===============================================
உகரம் டிசம்பர் 2018 இதழில் வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்கள் குறித்த கட்டுரை
===============================================
அறிஞர் பெருந்தகை ஔவை நடராசன்!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
—– முனைவர் மறைமலை இலக்குவனார்.
“ஒளவை” என்று சொன்ன மாத்திரத்திலேயே மேடைகளில் பொங்கிப் பெருக்கெடுத்து அவையினரின் செவிகளில் தமிழமுது பாய்ச்சும் நாவுக்கரசர், நற்றமிழறிஞர், முனைவர், பேராசிரியர் நடராசப் பெருந்தகையின் திருவுருமனக்கண்ணில் துலங்கித் தெரியும். இன்றைய தலைமுறையினருக்கு உரைவேந்தரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆயின் எங்களைப் போன்றோருக்கு உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்களின் தறுகண்மிக்க தோற்றமும், பொடிபோட்டுக் குடைமிளகாய் போன்று புடைத்த மூக்கும், அழுத்தமும், எடுப்பு மிக்க பொழிவும் மனக்கண் முன் விரியும். செவ்வியல் இலக்கியமும் தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும் பன்னிரு திருமுறைகளும் எப்போது வேண்டுமாயினும் போய்ப் பாடங்கேட்டுக் கொள்ளத்தக்க பேராசான் ஒளவை சு. துரைசாமி அவர்களிடம்… தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும் பாடம் கேட்கும் பேற்றினைப் பெற்றுள்ளேன். அவரிடம் பாடம் கேட்கும் முன்பே புகுமுக வகுப்பிலும், இளங்கலை வகுப்பிலும் அவரது அருமருந்தன்ன புதல்வர் ஔவை நடராசன் அவர்களிடம், பாடம் கேட்கும் இனிய வாய்ப்பினைப் பெற்றேன்.
புகுமுக வகுப்பில் என் பாடங்களுள் ஒன்றாக அமைந்திருந்த சிறப்புத்தமிழை அவர் கற்பித்தார். ஏனைய பேராசிரியர்களைவிட அவர் பாடம் நடத்தும் பாணி புதுமையானது. மற்றவர்களெல்லாம் பாடத்தைத் தவிர வேறேதுவும் வகுப்பில் சொல்ல மாட்டார்கள். இவரோ பாடத்தை வகுப்பில் சொல்லவே மாட்டார். அவர் உள்ளே நுழைந்ததும் அவர் வாய்திறந்தால் குற்றால அருவி கொட்டுவதைப் போலத் தமிழருவி ‘தடதட’ வெனப் பொழிந்துவிழும். தமிழின் இனிமையையும் தனித்தன்மையையும் மாணவர் மனங்கொள்ளும் வகையில் பல்வேறு இலக்கிய மேற்கோள்களுடன் எடுத்துரைப்பார்.
1962-ஆம் ஆண்டில் புகுமுக வகுப்பில் ‘இ’ பிரிவில் நாங்கள் அறுபது மாணவர்கள் இருந்திருப்போம். ஆனால் இவர் வகுப்பு என்றால் ஏனைய வகுப்புகளிலிருந்து இன்னொரு ஐம்பது, அறுபது பேர் வந்து அமர்ந்து கொள்வார்கள். நெருக்கிப் பிடித்து எங்கள் பலகைகளில் வந்து அமரும் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு நாங்கள் எளிதில் இடம் கொடுத்துவிடமாட்டோம். சிலர் இடம் போதாமல் பலகை விளிம்பில் ஒட்டிக் கொண்டு பாடம் கேட்பார்கள்.
ஒளவை ‘திரு டி. நடராசன்’ அல்ல; தமது பேச்சாற்றலால் ‘அவையினரின் உள்ளத்தைத் திருடிக் கொள்ளும் நடராசன்’, ‘அவை திருடி நடராசன்’ என்று அவர் நாவன்மையைப் பாராட்டுவார்கள்.
இவர் வில்லுப் பாட்டுப் பாடவந்தால், முத்தமிழ் விழாவுக்குப் பெருங்கூட்டம் கூடிவிடும். “அரிராம் சேட்டுப் பாட்டைக் கேட்கவரும் கூட்டம்போல், ஔவையின் வில்லுப்பாட்டுக் கேட்கவந்துள்ளார்கள்” என்று அந்த அவையினரில் ஒருவர் கூறியது, இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. “செந்தமிழ்த்தாய் என்று சொல்லியே – வில்லினைப் பாட, ஆமாம்; வில்லினைப் பாட, வந்தருள்வாய் தமிழன்னையே” – வில்லுப்பாட்டுத் தொடங்கும்.
இவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக விளங்கியபோதிய இவரது சொல்லாற்றல் கண்டு வியந்த சுரதா, இவரைப் பாதி அண்ட என்று பாராட்டிச் சென்றார்.
அண்ணாவும் கலைஞரும் நாவலரும் பேராசிரியரும் விரும் கேட்கும் பொழிவாளர் நம் ஒளவை என்னும்போதில், இவான் நாவாற்றலுக்கு இணையேது?
இவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகக் கூறிவிட்டு அதன்பின் என் பட்டறிவைத் தொடர்கிறேன்.
இவர் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) உள்ள செய்யாறு எனும் ஊரில் உரைவேந்தர் எனப் புகழப்படும் தமிழறிஞர் ஔவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி :
======
மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (Master of Arts) பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து, 1958 ஆம் ஆண்டில் ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர்’ பட்டம் பெற்றார்.
பணி :
======
ஔவை நடராசன் மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளா அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலும் காந்தி இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றின் இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதலமை எம்.ஜி. இராமச்சந்திரன், இவரைத் தமிழ்நாடு அரசின் செய்தி ம தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமாதல் ஒன்பது ஆண்டுகள் (1975- 1984) வரை அப்பணியிலிருந்தார். 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார்.
பணி அதிகாரியாக இல்லாமல், தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். அதன் பிறகு, 1992 திசம்பர் 16 ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15 ஆம் நாள் வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார். அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.
விருதுகள் :
==========
தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது இந்திய ஒன்றிய அரசால் வழங்கப்படும் பத்மசிறீ விருது இலங்கை, கம்பர் கழகத்தின் “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது” இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது.
படைப்புகள் :
============
நடராசனின் சொற்பொழிவுகள் சில நூல்களாக வெளிவந்துள்ளன. அவை : வாழ்விக்க வந்த வள்ளலார் பேரறிஞர் அண்ணா கம்பர் காட்சி கம்பர் விருந்து திருப்பாவை விளக்கம் திருவெம்பாவை விளக்கம் சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் Self Confidence (English) Saying of Stalwart The Panaroma of Tamils அருளுக்கு ஒளவை சொன்னது Thirukkovaiyar (English)
சிறப்புகள் :
===========
2006 ஆம் ஆண்டில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக் கழக இரண்டாவது பட்டமளிப்பு விழாவில், விழாப் பேருரையாற்றிய இவரைப் பற்றிய குறிப்புகள்… அப்போது வெளியிடப்பட்ட பட்டமளிப்பு விழாச் சிறப்பு மலரில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் கீழ்க்காணும் தகவல் குறிப்பிடத்தக்கவையாகும்.
“ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆர் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், பல பல்கலைக்க மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.
உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-ல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகப் பிரதி நிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்பச் சொல்லாக்கர் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்”.
அறிஞர் பெருந்தகைகளை அயல்நாடுகளுக்கு இந்தியத் தூதராக அனுப்பும் மரபு, நம் அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அம் மரபினையொட்டித் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் மோரிசியசு, மலேசியா, சிங்கப்பூர், மியான்மார் முதலான நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இவரை நம் நாட்டுத் தூதராக அனுப்பினால், அஃது நம் அரசுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
இப்போது மீண்டும் என் மாணவப் பருவத்துக்குச் செல்கிறேன். கல்வியாண்டு முடியும், தறுவாயில் மாணவர்க்கிடையே தமது பட்டறிவைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், இவரைப் பற்றி நான் என்ன கூறினேன் தெரியுமா?
“ஔவை நடராசன் அவர்கள் அரசியலில் நுழைந்திருந்தால் அண்ணாவின் தம்பிகளுக்குப் போட்டியாக அமைந்திருப்பார். நடிப்பில் ஈடுபட்டிருந்தாலும் சிவாசி கணேசனுக்கு அடுத்த நிலையைப் பெற்றிருப்பார். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதியிருந்தால் தமிழ்நாட்டின் தலைசிறந்த செயலாளராகத் திகழ்ந்திருப்பார். ஆனால் ஆசிரியப்பணிக்கு வந்துள்ளதால், நமக்கெல்லாம் தலைசிறந்த ஊக்க ஊற்றாக விளங்குகிறார்.”
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய சொற்கள் இவை. எந்நாளும் என் போன்றோருக்கு ஊக்க ஊற்றாக, வழிகாட்டிய திகழும் இந்த அறிஞர் பெருந்தகையின் பெருமையை ஒரு பக்கங்களில் உரைக்கவியலுமா?
மருத்துவமாமணி தாரா நடராசன் அவர்களின் அன்பு துணையுடன் மருத்துவர் கண்ணன், முனைவர் அருள், மருத்துவர் பரதன் என்னும் மும்மணிகளைப் புதல்வர்களாகப் பெற்றுப் புகழ்நிறுவியுள்ள ஔவை நடராசன்… இன்னும் நூறாண்டு வாழ்ந்து தமிழ்நாடு நலம் பெற வழிகாட்ட வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் இவர் அணி செய்த “மொழிபெயர்ப்பு இயக்குநர்” பதவியை அணிசெய்து கொண்டிருக்கும் இவரது புதல்வர் முனைவர் அருள் அவர்களைப் பற்றிக் கூறாது விடுத்தால், இக் கட்டுரை முழுமை பெறாது. ‘தந்தையர் ஒப்பர் மக்கள்’ என்னும் தொன்மொழிக்கேற்ப அப்பாவைப் போலவே தமிழ், ஆங்கிலம் இருமொழிப்புலமையும் இருமொழிகளிலுமே நாவீறுமிக்க நாவலாராகத் திகழ்ந்துவரும் ஒளவை அருள் அவர்கள்… ஒளவை தமிழகத்துக்கு வழங்கிய கொடைகளுள் தலையாயது என்பது உண்மை. வெறும் புகழுரையன்று!.
===============================================
முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள்…. தமிழ்ப்பேராசிரியரும் தமிழினப் போராளியுமான இலக்குவனார் அவர்களின் மகன் ஆவார். இவர் தமிழ் வளர்ச்சிக்கென ஓயாது பாடுபட்டுவரும் தமிழறிஞர்!
===============================================

Add a Comment