POST: 2019-11-07T09:06:59+05:30

===========================================================================
உகரம் ஏப்ரல் 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்களைப் பற்றி கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் எழுதிய கட்டுரை
===========================================================================

அவையம் போற்றும் எங்கள் ஒளவை!
************”””””””””””””””””””***********”””””””””””

– கவிஞர் மு.முருகேஷ்

சரியாய் 33 ஆண்டுகளுக்கு முன்னர், எனது தமிழாசிரியர்கள் அய்யா வேங்கட சுப்பிரமணியன், புலவர் அன்பு.கணபதி, புலவர் முத்தையா ஆகியோருடனான உரையாடலின்போது எனது செவிக்கு அறிமுகமான பெயர் ஔவை நடராசன்.

அதுவரை ‘ஔ’ எனும் எழுத்தை , ஒளவையார், ஒளடதம் எனும் இரு சொற்களின் வழியாக மட்டுமே அறிந்திருந்தேன். எனது தமிழாசிரியர்கள்

ஒளவை நடராசன் என்றதும் அப்பெயருக்கு உரியவர் ஆணா, பெண்ணா என்கிற குழப்பமே முதலில் எனக்கு உண்டானது.

தமிழாசிரியர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதுகளில், ஔவை நடராசன், சிறந்த தமிழறிஞர், நல்ல தமிழ் உரையாளர், பழகுவதற்கினிய பண்பாளர் எனப் பலவாறாக அய்யா ஒளவை நடராசன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.

தமிழின் மிகச் சிறந்த உரைவேந்தர் என்று பாராட்டப்பெற்ற ஒளவை சு.துரைசாமி-லோகாம்பாள் தம்பதிகளின் இரண்டாவது திருமகனாகப் பிறந்தவர் ஔவை நடராசன். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ‘ஔவை குப்பம்’ எனும் கிராமத்தில் / பிறந்ததினால் ஔவை என்கிற ஊர்ப்பெயரும் துரைசாமி, அவர்களின் பெயருடன் சேர்ந்தே ஒற்றிக்கொண்டது.

1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தார்/ ஔவை நடராசன். ஒன்றுபட்ட வடாற்காடு மாவட்டத்திலுள்ள செய்யாறு (தற்போது, திருவண்ணாமலை மாவட்டம்) எனும் ஊரில் பிறந்த ஔவை நடராசன், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் படித்து, முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளமுனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

தான் படித்த மதுரை தியாகராசர் கல்லூரியிலும், தஞ்சையிலுள்ள மன்னர் சரபோஜி கல்லூரியிலும் சில காலம் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திலும் சில காலம் செய்தி அறிவிப்பாளராகப் பணி செய்தார்.

ஔவை நடராசன் அவர்களது தமிழ்ப் புலமையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில், துணை இயக்குநராக நியமித்தார். அப்பொறுப்பில் 1975 முதல் 1984வரை மிகச் சிறப்பான முறையில் தனது பணியை நிறைவேற்றினார்.

அதுவரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலராக, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த நடைமுறையை முதன்முதலாக மாற்றி, அதன் செயலராக ஔவை நடராசன் (1984-1992) நியமிக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியேற்றார். அய்யா ஔவை நடராசன் அவர்களைச் சந்திக்கும் பேறு அச்சமயத்தில் தான் எனக்கு வாய்த்தது.
தஞ்சை இராமநாதன் செட்டியார் மன்றத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழா ஒன்றின் கவியரங்கினில் பங்கேற்க, புதுக்கோட்டையிலிருந்து நான் சென்றிருந்தேன். அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர் அய்யா ஔவை நடராசன் அவர்கள்தான்.

நிகழ்வு தொடங்கும் முன்னரே விழா அரங்கிற்கு வந்த அய்யா அவர்கள், மேடையின் முன்வரிசையில் வந்து அமர்ந்துகொண்டார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் பலமுறை மேடைக்கு அழைத்தும், ”கவியரங்கம் முடியட்டும்; நான் பேசும்போது வருகிறேன்…” என்றார்.

ஒரு மணிநேரம் நடைபெற்ற கவியரங்கம் முழுவதையும் அமைதியாக ரசித்து கேட்டவர், மேடையை விட்டுக் கீழிறங்கியதும், என்னை அருகே அழைத்துப் பாராட்டினார். என்னைப் பற்றி விசாரித்தார். அடுத்ததாக, அய்யா அவர்கள் பேச மேடையேறினார். பாதி நிரம்பியிருந்த அரங்கம், அய்யா பேசப் போகிறார் என்கிற அறிவிப்புக்குப் பின் முழுதாக நிறைந்தது. ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.’ (குறள் எண் : 643) எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, மிகச் சிறந்த சொல்வன்மை மிக்க உரையினை அன்றைக்கு அவையில் வழங்கினார் ஔவை நடராசன்.

2000த்தில் பணியின் காரணமாகச் சென்னைக்கு வந்ததும், பல நிகழ்வுகளில் அய்யா ஔவை நடராசனின் தமிழுரை கேட்கும் நல்ல பல வாய்ப்புகள் எனக்கு வாய்த்தன.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அய்யா தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் பலமுறை அவரது இனிய தமிழ் உரை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

எவ்வித குறிப்புகளுமின்றி ஆற்றொழுக்கான தமிழ் நடையில் ஔவை நடராசன் அவர்கள் பேசுவதைக் கேட்கவே, பேரருவி ஒன்று இசை ஒழுங்கோடு நம் செவிகளில் இசை முழக்கம் செய்வதைப் போலிருக்கும். கம்பன் விழா, நூல் வெளியீட்டு விழா, பாராட்டு விழா, தமிழ்த் திருவிழா…. என எந்த விழாவானாலும் அய்யா பேசுகிறார் என்றால் சென்றுவிடுவதுண்டு. (இப்போது பத்திரிகையாளராக பணிக்கு வந்த பிறகு கூட்டங்களுக்குச் செல்ல நேரமின்றிப் போனது பெரும் வருத்தம்!)

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்புற உரையாற்றும் அய்யாவின் உரைகள், பல நூல்களாக வெளிவந்துள்ளன.

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச்செயலாளராக இருந்து திறம்பட நடத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவரை, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, பதவி நீக்கம் செய்தது. பதவி நீக்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்றார். இருந்தபோதிலும் தொடர்ந்து பணியிலிருக்க மனம் ஒப்பாமல், தனது பதவியிலிருந்து விலகினார்.

தனது 85ஆவது அகவையிலும் சற்றும் தளராத தமிழ்ப் பற்றோடும் உறுதி குலையாத மனதோடும் சோர்வுகளைக் கடந்தும் எங்குங்குமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது அய்யா ஔவை நடராசன் அவர்களின் தமிழாய்ந்த குரல்.

2015, செப்டம்பர்30ஆம்தேதியன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் சார்பில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்குச் சற்றே தாமதமாகச் சென்றேன். மாடியிலிருந்த விழா அரங்கில் அய்யா ஔவை நடராசன் அவர்களின் கணீர் தமிழ்க் குரல். நடையை ஓட்டமாக்கி, மேலே சென்று பார்த்தேன்.
ஒலிபெருக்கி முன்னே அய்யா இல்லை. வேறொருவர் நின்றிருந்தார். அய்யாவின் சாயலில் இருந்தார். அய்யாவின் அழகுத் தமிழ்க் குரலில் பேசினார். “யாரிவர்…?” என்று விசாரித்தேன்.

“இவர் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர். ஔவை ந.அருள். அய்யா ஔவை நடராசனின் இரண்டாவது மகன்” என்றனர். ஒளவை சு.துரைசாமி அவர்களின் இரண்டாம் மகன் அய்யா ஔவை நடராசன். அவரது இரண்டாம் மகன் ஔவை ந.அருள். வாழையடி வாழையாக எம் தாய்மொழி தமிழ் என்றென்றைக்கும் செழித்திருக்கும்.

எங்கள் அய்யா ஔவை நடராசன் அவர்களின் அழகுத் தமிழ் உரைகளும் அய்யாவின் புகழும் இன்தமிழாய் என்றும் இப்புவியில் நிலைத்திருக்கும்..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *