POST: 2019-10-31T07:00:26+05:30

============================================
தின செய்தி நாளிதழில் 30.10.2019 அன்று வெளியான கட்டுரை
============================================

குருதி வெள்ளத்தில் கொடிமலர் !
***************************************************

மாந்தரின் பிறப்பு வெறும் நிகழ்வாக இருக்கலாம், ஆனால், மனத்தில் என்றும் ஒருவரின் மறைவு வரலாற்று நிழலோடு படிந்திருக்க வேண்டும்., தன் உயிரை நீத்துப் பல உயிர்களைக் காத்த, தன்னலம் கடுகளவுமில்லாத வரலாற்று நாயகி தான் நீர்ஜா பானோட் ஆவார். சண்டிகரில் பிறந்து, தனது அழகாலும் திறமையாலும் கல்வியாலும் விளம்பரத் துறையில் விரைவாக முன்னேறி உயர்ந்து கொண்டிருந்த நீர்ஜாவிற்கு 1985 ஆம் ஆண்டு பெற்றோரால் நடத்தி வைக்கப்பட்ட திருமணம் மணமகளை விலை பேசிய வரதட்சணைக் கொடுமையால் தோல்வியில் முடிந்தது.

இல்லற வாழ்க்கை இனிதாய் அமையாத இடருக்கு ஆளான நீர்ஜாவிற்கு, சில நாள்களுக்குப் பின்னர், அனைத்து அமெரிக்க வான் நிறுவனத்தால் – இந்தியாவில் விமானப் பணியில் நியமிக்கப்பட்டு, பல நாடுகளில் பல்வகைத் தடுப்புக் காப்புப் பயிற்சி பெற்று, எவ்விதத் தீங்குகளையும் வானூர்திப் பயணத்தில் எதிர்காண இருப்பதைத் தடுப்பு பயிற்சியினையும் பெற்றுச் சிறந்த நிலையில் மிளிர்ந்தார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் கராச்சி மற்றும் பிராங்க்பட் வழியாகச் செல்லும் PA73 வானூர்தியில், நீர்ஜா மற்றும் ஏனைய இந்திய வானூர்திக் குழுவினர் பயணிகளுடன் பறக்கும்போது, எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெற்றது. பாகிஸ்தான் காவல்துறை வாகனத்தைப் போன்ற வேன் ஒன்றில் தானியங்கித் துப்பாக்கி, கையெறிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த நான்கு தீவிரவாதிகள் வானூர்தியைக் கைப்பற்றினர்.

இந்தத் தீவிரவாதிகள் அனைவரும் அபு நிதல் அமைப்பை (ANO) சேர்ந்தவர்கள். மேலும், அமெரிக்க விமானத்தைக் கடத்துவதற்கு லிபியாவால் ஆதரவளிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டது.

விமானக் கடத்தலின்போது மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடைமுறைகளை நீர்ஜா விரைவாகவும் துணிச்சலுடன் மேற்கொண்டார். அவருடன் சேர்த்துச் சுமார் நானூறு பயணிகளும் விமானப் பணியாளர்களும் பதினாறு மணி நேரத்திற்குத் துப்பாக்கி முனையில் மரணத்தின் பிடியில் இருக்கும்போது விமானத்தில் அவரின் துணிச்சலான நடவடிக்கை போற்றுதலுக்குரியதாய் இருந்தது. அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்த அச்சங்களைப் புறந்தள்ளி, PA 73-இன் பொறுப்புப் பணியாளராகத் தீவிரவாதிகளிடம் நீர்ஜா தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பயணிகள் கழிவறைகளைப் பயன்படுத்தவும், தண்ணீர் அருந்தவும் அனுமதிக்குமாறு தீவிரவாதிகளிடம் வேண்டினார். நீர்ஜாவின் அமைதியான குணமும், அவர் பணியாற்றிய நேர்த்தியும் விமானத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. மழலையர் முதல் வயது முதியவர்கள் வரை உள்ள பயணிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தியதனால், அவர்களும் ஆறுதல் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் இலக்கு அமெரிக்கர்கள் தான் என்பதை அறிந்து கொண்ட நீர்ஜா, அனைத்து அமெரிக்கர்களின் கடவுச்சீட்டுகளையும் இரகசியமாகத் திரட்டி, மறைத்து வைத்ததால், பல அமெரிக்கர்கள் நிகழவிருக்கும் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

செப்டம்பர் 5 அன்று மாலையில், விமானத்தின் உட்புறம் தாங்க முடியாத அளவிற்கு வெப்பமானது. மின்சாரம் நிற்கப் போவதைக் குறிக்கும் வகையில், விமானத்திலுள்ள விளக்குகள் சிமிட்டத் தொடங்கின. விமானம் முழுதும் இருண்டு விட்டதால் அங்கு அச்சம் கலந்த அமைதி நிலவியது. அதிரடிப்படையினரின் தாக்குதலை எண்ணி அஞ்சி, நான்கு தீவிரவாதிகளும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு நான்கு முனைகளிலிருந்தும் பிணைக்கைதிகளை நோக்கிச் சுடத் தொடங்கினர். குண்டு தீர்ந்து போகும் வரையில் அவர்களின் தாக்குதல் ஆயுதத்தைக் கொண்டு அனைவரையும் வரிசையாக அவர்கள் சுட்டுக்கொண்டே இருந்தனர். பிணையாளிகளின் மீது ஆறு எறி குண்டுகளையும் தீவிரவாதிகள் வீசினர், இது விமானத்தினுள்ளேயே வெடித்தது. இந்தப் படுகொலை மிகவும் பயங்கரமானதாகும். இத்தாக்குதலில் 21 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்தப் பதற்றத்திற்கிடையே, நீர்ஜா விமானத்துள் ஓடி ஒரு கதவைத் திறந்தார். அவர் நினைத்திருந்தால், அவர் முதலில் விமானத்திலிருந்து வெளியில் பாய்ந்து பாதுகாப்பாக வெளியேறி இருந்திருக்கலாம். ஆனால் கருணையும், இரக்கமும், சமூகச் சிந்தனையும் நிறைந்த நீர்ஜா அவ்வாறு செய்யாமல், பயணிகளை “தப்பித்து வெளியே ஓடுங்கள்” என உரக்கக் கூவி வழிநடத்தினார். தாக்குதலால் ஏற்பட்ட காயத்துடன் வெளியேறிய பயணிகள் அவசர ஊர்திகளில் ஏற்றப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.” பயணிகளோடு கலந்து தீவிரவாதிகள் வெளியேற முயன்றபோது பெரும்பாலான தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டனர்.

விமானப் பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் விமான நிலையக் கட்டடத்தை அடைந்து மீண்டும் ஒன்றிணைந்த சில நேரங்களுக்குப் பின்பு நீர்ஜா அங்கு இல்லாததை அவர்கள் உணர்ந்தனர். பின்னர் விமானப் பணிக் குழுவைச் சேர்ந்த இருவர், மீண்டும் விமானத்திற்குத் திரும்பி, கதவின் அருகில் குருதி வெள்ளத்தில் வீழ்ந்திருந்த கொடிமலராக நீர்ஜாவைக் கண்டனர். அவர் தன் நினைவோடு இருந்தார், யாருமின்றி இருந்த மூன்று பன்னாட்டு சிறார்களை ஆரத்தழுவித் தீவிரவாதிகளின் தோட்டாக்களிலிருந்து காக்க அவர் முயன்றபோது, மூன்று முறை அவரின் வயிற்றுப்பகுதியில் சுடப்பட்டது. அவசர ஊர்திகள் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்து சென்றுவிட்டிருந்தன. எனவே, விமானப் பணிக்குழு உறுப்பினர், நீர்ஜாவை ’பொதியுந்திலேயே’ ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், விமான நிலையத்திற்கு வெளியே போக்குவரத்து நெரிசலால், மருத்துவமனையை நெருங்கும் பொழுதே, நீர்ஜா இறந்து விட்டார்” என மருத்துவர்கள் அறிவித்தனர்.

இறுதி நேரத்தில், மூன்று குழந்தைகளைத் தீவிரவாதிகளின் தோட்டாக்களிலிருந்து காப்பாற்றியதாலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பிழைக்கக் காரணமாக இருந்த, ஒப்பற்ற தியாக உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னரும், அவர் முகத்தில் எப்பொழுதும்போல நிறைவான புன்னகை நிலைத்திருந்தது.

நீர்ஜாவின் துணிவு, இரக்கம், பரிவு மற்றும் ஈடில்லாத ஈகம் குறித்த செய்திகள் வெளியுலகிற்குத் தெரிந்த போது, விமானக் கடத்தல் சதியை முறியடித்த காவியத்தலைவி என அனைத்துலக அளவில் அவர் போற்றப்பட்டார். 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தம்கா-ஏ-இன்சானியாத் என்ற விருதினைப் பாகிஸ்தான் வழங்கியது.

26.01.1987 அன்று நீர்ஜாவிற்கு இந்தியாவில் வீரதீரச் செயல்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான ”அசோக் சக்ரா” விருது வழங்கப்பட்டது. இதுவரை விருது பெற்றவர்களில் இளம் வயதில் இவ்விருதைப் பெற்றவரும் முதல் பெண் விருதாளரும் நீர்ஜா மட்டுமே.அரும்பெறல் பரிசை நீர்ஜா மறைந்த பிறகு அளித்ததால் மன ஆறுதலைத் தவிர நாம் என்ன அமைதி காண முடியும் ?.

இவற்றுடன், விமானப் பாதுகாப்பு அறக்கட்டளை விருது – அமெரிக்கா, குற்றவாளிகளுக்கெதிரான நீதி விருது – அமெரிக்காவின், சிறந்த துணிச்சல் விருது – அமெரிக்கா, விமானப் போக்குவரத்து அமைச்சக விருது – இந்தியா, இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பொதுமக்கள் அவையினால் அளிக்கப்பட்ட பாரதக் கெளரவ விருது மற்றும் இந்தியப் பெண் விமானப் பணிப்பெண்களுக்கான விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி விருது – இந்தியா ஆகிய பல்வேறு விருதுகள் நீர்ஜா நினைவிற்கு வழங்கப்பட்டன.

இந்திய அரசால் நீர்ஜாவின் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மும்பையில் உள்ள இரண்டு வணிக வளாகங்களுக்கு நீர்ஜாவின் பெயரிடப்பட்டுள்ளது. நீர்ஜாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தும் விதமாகப் பாகிஸ்தானிலுள்ள ஆஸ்ட்ரே பள்ளியிலுள்ள அரங்கம் ஒன்றிற்கு ’நீர்ஜா பனாட் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் புதிய மகளிர் விடுதிக்கு ’நீர்ஜா பனாட் இல்லம்’ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

சிலப்பதிகாரம் மூன்று வாழ்வியல் அறங்களை எடுத்துரைத்தது போல, ”என்ன நடந்தாலும் பரவாயில்லை உங்கள் கடமையைச் செய்யுங்கள்” ”உங்களது தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்” “யாதொரு அநீதியையும் பொறுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற மூன்று பாடங்களை நீர்ஜா நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். ஆபத்தான சூழல்களில், மிகுந்த துணிவுடன் வீரத்துடனும் நீர்ஜா மேற்கொண்ட நடவடிக்கைகள், விமானத் துறை வரலாற்றிலும், யாதொரு நிறுவனத்தின் சரித்திரப் பதிவுகளிலும் உள்ள நிகழ்வுகளோடு யாதொரு வகையிலும் ஈடு இணை செய்ய இயலாதவையாகும்.

இவ்வளவு விருதுகள் தரப் பெற்றுப் பெரிதும் போற்றப்பட்ட தரப்பட்ட நீர்ஜா, துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானது, இன்று நடந்ததல்ல. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (5.9.1986) நடைபெற்றது. குறிப்பாக, அமெரிக்கர்கள் மட்டும் காப்பாற்றப்பட்ட சூழலில், அமெரிக்க நாடு லிபியா நாட்டிடமிருந்து, இழப்பீடாக 1.5 பில்லியன் டாலர் (ஒன்பதாயிரத்து இருநூற்று முப்பத்தியாறு கோடியே அறுபத்தியைந்து இலட்சத்து ஐம்பதாயிரம்) இந்திய உருபாய்ப் பெற்று, அமெரிக்கர்களின் அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்கியது.

இந்திய நாட்டைச்சார்ந்த 120 குடும்பங்களுக்கு இம்மியளவுக் கூட இழப்பீட்டு தொகை தரப்படவில்லை என்று இன்றும் வாதிட்டு அமெரிக்க அரசு நிதியை வழங்க வேண்டும் என்று நினைவில் வாழும் நீர்ஜா பானாட்டின் அண்ணன், என் இனிய நண்பர் பஞ்சாபைச் சேர்ந்த அனீஷ் பானாட் போராடி வருவதும் பாராட்டத்தக்கதாகும்.

நிதியம் வந்தோ – நீதி எழுந்து நின்றோ நீர்ஜாவின் உயிரை மீட்கவா முடியும் ! குருதி வெள்ளத்தில் சாய்ந்த அந்தக் கொடிமலர் புகழ்மணம் என்றும் குன்றாது.

—– ஔவை அருள்
தொடர்புக்கு : dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *