உகரம் – ஏப்ரல் 2019 இதழில் முனைவர் ஔவை நடராசன் அவர்கள் குறித்து கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதிய கட்டுரை
யாருக்கு வரும் இந்தச் சிரிப்பு ?
——++++++++———–+++++++——-
– கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
ஓர் அதிர்ஷ்டசாலியை :
ஓர் அதிர்ஷ்டசாலியைக் கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு கேள்வியை நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். பலபேர் பலவிதமாகப் பதில் சொல்வார்கள். என்னைக் கேட்டால் ஒரு பேச்சாளன் என்ற வகையில் அதற்கான பதிலை நான் வைத்திருக்கிறேன்.
யார் அதிர்ஷ்டசாலி என்றால், எவன் பட்டிமண்டபம் ஒன்றில் கடைசியாகப் பேசுகிறானோ? அவன் அதிர்ஷ்ட சாலி, எவன் பாராட்டு விழா ஒன்றில் முதலாவதாகப் பேசுகிறானோ? அவன் அதிர்ஷ்டசாலி. இதை மறுதலையாக நீங்கள் பார்த்தால், எவன் பட்டிமண்டபம் ஒன்றில் முதலாவதாகப் பேசுகிறானோ? அவன் துருதிர்ஷ்டசாலி. எவன் பாராட்டுவிழா ஒன்றில் கடைசியாகப் பேசுகிறானோர் துருதிர்ஷ்ட சாலி!
ஏனென்றால், பட்டிமண்டபம் ஒன்றில் ஒருவன் முதலாவதாகப் பேசிவிட்டால், பின்னால் வருகிறவர்கள் அவனையே அடி அடி என்று அடிப்பார்கள். பாராட்டு விழாவில் கடைசியாகப் பேசுகிறவர்களுக்கு என்ன ஒரு பிரச்சனை என்றால், பாராட்ட. வேண்டியவரைப் பற்றிப் பேசவேண்டிய விஷயத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் பேசி முடித்தப் பிறகு இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து பேச வேண்டிய ஒரு துருதிர்ஷ்டம் பேச வேண்டியவருக்கு வரும். இன்றைக்கு அந்தத் துருதிர்ஷ்டசாலியாக நான் இருப்பேன் என்றிருந்தேன். அந்தப் பாக்கியத்தைச் சுகி.சிவம் அய்யா அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அவர் என்னை விட அதிர்ஷ்டசாலி!
சங்க நிதி, பதும நிதி :
=================
அறிவு என்பது ஒளிக்கு உவமானமானது. எப்படி அறியாமை என்பது இருளோ? அப்படி அறிவு என்பது ஒளி. ஒரு ஒளி எவ்வளவு தூரத்திற்குத் தெரிகிறதோ?, அந்தளவுக்கு அந்த ஒளிக்குப் பெருமையுண்டு. ஒளவை ஒளியை அருகிலிருந்து பார்த்தவர்கள் எல்லாம் இது வரை பேசினார்கள். இனியும் பேசுவார்கள். ரொம்ப தூரத்தில் இருந்து, அந்த ஒளியைப் பார்த்து நான் பேசுகிறேன் என்றால், அதுதான் அந்த ஒளிக்குப் பெருமை என்பது என் அபிப்பிராயம்.
பேச்சாளர்களுக்குள் ஒரு பெரிய செல்வர் இருப்பார் என்றால், அது ஔவை அய்யாதான். தமிழைப் பொருத்தவரை நிதியை/பெருநிதியாக இரண்டாக வகுத்துக் கொண்டார்கள். ஒன்று சங்கநிதி, மற்றொன்று பதும நிதி.
“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானக தருவரேனும் மங்குவார்; அவர் செல்வம் மதிப்போம் அல் மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!”
“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம்மதிப்போம் – மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!” என்று ஒரு இருக்கிறது.
இந்த இரண்டு நிதியும் பெற்றவர் தமிழறிஞர்களும் ஔவை அய்யா ஒருவர் மட்டும் தான். இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பீர்கள்? நான் அன்றைக்குக் கம்பன் விழாவில் சொன்னதையே சொல்கிறேன். சங்கநிதி, அவர்களுக்குக் குடும்பச் சொத்து. ஒரு நிதிதான் இதுவரை அவர்களின் குடும்பத்தில் இருந்து வந்தது. அய்யா அவர்கள் வந்ததும், பதுமநிதியும் பெற்றுக் கொண்டார்கள்.
பதுமநிதி என்றால் என்னவென்று கேட்டால், பதுமம் என்றால், பத்மம்,; நிதி என்றால் ஸ்ரீ பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற படியால் அவருக்கு, பதும நிதியும் கிடைத்து விட்டது.
யாருக்கு வரும் இந்தச் சிரிப்பு? :
எங்களுடைய அமைச்சர் அய்யா அவர்கள் நடத்துகிற மேடைகளையெல்லாம் நான் பார்ப்பேன். இந்த விழா மேடைக்கு வந்த பிறகு இந்தப் படத்தைப் பார்த்தேன். ஔவை அய்யா அவர்கள் சிரித்தபடி உள்ள படம். இன்றைய கதாநாயகர்கள் கவலைப்படுவார்கள். இவ்வளவு சிரிப்பு இவரின் முகத்தில் உள்ளதைப் பார்த்த போது, அபிராமி பட்டரின் ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. யாருடைய முகத்தில் இவ்வளவு சிரிப்புவரும்? பெரும்பாலும் தமிழறிஞர்களின் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே அரிது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை வறுமையோடு தொடர்பு கொண்டிருக்கும். ஆனால், இவ்வளவு சிரிப்போடு ஔவை அய்யா அவர்கள் இருப்பதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன்.
எப்போது இந்தச் சிரிப்பு வரும் என்றால், அபிராமி பட்டர் சொன்னாரே…..
“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும். தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே”!
இப்படி எல்லாம் பெற்றவருக்கே இந்தச் சிரிப்பு வரும். ஆனால், அபிராமி பட்டர் நுட்பமாகச் சொல்கிறார், இவ்வளவும் எப்படி ஒருவர் பெறுவார் என்றால், அபிராமி கடைக் கண்கள் பட்டால் தான் இத்தனை செல்வமும் வரும் என்கிறார். இந்தப் படத்தைப் பார்த்தேன். அய்யா அவர்கள், சிரித்துக் கொண்டிருக்கிறார். அம்மா அவர்கள் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“நடராஜா!
==========
அய்யா அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் பாராட்டிப் பேசினார்கள். அய்யா அவர்களை முதல் முறை சந்தித்த ஒரு செய்தியையும், அவர்களைப் பற்றிய ஒரு இயல்பையும் கூறி பேச்சை முடிக்கிறேன்.
முதன் முதலிலே பாண்டிச்சேரியில் கம்பன் விழாவில், விழா முடிந்த பிறகு அறிஞர்கள் எல்லாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஓர் ஓரமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் அய்யா கு.ச. ஞானசம்பந்தம் அவர்களும், அய்யா அவர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, புதுவை முதல்வர் பரூக் அவர்களும், அமர்ந்திருக்கிறார்கள். சீதை தீக்குளிப்பு தர்க்கம் வருகிறது. ஆளுக்கொரு செய்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது முதலமைச்சர் பரூக் அவர்கள் இராமன் செய்த தவறான செயல்” என்று கூறினார்கள். அதை அய்யா அவர்கள் இரசித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார் ‘முதலமைச்சர் பரூக் அவர்கள் சொன்னதை அப்படி உள் வாங்கிக் கொண்டு அவரின் பாணியிலேயே “முதலமைச்சர் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்’ என்று கூறினார்.
உடனே, தீடீரென்று, கு.ச. அய்யா அவர்கள், “நடராஜா, முதலமைச்சர்களை ஆமோதிப்பது தான் உனது வேலை” என்றார் நான் உண்மையிலேயே திகைத்துப் போனேன் ஏனென்றால், கற்றவர்கள் கூடியிருந்த நேரம். இப்படி அய்யா அவர்கள் எடுத்தாற்போல் சொல்கிறார்களே, சபையிலே குழப்பம் வரும் போலிருக்கிறதே, ஔவை அய்யா அவர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்தேன். அந்தக் கமெண்ட்டை முதலில் இரசித்தவர் அவர்தான். வாய்விட்டுச் சத்தம் போட்டு “நன்றாகச் சொல்கிறீர்கள்” என்று சிரித்தார். அப்போதுதான் ஒரு கல்விமான் எப்படி ஒரு இரசனையாளராக இருக்கிறார் என்பதை நான் அறிந்து மகிழ்ந்தேன்.
வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? :
=============================
இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்லி முடிக்கிறேன். எங்கள் குருநாதர் சொன்னதை நான் சொல்கிறேன். அய்யா அவர்களுக்கு 84 வயது ஆகிறது. அதற்கு விழா என்று சொல்கிறார்கள். எங்கள் அமைச்சர் அவர்கள் எப்போதும் உண்மைக்குத் தான் விழா எடுப்பார்கள். ஆனால் இப்போது பொய்க்கு விழா எடுக்கிறார் பொய் என்று கேட்டால், நான் சொல்கிறேன். அவருக்கு 84 வயது, என்று கணக்குச் சொல்கிறார்கள், அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
ஓர் ஆணிற்கு வயது போனால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு பெண்ணிற்கு வயது போனால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதை என் குருநாதர் சொல்வார்.
நான் நிறைய இரசிப்பதுண்டு. ஓர் ஆணுக்கு வயது போனதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால், அழகான இளம் பெண்கள் அருகில் வந்து கூச்சமில்லாமல் பேசினால், அவனுக்கு வயது போனது என்று அர்த்தம். இதை நீங்கள் சந்தோஷமாக இரசிக்கிறீர்கள், நான் வயத்தெரிச்சலோடு சொல்கிறேன். ஏனென்றால், அந்த நல்ல காரியம் மேடைக்குப் போனால் எனக்குத் தான் நடக்கிறது.
ஔவை அய்யாவிடம் யாரும் இப்படிப் போய்க் கூச்சமில்லாமல் பேசியதை நான் பார்த்ததேயில்லை. ஆகையால், அவருக்கு வயசானதாக நான் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. ஆனால், சுகி.சிவம் அண்ணாவிற்குப் பக்கத்தில் யாரும் போவதில்லை.
ஒரு பெண்ணுக்கு வயது போனதை எப்படித் தெரிந்து கொள்ளலாம் என்றால், அந்தப் பெண்ணுக்கு நாணம் குறையத் தொடங்கினால், வயது போய் விட்டது என்பதை அறியலாம்.
அறிஞருக்கு வயதாகிவிட்டதை :
==========================
இதையெல்லாம் வைத்துக் கொண்டு நான் ஒரு முடிவு செய்தேன், அறிஞனுக்கு வயதாகி விட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு அறிஞன் என்றைக்கு அறிவு சம்பந்தமான ரோஷத்தை என்றைக்குக் கைவிடுகிறானோ? அன்றைக்கு அவனுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம். இதை எப்படி நான் சொல்லலாம் என்று நினைத்தபோது, ஒளவையார் தான் என் நினைவுக்கு வருகிறார். நான் சங்ககால ஒளவையாரைச் சொல்கிறேன்.
உங்கள் எல்லோருக்கும் தெரிந்தகதை தான். இதை மட்டும் சொல்லி என் உரையை நான் நிறைவு செய்கிறேன். ஔவையார் காட்டு வழியாக வருகிறார். ரொம்ப களைப்பான நேரம்; பசி, தாகம் தாக்குகிறது. முதுமை காரணமாக ஒன்றும் செய்யாமல், ஒரு நாவல் மரத்திற்குக் கீழே அமர்ந்திருக்கிறார். உங்களுக்குத் தெரிந்தகதை தான்.
பசிபோக்க உண்ண உணவு ஏதாவது கிடைக்காதா என்று ஔவையார் நினைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த மரத்தின் மேலிருந்து ஒரு குரல், “பாட்டி, ஏதாவது வேண்டுமா?” என்று. நிமிர்ந்து பார்க்கிறார், ஒரு மாடு மேய்க்கும் பையன் மரத்தின் மீது நிற்கிறான். “பாட்டி, ரொம்ப களைத்து விட்டீர்களா?” என்று அந்தப் பையன் கேட்கிறான். அதற்கு ஔவை, “ஆமாம் களைத்துவிட்டேன்’ என்கிறார். “அப்படியென்றால், நாவல்பழம் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்கிறான். அவர் அமர்ந்திருப்பது நாவல் மரத்திற்குக் கீழே. ஔவையாரும் “சாப்பிடுகிறேன்” என்றார்.
அந்தப் பையன் இப்போது கேட்கிறான், “பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்கிறான். ஔவை திகைத்தார். அவர் என்ன கேட்டிருக்க வேண்டும்? “தம்பி. நாவல் பழத்தையும் சுடுவார்களா?” என்று கேட்டிருக்க வேண்டும். கேட்டிருந்தால், ஔவையார் ஒரு சாதாரண பெண்மணி. ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனிடம் நான் ஒரு கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்பது ஔவையாரின் ஆணவம், திமிர். அது இருக்க வேண்டும். ஒரு ஆடு மேய்ப் பவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால். ஔவை, ஆடு மேய்ப்பவனிடம் படித்தார் என்று வந்துவிடும்.
எனவே, ஒளவையாருக்கு அந்த அறிஞர் என்பதன் அடையாளம் என்ன தெரியுமா? ‘சுட்ட பழம் வேண்டும் அல்லது அப்படி ஒரு பழம் இருக்கிறதா?’ என்று கேட்காமலும் விட இயலவில்லை . நன்கு படித்தவன்; அப்படித்தான் இருப்பான். தன்னை விடத் தாழ்ந்தவனிடத்தில் பணியமாட்டான். ஆனால், அதைத் தெரிந்து கொள்ளாமல், விடமாட்டான்.
ஔவையார் என்ன கேட்டார். அவரின் புத்திசாலித்தனத்தைப் பாருங்கள். அவள் ஒரு யுக்தி செய்கிறாள். இப்போது சுடாத பழம் தெரியும். ஏன் இவனிடத்தில் கேட்க வேண்டும்?. சுட்ட பழம்போடு என்றால், இவன் சுட்ட பழத்தைப் போடுவான். அதைப்பார்த்து அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, ‘சுட்ட பழம் வேண்டும்’ என்கிறாள். ஒளவையாரின் நோக்கம், இவனிடத்தில் கேள்வி கேட்காமலேயே அதைப் பற்றி அவனிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். உடனே, அந்தப் பையன், அந்த நாவல் கிளையை அசைத்தான். பழங்கள் கீழே விழுந்தன. அதை ஒளவை கையில் எடுத்தாள். பழத்தில் இருந்த மண்ணை ஊதினாள். அந்தப் பையன் “என்ன பாட்டி, பழம் சுடுகிறதா? என்றான்.
உடனே, ஔவையார் துடித்துப் போகிறாள். ‘எத்தனை சபையிலே எத்தனை மனிதர்களைக் கேள்வி கேட்டு, பதில் சொல்ல முடியாமல் அவர்கள் தவித்த போது, அவர்களை வெளியில் அனுப்பிய நான், இந்த ஆடு மேய்க்கும் பையனிடம் இப்படி இந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமல் மாட்டிக் கொண்டேனே?’ என்று தவித்தார்.
==============
நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒன்று நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லியிருக்க மாட்டோம். அல்லது நாம் இப்படி ஒரு கேள்வி கேட்டு அந்தப் பையன் மாட்டிக் கொண்டது போல் கதையை மாற்றி விட்டிருப்போம். ஆனால், ஔவையார் நேர்மையான கல்விமான் என்பதைக் காட்டினார்.
“கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்றேன்
ஈரிரவும்துஞ்சாதென்கண்!”
என்று, தான் தோற்றதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். அவர் ரோஷம் இல்லாத கிழவி. அப்படிப் சொல்லிவிட்டு, கடைசி வரியில் சொல்கிறார்…..
“ஈரிரவும் துஞ்சாதென்கண்”:
=======================
இரண்டு நாட்களுக்குத் தனக்குத் தூக்கமில்லை என்கிறாரே. அந்த ஔவை கிழவியல்ல. இதை ஒரு வரைவாக வைத்துக் கொண்டு, இந்த ஒளவையைப் பார்க்கிறேன்.
‘நான் தோற்றுப்போனேன்!’:
======================
சென்னை கம்பன் விழாவில், இரண்டு சிறு சம்பவங்கள். அய்யா தலைமையில் சென்ற ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் நான் பேசுகிறேன். எனக்கொரு ஆசை, அவர்களிடம் ஒரு பாராட்டை நான் பெற்றிட வேண்டும் அதனால், மேடையில் வழக்கமாகச் சொல்லப்படாத ஒரு பாடலைத் தேடி எடுத்துக் கொண்டு மனனம் செய்து கொண்டு வந்தேன். மாதவி வருகிற காட்சியை நான் விவரிக்கும் போது, அய்யா ரொம்ப இரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஆனந்தமோ ஆனந்தம். நான் சொல்லிதான் இந்தப் பாட்டை இவர் தெரிந்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு ஒரு மகிழ்ச்சி.
நான் பேசி உட்கார்ந்தவுடனே அதை வைத்தே ஓர் அடி அடித்தார். அதாவது, மலைக்கு மூன்று பெயருண்டு. மலை, குன்று, சிலம்பு. ரொம்ப பெரிதாக இருந்தால் மலை, நடுத்தரமாக இருந்தால் குன்று, அதை விடச் சிறியது சிலம்பு. இதைச் சொல்லியிருந்தால் கூட அவரின் அறிவைக் கண்டு நான் மயங்கியிருக்க மாட்டேன். இதற்குச் சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்தைச் சொல்கிறார். கோவலன் வந்து கண்ணகியிடம் சொல்கிறான். ‘அனைத்துச் செல்வத்தையும் நான் தொலைத்து விட்டேன்’ என்று அவன் சொல்ல ‘சிலம்பு உள; கொண்டு செல்”, என்றாள் கண்ணகி.
அவன் பெரும் செல்வத்தைத் தொலைத்தான். சிறு செ. உள்ளது என்று கண்ணகி சிலம்பைச் சொன்னாள் என்று, தலை அய்யா அவர்கள் சொன்ன போது, இப்படி ஓர் அறிவிருக்க இந்த அறிவு யாரிடமும் தோற்காத அறிவு என்று நினைந்து, வியர் இவரிடம் முதுமை வரவே வராது என்று முடிவு செய்தேன்.
“இதுவரை இந்தக் கை, இப்படி இருந்தது இல்லை !”:
==========================================
சென்ற ஆண்டு, எங்கள் இலங்கை கம்பன் கழகத்திலே அவருக்குக் ‘கம்பன் புகழ் விருது வழங்கினோம். எங்கள் பணத்திலே ஒரு இலட்சம் ரூபாய் பொன் முடிப்பாகக் கொடுத்தபோது, அவர் சொன்ன வார்த்தை, “இது வரை இந்தக் கை, இப்படித் தாழ்வு ஆக இருந்ததில்லையப்பா. இனியும் அப்படி இருக்க வேண்டாம். இந்தா, உனக்கே அந்த ரூபாய்” என்று, ஒரு இலட்சம் ரூபாயையும் கம்பன் கழகத்திற்கே தந்து விட்டுப் போனார்.
எப்போதும் ஔவை அய்யாவிற்கு வயது போகாது. அந்தப் பெருமையுடைய ஒளவை அய்யா அவர்கள், நூறாண்டுகள் வாழ வேண்டும். அவர்களின் வாழ்வு இதேபோல, அவர் இப்படியே சிரித்தபடி இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அந்தப் பெருமனிதனைப் பாராட்ட எனக்கு வாய்ப்பளித்தவர்கள் அத்தனை பேர் திருவடிகளையும் வணங்கி விடை பெறுகிறேன். வணக்கம்..

Add a Comment