பிறகு பிரதமர் என்ற சிறையில் 12 ஆண்டுகளாக இருந்து வருகிறேன்” என்று நேரு எழுதினார்.

பண்டித நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ் வாய்ந்தவை. மொத்தம் 196 கடிதங்களை எழுதியுள்ளார். அவ்வாறு அவர் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், “நான் பொதுவாகக் கடிதங்கள் எழுதுவதில்லை. நான் சிறையில் கழித்த பல ஆண்டுகள் என் வாழ்வின் சிறந்தவை என்றும் கூற நான் தயாராக இல்லை. இருப்பினும், படிப்பும் எழுத்தும் எல்லாவற்றையும் நான் எளிதாகக் கடந்து வருவதற்கு மிகவும் துணையாக இருந்தன. நான் ஓர் இலக்கியவாதி அல்ல, நான் வரலாற்றாளரும் அல்ல; உண்மையில் நான் யார் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது எனக்குக் கடினமாக இருக்கிறது. பல துறைகளில் மேலோட்டமான அறிவைக் கொண்டிருந்தவனாக நான் இருக்கிறேன். கல்லூரியில் அறிவியல் பயிலத் தொடங்கினேன். பின்னர்ச் சட்டம் தேர்ந்தெடுத்தேன். வாழ்வின் ஏனைய பல்வேறு பொருள்களில் நாட்டம் கொண்டேன். இறுதியாக, நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் களமடைந்து தற்போது பின்பற்றப்பட்டு வரும் சிறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டேன். யாதொரு செயலிலும் இந்தக் கடிதங்களில் நான் எழுதியிருப்பவைகளை இறுதித் தீர்வாக நீ எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த அரசியல்வாதியும் ஒவ்வொரு துறை குறித்தும் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவது வழக்கம். மேலும், உண்மையில் அவர் அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகத் தனக்குத் தெரியும் என்று அவர் நடிக்கச் செய்வார். கருத்துடன் இவர்களைக் கவனிக்க வேண்டும்” என்று பணிவு பளிச்சிட எழுதினார்.

“ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் வேலை செய்வது என்பது நேருவின் ஒரு நாள் நிகழ்ச்சி என்பது புதுமையல்ல. 13 ஆண்டுகளாக அவருடன் இருந்த வகையில் பணி ஆற்றியது எனக்கு வழக்கமாகிவிட்டது. 70 அகவையைத் தாண்டிய நேருவுக்கு வியக்கத்தக்க வகையில் இருக்கும் உழைக்கும் ஆற்றல் கிட்டியிருந்தது” என்று நேருவின் முதன்மைத் தனிச் செயலராக இருந்த எச்.வி.ஆர்.அய்யங்கார் எழுதினார்.

நேரு பெருமகனார் இறந்தபோது, மூதறிஞர் இராஜாஜி எழுதிய இரங்கல் கடிதம் நெஞ்சை உருக்குவதாகும். “என்னைவிடப் பதினொரு ஆண்டுகள் இளையவர், பதினோரு மடங்கு நாட்டிற்கு முக்கியமானவர், பதினோரு நூறு மடங்கு நாட்டு மக்களுக்கு வேண்டியவராவார், பெருந்தகை நேரு திடீரென நம்மிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார்.

இந்தச் செய்தியைக் கேட்பதற்காகவா நான் உயிருடன் இருக்கிறேன், தில்லியிலிருந்து இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு… அந்தப் பழைய அலுவல் அறை இப்போது முற்றும் காலியாக இருக்கிறது… இந்தப் பத்து ஆண்டுகளாக, பொதுத் திட்டங்களில் தவறானவை என நான் கருதியவை குறித்துப் பெருந்தகை நேருவுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரால் மட்டுமே அவற்றையெல்லாம் சரிசெய்ய இயலும் என்பதை இத்தனை நாள்களில் நான் அறிந்து கொண்டேன்.

வேறு எவரும் அதைச் செய்வதற்குத் துணிய மாட்டார்கள். நான் நடத்திய வாதங்கள் என்னை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் சென்றுவிட்டார். நம் அனைவரிலும் சிறந்த நாகரிகமுடையவர் நம்மில் பலர் இன்னும் அவ்வாறு அவரைப்போல் பண்படையவில்லை.

கடவுள் தான் நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.”

பண்டித நேரு அவர்களின் நினைவாக நேரு அருங்காட்சியகம், நூலகம் மற்றும் பல்கலைக்கழகம் புதுதில்லியில் 1964 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பண்டித நேரு தொடர்பான 2,67,000 அச்சிடப்பட்ட புத்தகங்களும், 2,00,000 ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

– ஒளவை அருள்
தொடர்புக்கு : dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *